சைதாப்பேட்டை அரசு மருத்துவமனையில் ரூ.1.15 கோடியில் காத்திருப்போர் கூடம் – மா.சுப்பிரமணியன் திறந்து வைத்தார்

சென்னை,

சென்னை சைதாப்பேட்டை அரசு மருத்துவமனையில் ரூ.1.15 கோடி செலவில் மருத்துவ பயனாளிகளை கவனித்துக் கொள்பவர்களுக்கான காத்திருப்போர் கூடத்தை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் திறந்து வைத்தார். இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது;-

“மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று (10.03.2026) சென்னை சைதாப்பேட்டை அரசு மருத்துவமனையில், சட்டமன்ற உறுப்பினர் தொகுதி வளர்ச்சி திட்ட நிதி ரூ.1.15 கோடி மதிப்பீட்டில், மருத்துவ பயனாளிகளை கவனித்து கொள்பவர்களுக்கான காத்திருப்பு கூடம் திறந்து வைத்து, முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு திட்ட நிதியின் மூலம் இயன்முறை பயிற்றுனர் நியமிக்கப்பட்டு ரூ.1.50 லட்சம் மதிப்பீட்டில் புதிய இயன்முறை கருவிகள் தொடங்கி வைத்து, யோகா மற்றும் இயற்கை மருத்துவ பிரிவுக்கு 1 மருத்துவர் மற்றும் 1 மருத்துவ உதவியாளருடன் கூடிய சேவை தொடங்கி வைக்கப்பட்டது. இதன் பிறகு அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:-

சைதாப்பேட்டை அரசு மருத்துவமனை என்பது நூற்றாண்டை கடந்த பழமை வாய்ந்த மருத்துவமனை. இந்த மருத்துவமனையில் சோழிங்கநல்லூர், புழுதிவாக்கம், மடிப்பாக்கம் போன்ற பகுதிகளிலிருந்து இம்மருத்துவமனைக்கு வந்து பொதுமக்கள் சிகிச்சை பெற்று செல்கின்றனர். இம்மருத்துவமனை மிகப் பெரிய கட்டமைப்பை பெறாத நிலை என்பது இருந்தது.

தமிழ்நாடு முதல்-அமைச்சரின் வழிகாட்டுதலோடு, இந்த அரசுப் பொறுப்பேற்றதற்கு பிறகு ரூ.34.90 கோடி மதிப்பீட்டில் 6 தளங்கள் கொண்ட மருத்துவக் கட்டமைப்பு கட்டி முடிக்கப்பட்டு மாண்புமிகு தமிழ்நாடு துணை முதல்-அமைச்சரால் கடந்த செப்டம்பர் திங்கள் 8 ஆம் தேதி திறந்து வைக்கப்பட்டது. 110 படுக்கைகள் கொண்ட இம்மருத்துவமனையில் தினமும் 1500 பேர் வரை மருத்துவ புறபயனாளர்களாக பயன் பெற்று வருகிறார்கள்.

இந்த மருத்துவமனையில் ஆண்டொன்றிற்கு 25,000 எக்ஸ்ரேக்கள் எடுக்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு நாளும் 60-க்கும் மேற்பட்ட உள் மருத்துவ பயனாளர்கள் பயன்பெற்று வருகிறார்கள். தமிழ்நாடு முதல்-அமைச்சரின் வழிகாட்டுதலோடு இம்மருத்துவமனையில் 14 புதிய டயாலிசிஸ் கருவிகள் சேவை தொடங்கி வைக்கப்பட்டது. மேலும் ரூ.2.50 கோடி செலவில் ஆக்ஜிஜன் ஜெனரேட்டர் கருவி, ஆட்டோ அனலைசர் கருவி மற்றும் அனலைசர் கருவி, கல்லீரல் மற்றும் சிறுநீரக நோய் கண்டறியும் பரிசோதனை மையம் ஆகியவற்றை தமிழ்நாடு துணை முதல்-அமைச்சரால் ஜுலை 2022 அன்று தொடங்கி வைக்கப்பட்டது.

ரூ.2.50 கோடி செலவில் 14 டயாலிசிஸ் கருவிகள் 19.05.2022 அன்று திறந்து வைக்கப்பட்டது. மேலும் ரூ.1.20 கோடி செலவில் வென்டிலேட்டர் மற்றும் காது, மூக்கு, தொண்டை அறுவை சிகிச்சை உபகரணங்கள் 18.08.2024 அன்று தொடங்கி வைக்கப்பட்டது.

அந்த வகையில் இன்று ரூ.1.15 கோடி செலவில் (சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாடு நிதி), சைதாப்பேட்டை அரசு மருத்துவமனையில், 2,152 சதுரடி பரப்பளவில் மருத்துவ பயனாளிகளை கவனித்துக் கொள்பவர்களுக்கான காத்திருப்போர் கூடம் திறந்து வைக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது. மேலும் யோகா மற்றும் இயற்கை பிரிவுக்கு 1 மருத்துவர் மற்றும் 1 மருத்துவ உதவியாளருடன் கூடிய சிகிச்சை பிரிவு தொடங்கி வைக்கப்பட்டது. மேலும், முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு திட்ட நிதியின் மூலம் இயன்முறை பயிற்றுனர் நியமிக்கப்பட்டு ரூ.1.50 இலட்சம் மதிப்பீட்டில் புதிய இயன்முறை கருவிகள் தொடங்கி வைக்கப்பட்டது.

ரூ.447 கோடி செலவில், 6 தளங்கள், 6 இலட்சம் சதுரடி பரப்பளவில், 1000 படுக்கைகளுடன், சென்னை, கிண்டி, கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை தொடங்கி வைக்கப்பட்டு, நவீன 1.5 டெஸ்லா MRI ஸ்கேன் கருவி, Double Balloon Endoscopy கருவி, நவீன இருதய கேத்லேப், அதிநவீன மருத்துவ உபகரணங்களுடன் கூடிய 10 அறுவை அரங்குகள், மற்றும் நவீன 3D மூறை அறுவை சிகிச்சை நுண்ணோக்கி, 2 அதிநவீன 3D Flat Panel DSA HIPEC கருவி மற்றும் அதிநவீன Bi-Plane மூளை, இரத்தநாள கேத்லேப் ஆய்வகம் திறந்து வைக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டில் இருந்து வருகிறது.

ரூ.151.17 கோடி மதிப்பீட்டில் 3,76,358 சதுரடி பரப்பளவில் (8.64 ஏக்கர்), 200 படுக்கை வசதிகளுடன் தேசிய முதியோர் மருத்துவமனை தொடங்கி வைக்கப்பட்டு, யோகா மற்றும் இயற்கை மருத்துவ சேவை, 1.5 டெஸ்லா MRI ஸ்கேன் போன்ற உயர் மருத்துவ கருவிகளுடன் இயங்கி வருகிறது.

ரூ.417.07 கோடி செலவில் சென்னை, கிண்டி, கிங் இன்ஸ்டியூட் வளாகத்தில், 750 படுக்கைகள், தரை மற்றும் 6 தளங்கள், 6.50 ஏக்கர் பரப்பளவில், 19 துறைகள் கொண்ட குழந்தை மருத்துவ முதுகலை அறிவியல் மற்றும் ஆராய்ச்சி நிறுவன கட்டிடம் கட்ட அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது.

இது தொடர்பாக இன்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் தலைமையில் அனைத்து மருத்துவக்கல்லூரி முதல்வர்கள், இணை இயக்குநர்கள், துணை இயக்குநர்கள் அலுவலர்களுடான கூட்டத்தை நடத்தி எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட்டால் முன்னெச்சரிக்கையாக கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

இந்த வாரத்திற்கு LPG தட்டுப்பாடு பற்றிய பிரச்சினை இல்லை. கடுமையான தட்டுப்பாடு வரும்பட்சத்தில் இதற்கு மாற்று ஏற்பாடாக எலக்ட்ரிகல் ஸ்டவ், கட்டை அடுப்புகள் போன்றவற்றை தயார் நிலையில் வைக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதுவும் கூட மருத்துவமனைகளில் எந்த விதமான மருத்துவ பயனாளர்கள் பாதிக்கப்பட்டு விடக்கூடாது என்கின்ற காரணத்தினால் பால், பழம், ரொட்டி போன்ற உணவு பொருட்கள் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டிருக்கிறது.

எந்த இடத்திலும் மருத்துவ பயனாளிகள் பாதிக்கப்பட்டு விடக்கூடாது என்பதில் இந்த அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக செய்து வருகிறது.”

இவ்வாறு அவர் தெரிவித்தார். இந்நிகழ்வில் மருத்துவம் மற்றும் ஊரகநலப்பணிகள் கூடுதல் இயக்குநர் மரு.ராஜ்மோகன், பெருநகர சென்னை மாநகராட்சி மண்டலக்குழுத் தலைவர்கள் கிருஷ்ணமூர்த்தி, துரைராஜ், இணை இயக்குநர் மரு.மலர்விழி, தலைமை மருத்துவர் மரு.தணிகாசலம், மாமன்ற உறுப்பினர்கள் வழக்கறிஞர் ஸ்ரீதர், மோகன்ராஜ் மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.”

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source link