சௌமியா அன்புமணியின் சொத்து மதிப்பு வெளியானது… தருமபுரி வேட்பாளராக களமிறங்கும் பாமக வேட்பாளர் – sowmiya anbumani asset value revealed pmk candidate enters the fray in dharmapuri

2026 சட்டமன்றத் தேர்தலில் தருமபுரியில் பாமக சார்பில் போட்டியிடும் அன்புமணியின் மனைவி சௌமியாவின் சொத்து மதிப்பு வெளியானது.

Sowmiya Anbumani Net Worth(புகைப்படங்கள்Samayam Tamil)
தருமபுரி தொகுதியில் போட்டியிடும் பாமக வேட்பாளர் சௌமியா அன்புமணியின் சொத்து மதிப்பு விவரங்கள் வெளியாகியுள்ளன. அவர் தாக்கல் செய்த வேட்புமனுவில், அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் சேர்த்து மொத்தம் ரூ.65.94 கோடி மதிப்புள்ள சொத்துகள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் அதிமுக தலைமையிலான என்டிஏ கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாமக, 18 தொகுதிகளில் போட்டியிடுகிறது. இதில், பாமக தலைவர் அன்புமணியின் மனைவி சௌமியா அன்புமணி தருமபுரி தொகுதியில் வேட்பாளராக களமிறங்கியுள்ளார். வேட்புமனு தாக்கலுக்கான இறுதி நாளான இன்று அவர் தனது மனுவை தாக்கல் செய்தார். அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தருமபுரிக்கு நான் எப்போது வந்தாலும் மக்களின் அன்பை உணர்கிறேன்; இப்போது இன்னும் அதிக வரவேற்பை காண்கிறேன் என தெரிவித்தார்.

விசிக vs பாமக நேருக்கு நேர் போட்டி!

சௌமியா அன்புமணி சொத்து மதிப்பு

இந்நிலையில், அவரது சொத்து விவரங்கள் பிரமாணப் பத்திரம் மூலம் வெளியாகியுள்ளன. அதன்படி, அசையும் சொத்துக்கள் ரூ.17 கோடி மதிப்பிலும், அசையா சொத்துக்கள் ரூ.48 கோடி மதிப்பிலும் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், 2,927 கிராம் தங்கம் வைத்திருப்பதாகவும், அதன் மதிப்பு ரூ.4.26 கோடி என்றும், 151.51 கேரட் வைரம் ரூ.1.64 கோடி மதிப்புடையதாகவும் தெரிவித்துள்ளார். கூடுதலாக, கையில் ரூ.2,25,000 ரொக்கம் வைத்திருப்பதாகவும் அவர் தனது வேட்புமனுவில் குறிப்பிட்டுள்ளார்.

தருமபுரி வேட்பாளர் சௌமியா

அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் (NDA) இடம்பெற்றுள்ள பாட்டாளி மக்கள் கட்சி சார்பில், தருமபுரி சட்டமன்றத் தொகுதியில் அக்கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸின் மனைவி சௌமியா அன்புமணி களம் இறங்கியுள்ளார். பாமகவின் பலமான கோட்டையாகக் கருதப்படும் தருமபுரியில், சௌமியா அன்புமணியின் வருகை அக்கட்சித் தொண்டர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, அப்பகுதியின் நீண்டகாலப் பிரச்சனையான குடிநீர் மற்றும் விவசாய மேம்பாடு குறித்த வாக்குறுதிகளை அவர் முன்வைக்கிறார்.

மும்முனைப் போட்டியில் தருமபுரி

திமுக கூட்டணி மற்றும் விஜய்யின் தவெக வேட்பாளர்களுடன் சௌமியா அன்புமணி மும்முனைப் போட்டியில் ஈடுபட்டுள்ளார். அதிமுக மற்றும் பாஜகவின் நேரடி ஆதரவு அவருக்குக் கூடுதல் பலமாகப் பார்க்கப்படுகிறது.

அதிமுக – பாமக கூட்டணி

2026 தமிழகச் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, அதிமுக (AIADMK) – பாமக (PMK) இடையிலான கூட்டணி, தமிழக அரசியல் களத்தில் ஒரு மிக முக்கியமான திருப்பமாகப் பார்க்கப்படுகிறது. எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக கூட்டணியில் பாஜகவோடு இணைந்து பாட்டாளி மக்கள் கட்சியும் களம் காண்கிறது

இந்தக் கூட்டணியின் முக்கிய அம்சங்கள்

அதிமுகவின் கொங்கு மண்டல செல்வாக்கும், பாமகவின் வட மாவட்ட வாக்கு வங்கியும் இணைவது இந்தக் கூட்டணிக்கு ஒரு பெரிய ப்ளஸ் பாயிண்ட் ஆகும். தர்மபுரி தொகுதியில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸின் மனைவி சௌமியா அன்புமணி களம் இறங்கியிருப்பது இந்தக் கூட்டணியின் நட்சத்திர நகர்வாகப் பார்க்கப்படுகிறது. அதிமுக மற்றும் பாஜகவின் நட்சத்திரப் பேச்சாளர்கள் பாமக வேட்பாளர்களுக்கு ஆதரவாகவும், பாமகவினர் கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாகவும் தீவிரமாக வாக்கு சேகரித்து வருகின்றனர். தரும்புரி தொகுதியில் சௌமியா அன்புமணி தீவிரமாக பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.