சென்னை,
நடிகரும், த.வெ.க., தலைவருமான விஜய், ‘ஜன நாயகன்’ என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த திரைப்படத்தை கே.வி.என். புரொடக்ஷன் நிறுவனம் ரூ.500 கோடி பட்ஜெட்டில் பிரமாண்டமாக தயாரித்துள்ளது. பூஜா ஹெக்டே, பாபி தியோல், பிரியாமணி, மமிதா பைஜு உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார்.
இந்த திரைப்படத்துக்கு தணிக்கை சான்று கேட்டு விண்ணப்பிக்கப்பட்டது. படத்தை பார்த்த தணிக்கை வாரிய குழுவினர், மதம் மற்றும் பாதுகாப்பு படை தொடர்பான காட்சிகள் இடம் பெற்றுள்ளதால், இந்த படத்தை மறுஆய்வு குழு பரிசீலனைக்கு பரிந்துரை செய்தனர். நீண்ட போராட்டத்திற்கு பின் ‘ஜன நாயகன்’ படத்தை மறுதணிக்கை செய்ய தணிக்கை வாரியத்திற்கு படத் தயாரிப்பு நிறுவனம் படத்தை அனுப்பியது. தமிழ்நாடு சட்டசபை தேர்தல் முடிவடைந்தவுடன் மே இரண்டாவது வாரத்தில் ஜன நாயகன் படத்தை வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டிருந்தனர்.
இதற்கிடையில், ஜன நாயகன் முழு படமும் நேற்று முன்தினம் மாலை இணையத்தில் வெளியானது. இதனால் படத் தயாரிப்பு நிறுவனமும், படக்குழுவினரும், ரசிகர்களும் பேரதிர்ச்சிக்கு உள்ளாகி உள்ளனர். ‘ஜன நாயகன்’ படம் இணையத்தில் வெளியானதற்கு நடிகர் ரஜினிகாந்த், கமல்ஹாசன், சிரஞ்சீவி உள்ளிட்ட பல திரைபிரபலங்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். படக்காட்சிகளை யாரும் சமூக வலைதளங்களில் பகிர வேண்டாம் என படக்குழு கேட்டுக்கொண்டுள்ளது.
இந்த நிலையில், ஜனநாயகன் திரைப்படம் ,இணையத்தில் கசிந்ததற்கு தமிழ்த்திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் கண்டனம் தெரிவித்து அறிவிக்கை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது,
தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவர் திரு.ஜி.கே.எம்.தமிழ்குமரன் மற்றும் நிர்வாகிகள் இணைந்து அறிக்கை வெளியிட்டுள்ளார்கள். அதில், கேவிஎன் நிறுவனத்தின் சார்பில் மிகப்பெரிய பட்ஜெட்ல் உருவான நடிகர் விஜய் அவர்கள் நடித்த “ஜனநாயகள்” முழுத்திரைப்படம் இணையத்தில் வெளியானது என்ற செய்தி தமிழ்த் திரையுலகை அதிர்ச்சியில் தள்ளியுள்ளது. இது வன்மையாக கண்டிக்கூடிய செயலாகும். மேலும், ரூ.500-கோடி முதலீடு செய்துள்ள இந்த திரைப்படத்தின் வருவாய் முற்றிலும் பாதிப்புக்குள்ளாகி மிகப்பெரிய பொருளாதார இழப்பு ஏற்பட்டு தயாரிப்பாளர் இக்கட்டான சூழ்நிலையில் தள்ளப்பட்டுள்ளார். எந்தவித அக்கறையும் இல்லாத சிலபேர் செய்த செயலால் திரையுலகமே ஸ்தம்பிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.
தமிழ்த் திரையுலகம் மட்டுமின்றி இந்திய சினிமாத்துறையை காப்பாற்றும் நல்லெண்ணத்துடன், இந்திய தகவல் ஒளிபரப்பு அமைச்சகம் இந்த விஷயத்தில் தானாக முன்வந்து, தமிழக அரசும், காவல்துறையின் உட்பிரிவான சைபர் பிரிவும் இணைந்து, மேற்படி இந்த செயலை செய்த நபர்கள் மீது மிகவும் கடுமையாக நடவடிக்கை எடுத்து, இதுபோன்ற செயலில் ஈடுபடுவோர்களுக்கு ஒரு எடுத்துக்காட்டாக இருக்க வேண்டும் என்று ஒட்டுமொத்த தமிழ்த் திரையுலகம் சார்பாக தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் சார்பாக கேட்டுக் கொள்கிறோம்.
மேலும், ஜனநாயகன் திரைப்படத்தின் தயாரிப்பாளர், மற்றும் படக்குழுவினருக்கு என்றும் தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் உறுதுணையாக இருக்கும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம். இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
