ஜனநாயகன் பட விவகாரம்: சிபிஎப்சி பரபரப்பு விளக்கம்

தவெக தலைவர் விஜய் நடிப்பில், ஹெச்.வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘ஜனநாயகன்’. பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ, பிரியாமணி உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படம், இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 9-ம் தேதி வெளியாகத் திட்டமிடப்பட்டது. விஜய்யின் கடைசிப் படம் என்பதால் படத்திற்குப் பெரும் எதிர்பார்ப்பு நிலவியது.

எனினும், தணிக்கை வாரிய சான்றிதழ் கிடைப்பதில் ஏற்பட்ட சிக்கலால் இந்த படம் வெளிவருவதில் தாமதம் ஏற்பட்டது. தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளதால், விஜய்யின் படம் தேர்தலுக்குப் பிறகுதான் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. இத்தகைய சூழலில், சில நாட்களுக்கு முன்பு படத்தின் சில காட்சிகள் மற்றும் பாடல்கள் இணையத்தில் வெளியாகிப் படக்குழுவை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. அதன் தொடர்ச்சியாக, தற்போது முழுத் திரைப்படமுமே இணையத்தில் கசிந்திருப்பது தவெக தொண்டர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில், மத்திய தணிக்கை வாரியம் ஜனநாயகன் படம் கசிந்த விவகாரம் தொடர்பாக பரபரப்பு விளக்கம் ஒன்றை அளித்துள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது; “ஜன நாயகன்” படம் மத்திய திரைப்பட சான்றிதழ் வாரியம் மூலம் கசிந்துவிட்டதாக வெளியாகும் செய்திகள் அடிப்படையற்றதும் தவறானவையும் ஆகும்.திரைப்பட சான்றிதழுக்காக சமர்ப்பிக்கப்படும் அனைத்து படங்களுக்கும் பாதுகாப்பான KDM முறையை சிபிஎப்சி பின்பற்றுகிறது.

படத்திற்கான அணுகல் கடவுச்சொல் பாதுகாப்புடன் இருக்கும்; மேலும் கேடிஎம் முழுமையாக தயாரிப்பாளர்/இயக்குநரிடமே இருக்கும். சரியான கேடிஎம் இல்லாமல் அந்தப் படத்தை அணுகவோ அல்லது பார்க்கவோ முடியாது. ஜன நாயகன் திரைப்படத்தின் டிஜிட்டல் சினிமா பேக்கேஜ் மார்ச் 17 அன்று மும்பையில் விண்ணப்பதாரரிடம் உரிய ஒப்புதல் பெற்று ஒப்படைக்கப்பட்டது; அதன் பின்னர் அது அவர்களிடமே உள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source link