ஜனநாயகன் லீக்: அமித்ஷா திட்டமிட்டு செய்த சதி – மாணிக்கம் தாகூர் எம்.பி.

சென்னை,

தவெக தலைவரும், நடிகருமான விஜய் இயக்குநர் எச்.வினோத் இயக்கத்தில் நடித்துள்ள ஜனநாயகன் திரைப்படத்துக்கு சென்சார் சான்றிதழ் கிடைக்காததால், படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டது. இந்த நிலையில் ஜனநாயகன் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாவதற்கு முன்னதாக நேற்று இணையத்தில் சட்டவிரோதமாக மர்ம நபர்களால் வெளியிடப்பட்டது. 3 மணிநேரம் கொண்ட முழு படமும் இணையத்தில் வெளியானதால், படத் தயாரிப்பு நிறுவனமும், படக்குழுவினரும், ரசிகர்களும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

‘ஜனநாயகன்’ திரைப்படம் இணையத்தில் வெளியானதற்கு திரைப்பிரபலங்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் ஜனநாயகன் திரைப்படம் இணையத்தில் லீக்கானது அமித்ஷா திட்டமிட்டு செய்த சதி என்று மாணிக்கம் தாகூர் எம்.பி. தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் அளித்த பேட்டியில் தெரிவித்ததாவது:-

ஜனநாயகன் லீக் இந்திய சினிமாத்துறையை ஆட்டி வைக்கின்ற ஒரு செயல். ஒரு படம் எடுத்த பின்னர், அந்த படத்தின் காப்பி தயாரிப்பாளரிடம் இருக்கும். தயாரிப்பாளரை தவிர்த்து நடிகரிடமோ, நடிகையிடமோ இருக்காது.

சென்சார் போர்டில் போட்டு காட்டுவதற்காக தயாரிப்பாளரிடம் இருந்து டெக்னீசியன்கள் மூலம் கொண்டு போய் காட்டுவார்கள். சென்சார் போர்டில் காட்டப்படும்போது, அதை காப்பி செய்து வைத்திருக்கலாம். இந்த இரண்டு இடங்களையும் தவிர்த்து வேறு எங்கேயும் இருக்காது.

சென்சார் போர்டு யார் கட்டுப்பாட்டில் இருக்கு? மத்திய அரசு கட்டுப்பாட்டில் இருக்கு. படம் எடுத்த முதலாளி லீக் செய்யப் போவது கிடையாது. சென்சார் போர்டு யார் கையில் இருக்கு? மத்திய அரசு கையில் இருக்கிறது. மத்திய அரசு யார் கையில் இருக்கு. அமித்ஷா கையில் இருக்கு.

அமித்ஷாவை பொறுத்தமட்டில், இந்தியாவின் திரைத்துறையை மிரட்டுவதற்காகவும், திரைத்துறையில் இருந்து எந்த நடிகர்களும், எந்த தயாரிப்பாளரும் அவர்களுக்கு எதிரான, அவர்களுடைய சித்தாந்தத்திற்கு எதிரான எந்தவொரு நிலையும் எடுக்கக் கூடாது என்பதற்காகவும் அமித்ஷா திட்டம் போட்டு செய்த சதிதான் இது. இதில் அமித்ஷா ஈடுபட்டுள்ளார். அமித்ஷாவின் நேரடி கட்டுபாட்டில் இதை செய்துள்ளனர். இதை செய்தது இந்திய சினிமாத்துறை மிரட்டுவதற்காக. இவ்வாறு அவர் கூறினார்.

Source link