தஞ்சாவூர்,
விஜய்யின் ஜனநாயகன் படம் கடந்த பொங்கல் பண்டிகைக்கு முன்பாக ரிலீஸ் ஆக இருந்தது. ஆனால் தணிக்கை சான்று கிடைக்காததால் படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால், தேர்தலுக்கு முன்பாக படம் வெளியாகுமா? என்பது கேள்விக்குறியாகியுள்ளது.
ஜனநாயகன் பட பிரச்சினையின் போது அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் குரல் கொடுத்த நிலையில், விஜய் தனது பட பிரச்சினை தொடர்பாக கருத்து எதுவும் கூறாமல் இருந்தார். விஜய் தனது சொந்த பட பிரச்சினைக்கே குரல் கொடுக்கவில்லை என்று விமர்சனங்கள் எழுந்த நிலையில், இன்று தஞ்சை கூட்டத்தில் முதல் முறையாக விஜய் ஜனநாயகன் பட விவகாரம் குறித்து பேசினார்.
விஜய் இது தொடர்பாக பேசும் போது, கரூர் முதல் ஜனநாயகன் படம் ரிலீஸ் வரைக்கும் இப்படித்தான் நடந்தது. ஜனநாயகன் ரிலீஸ் விவகாரத்தில் நிறைய பேர் குரல் கொடுத்தார்கள். முக்கியமாக நம் முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்களும் பூசி மெழுகி, பட்டும் படாமல் குரல் கொடுத்தார்கள். எப்படி இருந்தாலும் குரல் கொடுத்த அவர்களுக்கும் மற்ற அனைவருக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்” என்று கூறினார்.
ஜனநாயகன் படம் சென்சார் சர்ச்சையில் சிக்கிய போது முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில் கூறியிருந்ததாவது: சிபிஐ, அமலாக்கத்துறை, வருமான வரித்துறை வரிசையில் சென்சார் போர்டும் ஒன்றிய பா.ஜ.க. அரசின் புதிய ஆயுதமாக மாறியுள்ளது. கடுமையான கண்டனங்கள்” என்று பதிவிட்டு இருந்தார்.
