கொல்கத்தா
மேற்கு வங்காளத்தின் கொல்கத்தா நகரில் இன்று நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பிரதமர் மோடி கலந்து கொண்டு, ரூ.18,689 கோடி மதிப்பிலான முடிவுற்ற வளர்ச்சி பணிகளை துவக்கி வைத்தும், வளர்ச்சி பணிகள் துவக்கத்திற்கான அடிக்கல்லையும் நாட்டினார்.
இதன்பின்னர் அவர் கூட்டத்தினரின் முன் உரையாற்றினார். அவர் பேசும்போது, ஜனாதிபதி திரவுபதி முர்முவை அவமதித்து அனைத்து வகையான வரம்புகளையும் மீறியது மட்டுமின்றி, இந்தியாவின் பழங்குடியின மக்களையும், இந்த நாட்டின் குடிமக்களையும் மற்றும் அரசியலமைப்பையும் கூட திரிணாமுல் காங்கிரஸ் கட்சியானது, அவமதித்து விட்டது என கூறினார்.
ஜனாதிபதி முர்மு வந்தபோது, மாநில அரசு அந்த நிகழ்ச்சியை தவறாக கையாண்டது என்றார். மேற்கு வங்காளத்தில் பழங்குடியினர் தொடர்பான சர்வதேச சந்தல் மாநாடு சமீபத்தில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக ஜனாதிபதி திரவுபதி முர்மு கலந்து கொண்டார். எனினும், ஆளும் திரிணாமுல் காங்கிரசை சேர்ந்த முதல்-மந்திரி மம்தா பானர்ஜி, அவருடைய அரசிலுள்ள மந்திரிகளும் கூட ஜனாதிபதியை வரவேற்பதற்காக நேரில் செல்லவில்லை.
இதேபோன்று மாநாடு முதலில் நடைபெற இருந்த பிதான் நகர் பகுதிக்கு பதிலாக கொசாய்பூருக்கு மாற்றப்பட்டது. அதில் குறைவான அளவுக்கே பார்வையாளர்கள் வந்திருந்தனர்.
இதன்பின்னர், அந்த மாநாட்டில் ஜனாதிபதி திரவுபதி முர்மு கலந்து கொண்டு பேசும்போது, தனக்கு அவமதிப்பு ஏற்படுத்தும் வகையில் மம்தா பானர்ஜி நடந்து கொண்டார் என நேரிடையாக குறிப்பிடாமல் முர்மு வேதனை வெளியிட்டார். இதேபோன்று, முர்முவுக்காக ஏற்பாடு செய்யப்பட்ட கழிவறையில் தண்ணீர் இல்லை என்றும் சாலையில் குப்பைகள் வீசப்பட்டு கிடந்தன என்றும் குற்றச்சாட்டு எழுந்தது.
இதனை குறிப்பிட்டும், முர்முவின் சில வீடியோக்களை வெளியிட்டும் அப்போது பேசிய பிரதமர் மோடி, இது வெட்கக்கேடானது மற்றும் முன்னெப்போதும் இல்லாதது என்றும் கூறி ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை கடுமையாக சாடினார்.
ஜனாதிபதி திரவுபதி முர்முவின் நிகழ்ச்சியில் நாங்கள் எந்த விதிமீறலிலும் ஈடுபடவில்லை என்றும், ஜனாதிபதி நிகழ்ச்சியின் விவரங்கள் பற்றி கூட எந்த விசயமும் மாநில அரசுக்கு தெரியாது என கூறியதுடன், குப்பைகளை அகற்ற வேண்டியதற்கும், மகளிர் கழிவறையில் தண்ணீர் இல்லாததற்கும் தனியார் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களும், ஜனாதிபதிக்கு அந்த இடம் வழங்கிய இந்திய விமான கழகமும்தான் பொறுப்பு ஏற்க வேண்டும். நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த நிர்வாகத்தினரே இதற்கு பொறுப்பு என மம்தா பானர்ஜி பதிலாக கூறினார்.
எஸ்.ஐ.ஆர். பணியின்போது வாக்காளர்கள் நீக்கம் தொடர்பான குற்றச்சாட்டுகளை கூறி மேற்கு வங்காளத்தில், மம்தா பானர்ஜி தொடர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். இதனால், அதனை பாதியில் விட்டு விட்டு, ஜனாதிபதியை வரவேற்க எப்படி செல்ல முடியும்? என்றும் அவர் கேட்டார்.
