4 நிமிடங்களுக்கு முன்னர்
வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்
நடிகர் விஜயின் ஜன நாயகன் திரைப்படத்தின் சில காட்சிகள் இணையத்தில் கசிந்துள்ளதாக படக்குழு புகார் கூறியுள்ளது.
இந்த காட்சிகளை சேமித்தாலோ அல்லது பகிர்ந்தாலோ நடவடிக்கை எடுக்கப்படும் என தயாரிப்பு நிறுவனம் வழக்கறிஞர் நோட்டீஸ் மூலம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
திரைப்படம் இணையத்தில் வெளியானது குறித்து பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், “விஜய்க்கு அழுத்தம் கொடுக்கவே” திரைப்படம் இணையத்தில் வெளியிடப்பட்டதாக த.வெ.க.வின் தேர்தல் பரப்புரை மேலாண்மை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா குற்றம் சாட்டியுள்ளார்.
திமுக மற்றும் பாஜக மீது அவர் குற்றம் சாட்டியுள்ள நிலையில், இதனை அரசியலாக்க வேண்டாம் என திமுக பதிலளித்துள்ளது.
திரையரங்கிலோ அல்லது ஓடிடி தளங்களிலோ வெளியாகாத திரைப்படம் இணையத்தில் கசிந்தது எப்படி என்ற கேள்வி எழுப்பப்பட்டு வரும் நிலையில், தயாரிப்பாளர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் இது தொடர்பாக கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
படக்குழு கூறுவது என்ன?
சமூகவலைத்தளங்களில் வெளியான சில காட்சிகளில் கணினி திரையிலிருந்து ஒளிப்பதிவு செய்யப்பட்டது போன்றும், திரைப்படத்தின் டவுன்லோட் போன்றும் சில பதிவுகள் பகிரப்படுகின்றன.
ஜனநாயகன் திரைப்படத்தின் காட்சிகள் கசிந்ததை உறுதி செய்துள்ள இந்த படத்தின் இயக்குநர் ஹெச் வினோத் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பதிவு ஒன்றை விடுத்துள்ளார்.
அதில்,”ஒவ்வொரு காட்சியும் ஒருவருடைய கனவை சுமந்திருக்கிறது. திரைப்பட ரிலீசுக்கு முன்பு காட்சி கசிந்திருப்பது வலி கொடுக்கிறது. இதனை பகிராமல் இருப்பதன் மூலம் ஆதரவு கொடுங்கள்” என கூறியுள்ளார்.
திரைப்படத்தின் தயாரிப்பாளரான கே.வி.என்.புரொடக்ஷன்ஸ் தரப்பு வழக்கறிஞர் மூலம் இது தொடர்பாக பொது அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
இதன்படி,”ஜன நாயகன் திரைப்படத்தின் கசிந்த காட்சிகள் அல்லது காணொளிகளை எந்த டிஜிட்டல் ஊடகம் வழியாக பதிவிறக்கம் செய்வது, அனுப்புவது, பகிர்வது, பதிவேற்றுவது, மீண்டும் பதிவிடுவது, சேமிப்பது அல்லது பரப்புவது ஒரு கடுமையான குற்றச்செயல் மற்றும் பதிப்புரிமை மீறலாகும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், “இதில் சம்பந்தப்பட்ட ஒவ்வொரு நபரும் தனித்தனியாக குற்றவியல் நடவடிக்கைக்கு உட்படுவார்கள்” என்றும் அந்த நோட்டீஸில் எச்சரிக்கப்பட்டுள்ளது.
ஜனநாயகன் திரைப்படத்தின் காட்சிகள் “கசிந்தது” காரணமாக தயாரிப்பாளர்கள் மட்டுமின்றி திரையரங்கு உரிமையாளர்கள், விநியோகஸ்தர்கள் என அனைத்து தரப்பினரும் பாதிக்கப்படுவார்கள் என தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கச் செயலாளர் ஸ்ரீதர் கூறியுள்ளார்.
இது தொடர்பாக தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபையின் முன்னாள் தலைவர் கோதண்டராமைய்யா சார்பில் தமிழ்நாடு காவல்துறை தலைவர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்று அளிக்கப்பட்டுள்ளது.
அதில், நேற்று ஜனநாயகன் படத்தில் இருந்து ஐந்து நிமிடம் ஓடக்கூடிய சண்டைக்காட்சி மட்டும் இணையத்தில் லீக் ஆனது என்றும் இன்று மொத்த படமும் தரமான பிரிண்டாக இணையதளங்களில் வெளியாகியிருக்கிறது என தங்களுக்கு தகவல் வந்துள்ளது என்றும் கூறப்பட்டுள்ளது.
ஜன நாயகன் திரைப்படத்தின் காட்சிகள் கசிந்தது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சியின் எக்ஸ் வலைத்தள பதிவில்,”3 மணி நேரம் 2 நிமிடங்கள் ஓடும் ஜனநாயகன் படத்தை ஆன்லைனில் யாரோ திருடி வெளியிட்டுள்ளார்கள்” என கூறுகிறார்.
எனினும் முழுநீள திரைப்படம் வெளியானதாக கூறப்படும் கூற்றை படக்குழு உறுதிப்படுத்தவில்லை.
திரை உலகில் என்ன கூறப்படுகிறது?
இதனிடையே திரைப்படத்தின் காட்சிகள் வெளியானது தொடர்பாக திரையுலகத்தினர் பலரும் தங்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
நடிகர் சிவகார்த்திகேயன் தனது சமூகவலைத்தள பக்கத்தில் விடுத்துள்ள பதிவு ஒன்றில்,” ஒவ்வொரு திரைப்படமும் நூற்றுக்கணக்கான மக்களின் ஆர்வம், ரத்தம் மற்றும் வியர்வையினால் உருவாக்கப்படுகிறது – தயவுசெய்து திருட்டுத்தனமாகத் திரைப்படம் பார்ப்பதை தவிர்க்கவும்” என்று கூறியுள்ளார்.
ஜன நாயகன் திரைப்படம் இணையத்தில் கசிந்ததற்கு பொறுப்பானவர்கள் மீது “கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்” எனவும் சிவகார்த்திகேயன் வலியுறுத்தியுள்ளார்.
”ஜனநாயகன் படத்தின் காட்சிகள் இணையத்தில் கசிந்ததைக் கண்டு மிகவும் மனவேதனை அடைந்தேன். இந்தப் படம் அவ்வளவு சர்ச்சைக்குரியது என்று நான் நினைக்கவில்லை, இருப்பினும் சென்சார் போர்டு அவர்களுக்குரிய காரணங்களை வைத்திருக்கலாம். திரைப்படத்தை விரைவில் முறையான வழியில் காண முடியும் என்று நம்புகிறேன்” என நடிகர் விஷால் அறிக்கையில் கூறியுள்ளார்.
இசையமைப்பாளர் மற்றும் நடிகர் ஜி.வி.பிரகாஷ் குமார் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில், “திருட்டுத்தனமாகப் படம் பார்ப்பதை (Piracy) ஆதரிக்காதீர்கள். திறமைக்கும் உழைப்பிற்கும் மதிப்பளியுங்கள். ஒரு திரைப்படத்தை உருவாக்குவதற்குப் பின்னால் ரத்தமும் வியர்வையும் கலந்த பெரும் உழைப்பு இருக்கிறது.” என கூறியுள்ளார்.
நடிகர், தயாரிப்பாளர் விஜய் ஆண்டனி விடுத்துள்ள சமூக ஊடக பதிவு ஒன்றில்,” அனைவரும் ஜன நாயகன் வெளியீட்டின் போது சட்டப்பூர்வமான தளங்கள் மூலமாக திரைப்படத்தைப் பார்க்க வேண்டும்” என கூறியுள்ளார்.
இதனிடையே தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்த த.வெ.க. தேர்தல் பரப்புரை மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா, ”ஜன நாயகன் திரைப்படம் இணையத்தில் வெளியாகக் காரணம் திமுக மற்றும் பாஜக” எனக் கூறினார்.
தமது கூற்றுக்கான ஆதாரம் எதையும் குறிப்பிடாத ஆதவ் அர்ஜுனா விஜய் மீது அரசியல் அழுத்தம் கொடுக்கும் நோக்கத்துடன் இது நடத்தப்பட்டது என்று கூறினார்.
ஆனால் திரைப்பட காட்சிகள் கசிவை அரசியலாக்க முயற்சி செய்யக்கூடாது என திமுகவின் கலை மற்றும் இலக்கிய பகுத்தறிவுப்பேரவை துணைத் தலைவர் போஸ் வெங்கட் கேட்டுக் கொண்டுள்ளார்.
அவர் விடுத்துள்ள பதிவு ஒன்றில்,”யார் இதனை செய்து இருந்தாலும் கடுமையான தண்டனை தர வேண்டும். தவறு எங்கு நடந்தது என்பதை அறிந்து தக்க தண்டனை கொடுக்கவேண்டும்” என கூறியுள்ளார்.
படக்குறிப்பு, தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் 2026, தொடர்பான செய்திகள், காணொளிகள், நேர்காணல்களை படிக்க, பார்க்க…
நடிகரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் நடித்திருக்கும் ‘ஜனநாயகன்’ திரைப்படம், அவரது கடைசித் திரைப்படமாக கருதப்படுகிறது.
ஜன நாயகன் திரைப்படத்தை 2026ம் ஆண்டு பொங்கல் வெளியீடாக ஜனவரி 9ம் தேதி திரைக்கு கொண்டு வர படக்குழு திட்டமிட்டிருந்தது. ஆனால் மத்திய திரைப்பட சான்றிதழ் வாரியத்தின் சான்றிதழ் தொடர்பான பிரச்னைகளால் திரைப்படத்தின் வெளியீடு தாமதமானது.
இதனை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தை அணுகிய தயாரிப்புத் தரப்பு, படத்திற்கு U/A சான்றிதழை வழங்க உத்தரவிடும்படி கோரியது.
சிக்கல் தொடர்ந்ததால் வெளியீடு திட்டமிடப்பட்டதற்கு 2 நாட்கள் முன்னதாக ஜனவரி 7ம் தேதியன்று “திரைப்பட வெளியீடு ஒத்திவைக்கப்படுகிறது” என படக்குழு அறிவித்தது.
பல கட்ட நீதிமன்ற விசாரணைகளுக்கு நடுவே மத்திய திரைப்பட சான்றிதழ் வாரியத்திற்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்கை, அப்படத்தின் தயாரிப்பாளர்கள் திரும்பப் பெற்றனர்.
படக்குறிப்பு, உங்கள் பகுதியில் போதைப்பொருள் பிரச்னை உள்ளதா? கருத்துகள், அனுபவங்களை பகிர இங்கே கிளிக் செய்யவும்
இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
