தமிழகத்தில் தேர்தல் வேலைகள் தீவிரமடைந்து வருவதால் மாநிலம் முழுக்க அனைத்து கட்சிகளும் தேர்தல் பிரச்சாரங்களில் ஈடுபட்டு வருகின்றன. மேலும் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருக்கும் பாஜகவின் தமிழக தேர்தல் மேலிட பொறுப்பாளரான பியூஷ் கோயல் தேர்தலை முன்னிட்டு சென்னையில் முகாமிட்டுள்ளார். மேலும் வேட்பு மனு தாக்கல் செய்வதற்கு இன்றே கடைசி நாள் என்பதால், தமிழிசை சௌந்தர் ராஜன், வானதி ஸ்ரீனிவாசன் உள்ளிட்ட பலரும் இன்று வேட்பு மனுவை தாக்கல் செய்தனர்.
இந்தநிலையில்தான், மயிலாப்பூர் சட்டமன்ற தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்த தமிழிசை சௌந்தரராஜன் உடன் மத்திய அமைச்சர் பியூஷ் கோயலும் வந்திருந்தார்.அதைப்போலவே வானதி ஸ்ரீனிவாசனும், ராஜஸ்தான் முதல்வர் மற்றும் அண்ணாமலை ஆகியோருடன் வந்து வேட்பு மனு தாக்கல் செய்தார்.
இதனை தொடர்ந்து சென்னை தியாகராய நகரில் மத்திய அமைச்சரும், தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் பொறுப்பாளருமான பியூஷ் கோயல் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “பாஜக கட்சி ஏப்ரல் 6 ஆம் தேதி 1980 ஆம் ஆண்டு 46 ஆண்டுகளுக்கு முன் தொடங்கப்பட்டது. 1984 ஆம் ஆண்டு 2 நாடாளுமன்ற உறுப்பினர்களில் இருந்து இன்று தொடர்ந்து 12 ஆண்டுகள் ஆட்சியில் உள்ள கட்சியாக உள்ளோம் என பேசிய அவர், உலகில் மிக பெரிய கட்சியாக பாஜக மாறியுள்ளதாக தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், “இன்று மழை கூட எங்களை வாழ்த்தியது எனவும் தமிழகத்தில் காலநிலை மாறியுள்ளது என்பதை இது உணர்த்துகிறது எனவும் அவர் கூறினார். மேலும் அவர் பேசுகையில், “முதல்வர் கல்வி தகுதி பற்றி எனக்கு தெரியாது எனவும் அவர் மிக பெரிய அளவில் படித்து இருக்கலாம்.
நான் வெறும் CA படித்துள்ளேன், இந்திய அளவில் 2 ஆம் இடம் பிடித்தேன். அந்த நேரத்தில் 1% நபர்கள் மட்டுமே CA தேர்வில் வெற்றி பெற்றனர்” எனவும் அவர் தெரிவித்தார். தொடர்ந்து பேசிய பியூஷ் “தமிழகத்தில் பரவும் போதை கலாச்சாரத்தை ஒழிக்க என்ன நடவடிக்கை எடுத்தார் என மக்களுக்கு விளக்கம் அளிக்க வேண்டும் எனவும் அவர் பேசினார். மேலும் திமுக கடந்த 2021 -ஆம் ஆண்டின் தேர்தல் நேரத்தில் வழங்கிய 70% வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என குற்றஞ்சாட்டினார்.
தொடர்ந்து அவர் பேசுகையில், “அதிமுக பாஜக கூட்டணி ஒருங்கிணைந்து ஒரு நல்ல அரசாங்கத்தை கொண்டு வருவோம் எனவும் தமிழகத்தில் மத்திய அரசு திட்டங்களை ஏன் அமல்படுத்தவில்லை என தெரியவில்லை எனவும் அவர் தெரிவித்தார்.
மேலும் அவர் பேசுகையில், “மத்திய அரசு சார்பில் 9 லட்சம் வீடுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆனால் 3 லட்சம் நபர்களுக்கு இதுவரை இந்த வீடுகள் ஒதுக்கப்படவில்லை திமுக காங்கிரஸ் மத்தியில் ஆட்சியில் இருந்த காலத்தை விட தமிழகத்தில் வரி வருவாய் இரண்டு மடங்காக உயர்ந்து இருந்தாலும் எந்த ஒரு வளர்ச்சி பணிகளும் நடக்கவில்லை என தெரிவித்தார்.
காங்கிரஸ் திமுக ஆட்சி காலத்தில் 57 ஆயிரம் கோடியாக இருந்த வருவாய் 2 கோடியே 15 லட்சமாக உயர்ந்துள்ளத எனவும் மத்திய அரசுடன் இணக்கமாக இணைந்து செயல்பட்டால் தமிழகத்தில் பல திட்டங்களை செயல்படுத்த முடியும் எனவும் அவர் கூறினார். மீண்டும் திமுக ஆட்சிக்கு வந்தால் தமிழக மக்கள் உதயநிதி ஸ்டாலினை முதல்வராக பார்க்க வேண்டும் எனவும் ஜல்ஜிவன் திட்டத்தில் மிக பெரிய ஊழல் நடைபெற்றுள்ளது. இதுகுறித்து விசாரணை நடைபெற்று வருகிறது எனவும் அவர் தெரிவித்தார்.
