சென்னை,
மத்திய அரசின் ஏற்றுமதி-இறக்குமதி விவரங்கள் குறித்து ஆண்டுவாரி வர்த்தக பகுப்பாய்வுக்கான தேசிய ஏற்றுமதி-இறக்குமதிகளை பதிவு செய்திடும் நிர்யாத் நிறுவனம் ஆண்டுதோறும் ஆய்வறிக்கை வெளியிட்டு வருகிறது. இந்த நிர்யாத் நிறுவனம் 2024-25-ம் ஆண்டுக்கான ஜவுளி ஏற்றுமதிகள் குறித்த அறிக்கையை தற்போது வெளியிட்டுள்ளது.
இந்த அறிக்கையின்படி, இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்பட்டுள்ள ஜவுளி துணிகளின் மதிப்பு 36,610 மில்லியன் டாலர் (சுமார் ரூ.3 லட்சத்து 40 ஆயிரம் கோடி). இதில் தமிழ்நாடு மட்டும் 7997.17 மில்லியன் டாலர் (ரூ.73 ஆயிரத்து 925 கோடி) மதிப்புடைய ஜவுளித் துணிகளை ஏற்றுமதி செய்து ஜவுளி ஏற்றுமதியில் தமிழ்நாடு இந்தியாவில் முதல் இடம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டினை அடுத்து, தொழில் வளர்ச்சியில் எப்போதும் முன்னணியில் நிற்கும் மாநிலங்களான குஜராத் 2-ம் இடமும், மராட்டியம் 3-ம் இடமும் பெற்றுள்ளன. இந்த அறிக்கையின்படி, தமிழ்நாட்டில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சி அமைவதற்குமுன் 2020-21-ம் ஆண்டில் தமிழ்நாட்டில் இருந்து ஏற்று மதியான ஜவுளி துணிகளின் மதிப்பு 6193.39 மில்லியன் டாலர் மட்டுமே (சுமார் ரூ.57 ஆயிரத்து 251 கோடி).
தமிழ்நாட்டில், 2020-21 ஆண்டினைவிட 2024-25-ம் ஆண்டில் 1803.78 மில்லியன் டாலர் (சுமார் ரூ.16 ஆயிரத்து 670 கோடி) அளவுக்கு. அதாவது 4 ஆண்டுகளில் 29 சதவீதம் அளவுக்கு அதிகமாக ஏற்றுமதி செய்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் தி.மு.க. ஆட்சி சாதனை நிகழ்த்தியுள்ளது.
