ஞானபீட விருது பெற்ற வைரமுத்துவை சந்தித்து பாராட்டிய மு.க.ஸ்டாலின்

சென்னை,

கவிஞரும், திரைப்பட பாடலாசிரியருமான வைரமுத்துவுக்கு, இலக்கியத் துறையில் மிகச் சிறந்த விருதான ஞானபீட விருது வழங்கப்படுகிறது. சுமார் கால் நூற்றாண்டுக்குப் பிறகு தமிழுக்குக் கிடைத்த பெரும் பெருமை இது என்று இலக்கியத் துறையினர் கொண்டாடி வருகிறார்கள். பலதுறை தலைவர்கள் கவிஞர் வைரமுத்துவுக்கு தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர்.

தமிழ் இலக்கியத் துறையில் இதுவரை 1975ஆம் ஆண்டு எழுத்தாளர் அகிலன், 2002ஆம் ஆண்டு எழுத்தாளர் ஜெயகாந்தன் ஆகிய இரண்டு பேர் மட்டுமே ஞானபீட விருது பெற்றிருக்கிறார்கள். தற்போது தமிழகத்திலிருந்து மூன்றாவது கவிஞராக ஞானபீட விருதினை வைரமுத்து பெறுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், மு.க.ஸ்டாலின் கவிஞர் வைரமுத்துவை நேரில் சந்தித்து பொன்னாடை போற்றி ஞான பீட விருது பெற்றதுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து, வைரமுத்து தனது எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது,

“ஞானபீட விருதின்

மதிப்பறிந்த

மாண்புமிகு முதலமைச்சர்

இல்லம் தேடிவந்து

உள்ளம் மகிழவைத்தார்

என்னவொரு எளிமை!

முதலமைச்சர் என்ற

தோரணை இல்லை

ஆளும் தலைவன் என்ற

ஆரவாரம் ஏதுமில்லை

ஒரு சகோதரராய்

சமகால நண்பராய்

இயல்பாய் இனிமையாய்

வருகை தந்தார்

கலைஞர் வெற்றிடத்தை

நிரப்ப வந்தேன் என்று

சொல்லாமல் சொல்வதுபோல்

பொன்னாடை பூட்டினார்;

புத்துணர்ச்சி கூட்டினார்

தேன் சிறிது கலந்த

தேநீர் அருந்தினார்

ஞானபீடத்தின்

வரலாறு கேட்டார்

ஞானத்தின் உயரமும்

பீடத்தின் ஆழமும்

அறிந்துகொண்டார்

வாசல்வரை சென்று

வழியனுப்பினேன்

அவர் விடைகொண்டதும்

யானை கடந்துபோன வீதிபோல்

வெறிச்சோடிப் போயிற்று

எனது கூடம்”

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source link