டிராக்டரில் இருந்து பேட்டரி திருட முயன்றதாக கூறி இளைஞரை அடித்துக்கொன்ற கிராமத்தினர்

ராஞ்சி,

ஜார்க்கண்ட் மாநிலம் பலமு மாவட்டம் முர்மா கிராமத்தை சேர்ந்த இளைஞர் பவன் ராம் (வயது 22). இவர் நேற்று இரவு பக்கத்து கிராமமான டெலியாகி என்ற கிராமத்திற்கு சென்றுள்ளார்.

இந்நிலையில், அந்த கிராமத்தில் ஒரு வீட்டின் அருகே நிறுத்தப்பட்டிருந்த டிராக்டரில் இருந்து பேட்டரியை திருட பவன் ராம் முயன்றதாக கூறப்படுகிறது.

அப்போது, அந்த கிராமத்தை சேர்ந்த இளைஞர்கள், பொதுமக்கள் பவன் ராமை பிடித்துள்ளனர். பின்னர் அவரை ஊர் மத்தியில் உள்ள மின்கம்பத்தில் கட்டி வைத்து கடுமையாக தாக்கியுள்ளனர். கிராமத்தினர் நடத்திய தாக்குதலில் பவன் ராம் படுகாயமடைந்தார்

இந்த சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. தகவலறிந்து விரைந்து சென்ற போலீசார், பவன் ராமை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர்.

பவன் ராமை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக அறிவித்தனர். அதேவேளை, பவன் ராம் தனது காதலியை சந்திக்க வந்திருக்கலாம் என்றும் அவரை கிராமத்தினர் அடித்து கொலை செய்துவிட்டு டிராக்டர் பேட்டரியை திருட வந்ததாக கூறி சம்பவத்தை திசைதிருப்ப முயற்சிப்பதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

Source link