திருவனந்தபுரம்,
இந்தியா மற்றும் இலங்கையில் பிப்ரவரி மாதம் முதல் மார்ச் மாதம் வரை நடைபெற்ற டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியா நியூசிலாந்தை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது. குறிப்பாக, அரையிறுதிக்கு முந்தைய போட்டி, அரையிறுதி மற்றும் இறுதிப்போட்டியில் சஞ்சு சாம்சன் அபாரமாக விளையாடினார். மூன்று போட்டிகளிலும் அரைசதம் விளாசி அணியின் வெற்றிக்கு முக்கிய பங்கு வகித்தார். அத்துடன் தொடர் நாயகன் விருதை வென்றும் அசத்தினார்.
உலகக் கோப்பையை வென்ற மகிழ்ச்சியுடன் சஞ்சு சாம்சன் சொந்த ஊர் திரும்பியுள்ளார். அப்போது கேரள மாநில அமைச்சர் விமான நிலையத்திற்கு நேரில் சென்று வாழ்த்து தெரிவித்தார். இந்த நிலையில் இன்று சஞ்சு சாம்சனுக்கு அதிகாரப்பூர்வ வரவேற்பு அளிக்கும் விழா அரசு சார்பில் நடத்தப்படுகிறது. இந்த நிகழ்ச்சியை முதல்வர் பினராயி விஜயன் தொடங்கி வைக்கிறார். விளையாட்டு அமைச்சர், தலைமை செயலாளர் மற்றும் பல மூத்த அரசு அதிகாரிகள் கலந்து கொள்ள உள்ளனர்.
