டென்னிஸ் ஹோப்: நிலவை ப்ளாட் போட்டு விற்று கோடீஸ்வரரான அமெரிக்கர் – தனி அரசையே உருவாக்கியது எப்படி?

படக்குறிப்பு, விவாகரத்திற்குப் பிறகு, டென்னிஸ் ஹோப் சிந்தித்துக் கொண்டிருந்தபோது, அவருக்குத் தனது வாழ்வையே மாற்றிய அந்த மில்லியன் டாலர் யோசனை வந்தது.

இந்தச் சூழ்நிலையைக் கற்பனை செய்து பாருங்கள்: சமீபத்தில் விவாகரத்து பெற்ற ஒரு மனிதர், அவரிடம் பணம் இல்லை, வருமானம் ஈட்டுவதற்கான வழிகளைச் சிந்தித்துக் கொண்டிருக்கிறார். சொத்துகளை வாங்கி வாடகைக்கு விட்டு பணம் சம்பாதிக்கலாம் என்று அவர் நினைக்கிறார். பின்னர் ஒரு நாள், ஜன்னலுக்கு வெளியே பார்க்கும்போது திடீரென அவருக்கு, “அருமை! நான் நிலவை விற்றுவிடுகிறேன்” என்றொரு யோசனை தோன்றுகிறது.

இந்த யோசனை விசித்திரமாகவோ அல்லது நம்ப முடியாத ஒன்றாகவோ தோன்றக்கூடும். ஆனால், 1980ஆம் ஆண்டில் டென்னிஸ் ஹோப் என்ற அமெரிக்கர் சரியாக இதைத்தான் யோசித்ததாகக் கூறியுள்ளார். இந்த யோசனை தோன்றிய பிறகு, அவர் நிலவில் உள்ள தரைப் பகுதிகளை விற்று ஒரு கோடீஸ்வரரானார்.

அவரால் எப்படி இதைச் செய்ய முடிந்தது?

சர்வதேச சட்டங்கள் மற்றும் ஒப்பந்தங்களில் உள்ள “சட்டரீதியான தெளிவற்ற பகுதிகளை” பயன்படுத்தி அவர் இதைச் செய்துள்ளார்.

அதாவது, நிலவின் உரிமையாளர் யார் என்பது குறித்து சட்டங்கள் தெளிவாக இருக்கவில்லை. எனவே அவர் இந்தக் குழப்பத்தைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டார்.

அதோடு, இந்த அசாதாரணமான யோசனையை அவர் மிகுந்த திறமையுடன் வெற்றிகரமான தொழிலாக மாற்றினார்.

இந்த விசித்திரமான யோசனை தோன்றிய பிறகு, இது உண்மையில் சாத்தியமா என்பதை அறிய டென்னிஸ் ஹோப் முடிவு செய்தார். ‘வைஸ்’ (Vice) ஊடகத்திற்கு அளித்த பேட்டியில், தான் ஒரு நூலகத்திற்குச் சென்று, ‘1967ஆம் ஆண்டின் விண்வெளி ஒப்பந்தம்’ என்ற ஆவணத்தைத் தேடியதாக அவர் கூறினார்.

இந்த ஒப்பந்தம் ஐக்கிய நாடுகள் சபையால் உருவாக்கப்பட்ட ஒரு விதியாகும். விண்வெளி என்பது உலகில் அனைவருக்கும் சொந்தமானது என்று இது கூறுகிறது. விண்வெளியை “மனிதகுலம் அனைத்துக்குமான சொத்து” என்று இது விவரிக்கிறது. அதாவது, எந்தவொரு தனி நாடும் இதற்கு உரிமை கொண்டாட முடியாது.

இன்னும் தெளிவாகக் கூறுவதானால், இந்த ஒப்பந்தத்தின் 2வது பிரிவு “நிலவு மற்றும் பிற வான்பொருட்கள் மீது, இறையாண்மை கோருவதன் மூலமோ, பயன்பாடு அல்லது ஆக்கிரமிப்பு மூலமோ, அல்லது வேறு ஏதேனும் வழிகள் மூலமோ, எந்தவொரு நாடும் உரிமை கொண்டாட முடியாது.” என்று கூறுகிறது.

ஆனால் ஹோப் இந்த விதியை முற்றிலும் மாறுபட்ட கோணத்தில் புரிந்துகொண்டார். அவர், “இது அனைவருக்கும் சொந்தமானது என்றால், உண்மையில் இது யாருக்குமே சொந்தமானது அல்ல. நாடுகளால் இதற்கு உரிமை கொண்டாட முடியாது என்றால், ஒரு தனிநபரால் உரிமை கொண்டாட முடியுமோ?” என்று சிந்தித்தார்.

அவர் பிபிசியிடம் பேசியபோது, “உரிமையாளர் இல்லாத நிலமாக அது இருந்தது,” என்று கூறினார்.

எனவே இந்த யோசனையின் அடிப்படையில், அவர் நிலவிலுள்ள நிலத்தைத் தனக்கே உரியதாகக் கோர முடிவு செய்தார். இதை அவர், “ஐரோப்பாவில் இருந்து புதிய உலகத்திற்கு வந்தபோது நம் முன்னோர்கள் செய்ததைப் போன்றதுதான்” என்று குறிப்பிட்டார்.

அடுத்த பெரிய கேள்வி, ஒருவரால் நிலவை உண்மையில் எப்படி “சொந்தம் கொண்டாட” முடியும்?

மீண்டும் ஒருமுறை, அமைப்பில் இருந்த ஓர் இடைவெளியைப் பயன்படுத்தி, அதாவது, யாரும் தெளிவாக ‘ஆம்’ என்றோ அல்லது ‘இல்லை’ என்றோ பதிலளிக்காத ஒரு சூழலைப் பயன்படுத்தி, ஹோப் ஒரு தந்திரமான வழியைக் கண்டறிந்தார்.

நிலவுக்கும், பூமி தவிர சூரிய மண்டலத்தில் உள்ள பிற எட்டு கோள்களுக்கும், அவற்றின் துணைக் கோள்களுக்கும் (நிலவுகளுக்கும்) உரிமை கோரி அவர் ஐக்கிய நாடுகள் சபைக்கு கடிதம் ஒன்றை அனுப்பினார். அந்தக் கடிதத்தில், நிலவிலுள்ள நிலத்தைச் சிறுசிறு பகுதிகளாகப் பிரித்து மக்களுக்கு விற்கத் திட்டமிட்டு இருப்பதாக அவர் விளக்கினார். இதில், ஏதேனும் சட்டச் சிக்கல்கள் இருந்தால், அதுகுறித்து தனக்குத் தெரிவிக்குமாறும் அவர் தெளிவாகக் குறிப்பிட்டிருந்தார்.

ஆனால், ஐக்கிய நாடுகள் சபையைச் சேர்ந்த யாரும் அவருக்குப் பதிலளிக்கவே இல்லை. அதாவது, யாரும் அதிகாரபூர்வமாக எதிர்ப்பு தெரிவிக்காததாலும், அவரைத் தடுக்காததாலும், அவர் தனது திட்டத்தைத் தொடர்ந்து முன்னெடுத்துச் சென்றார்.

படக்குறிப்பு, நிலவில் சொத்துகளை ஹோப் விற்பனை செய்யத் தொடங்கினார். சந்திரன் மற்றும் செவ்வாயில் விற்பனைக்கு உள்ள நிலங்களின் வரைபடங்களையும், செவ்வாய் கிரகத்தில் உள்ள ஒரு சொத்துக்கான பத்திரத்தையும் இந்தப் படம் காட்டுகிறது.

நிலவில் நிலம் விற்ற டென்னிஸ் ஹோப்

அதன் பிறகு, டென்னிஸ் ஹோப், நிலவிலுள்ள நிலப் பகுதிகளை ‘ஹெக்டேர்’ எனப்படும் நில அளவீட்டு அலகுகளில் கணக்கிட்டு விற்பனை செய்தார். அவர் நிலவுடன் மட்டுமே நின்றுவிடவில்லை. செவ்வாய், வெள்ளி மற்றும் புதன் போன்ற பிற கோள்களிலும் நிலம் விற்பனை செய்யத் தொடங்கினார்.

பலதரப்பட்ட மக்களும் நிறுவனங்களும் இந்த “நிலங்களை” வாங்கியுள்ளனர். இவர்களில் ஹாலிவுட் நட்சத்திரங்கள், ரொனால்ட் ரீகன் மற்றும் ஜிம்மி கார்டர் போன்ற மறைந்த முன்னாள் அமெரிக்க அதிபர்கள், ஹில்டன், மேரியட் போன்ற பெரிய ஹோட்டல் நிறுவனங்களும் அடங்குவர். ஜார்ஜ் டபிள்யு. புஷ்ஷுக்கும் நிலவில் ஒரு நிலப்பகுதி சொந்தமாக இருப்பதாகக் கூறப்படுகிறது.

கடந்த 2007ஆம் ஆண்டில் பிபிசியிடம் பேசிய ஹோப், தான் தினமும் சுமார் 1,500 ப்ளாட்டுகளை (plots) விற்பனை செய்வதாகத் தெரிவித்தார். எந்த நிலத்தை விற்பனைக்குத் தேர்வு செய்வது என்பதற்கான தனது வழிமுறையையும் அவர் விளக்கினார். நிலவின் வரைபடத்தைப் பார்த்து, கண்களை மூடிக்கொண்டு தனது விரலால் ஓரிடத்தைச் சுட்டிக்காட்டி, அந்த நிலத்தைத் தேர்வு செய்வதாக அவர் கூறினார்.

“இது அறிவியல்பூர்வமான முறையல்ல, ஆனால் மிகவும் சுவாரஸ்யமானது” என்று அவர் ஒப்புக்கொண்டார்.

படக்குறிப்பு, தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் 2026, தொடர்பான செய்திகள், காணொளிகள், நேர்காணல்களை படிக்க, பார்க்க…

இந்தத் தொழில் மிகவும் சுவாரஸ்யமானதாகவும், அதேநேரம் மிகுந்த லாபம் தரக்கூடியதாகவும் தோன்றுகிறது. இதன் மூலம் அவர் சுமார் 12 மில்லியன் அமெரிக்க டாலர்களை ஈட்டியிருப்பதாகக் கூறப்படுகிறது. மேலும் 1995ஆம் ஆண்டில் இருந்து இதுவே தனது ஒரே தொழில் என்றும் அவர் கூறுகிறார்.

அவர் செவ்வாய் கோளிலும் நிலங்களை விற்பனை செய்கிறார். வாங்குவோருக்கு உரிமையாளர் என்பதற்கான சான்றாக ஓர் ஆவணத்தையும் (உரிமைப் பத்திரம்) வழங்குகிறார்.

வைஸ் ஊடகத்திடம் அவர் பேசியபோது, “எங்களிடம் இருந்து நீங்கள் வாங்கக்கூடிய மிகச்சிறிய நிலப்பகுதி ஒரு ஏக்கர். நாங்கள் விற்பனை செய்யும் மிகப்பெரிய நிலப்பகுதி ‘ஒரு கண்டம் அளவிலான’ நிலப்பகுதி என்று அழைக்கப்படுகிறது. இது 5,332,740 ஏக்கர் பரப்பளவைக் கொண்டது. இதன் விலை 13,331,000 அமெரிக்க டாலர்கள் ஆகும்,” என்று விளக்கினார்.

மேலும் அவர், “அந்தப் பெரிய நிலப்பகுதிகள் எதையும் நாங்கள் இதுவரை விற்பனை செய்யவில்லை. ஆனால் 1,800 மற்றும் 2,000 ஏக்கர் அளவிலான பல நிலங்களை விற்பனை செய்துள்ளோம். ஹில்டன், மேரியட் ஹோட்டல் நிறுவனங்கள் உள்பட, உலகம் முழுவதும் உள்ள சுமார் 1,800 பெரிய நிறுவனங்கள் குறிப்பிட்ட நோக்கங்களுக்காக எங்களிடம் இருந்து நிலங்களை வாங்கியுள்ளன,” என்றார்.

தனி அரசையே உருவாக்கியது எப்படி?

நீங்கள் இதுவரைக்கும் தொடர்ந்து படித்திருந்தால், இந்தத் தொழில் எவ்வாறு தொடர்ந்து நடைபெறுகிறது, வாங்குபவர்கள் தங்கள் “நிலம்” திடீரெனப் பறிக்கப்படாது என்பதில் எவ்வாறு உறுதியாக இருக்கிறார்கள் என்பன குறித்து நீங்கள் வியக்கக்கூடும்.

டென்னிஸ் ஹோப் மற்றும் அவரிடம் இருந்து நிலம் வாங்கிய மக்களுக்கும் இதே கவலை இருந்தது. எனவே, இதைக் கையாள்வதற்கு அவர்கள் ஒரு யோசனையைக் கண்டறிந்தனர்.

அவர்கள் “கேலக்டிக் அரசாங்கம்” (Galactic Government) எனப்படும் ஒரு வகையான அரசாங்கத்தை உருவாக்கியதாகவும், அதை ஒரு ஜனநாயக குடியரசாக விவரித்ததாகவும் ஹோப் விளக்கினார்.

“அரசியலமைப்பை வரைவு செய்ய எங்களுக்கு மூன்று ஆண்டுகள் எடுத்தது. மார்ச் 2004இல் நாங்கள் அதை இணையத்தில் வெளியிட்டோம். அப்போது எங்களிடம் 3.7 மில்லியன் சொத்து உரிமையாளர்களும், அந்த அரசியலமைப்பை அங்கீகரிப்பதற்காகப் பதிவான 173,562 வாக்குகளும் இருந்தன. எனவே, இப்போது முழுமையாக அங்கீகரிக்கப்பட்ட அரசியலமைப்பைக் கொண்ட ஓர் இறையாண்மை மிக்க தேசமாக நாங்கள் திகழ்கிறோம்,” என்று அவர் விளக்கினார்.

அதாவது, அவர்கள் தங்களுக்கென ஓர் அரசியலமைப்பை உருவாக்கிக் கொண்டதாகவும், மக்கள் வாக்களிப்பதன் மூலம் அதற்கு ஒப்புதல் பெற்றதாகவும், இப்போது தங்களை ஒரு சுதந்திர தேசமாகக் கருதிக் கொள்வதாகவும் அவர் கூறுகிறார்.

மேலும் அவர், “தற்போது உலகம் முழுவதும் உள்ள 30 அரசுகளுடன் நாங்கள் ராஜதந்திர உறவுகளைப் பேணி வருகிறோம். இயன்றவரை அதிகமான அரசுகள் எங்களை அங்கீகரிக்க வேண்டுமென நாங்கள் முயன்று வருகிறோம். ஏனெனில், சர்வதேச நாணய நிதியத்தில் இணைவதே எங்கள் நோக்கம்,” என்றும் கூறினார்.

ஹோப் முன்வைத்துள்ள இந்தக் கூற்றுகளை பிபிசியால் சுயாதீனமாகச் சரிபார்க்க முடியவில்லை.

நிலவுக்கு சொந்தம் கொண்டாடிய சிலி வழக்கறிஞர்

மனிதர்கள் நிலவுக்குச் செல்வது பற்றித் தீவிரமாகச் சிந்திப்பதற்கு வெகு காலத்திற்கு முன்பே, விண்வெளியில் உள்ள பொருட்களுக்கு யார் உரிமையாளர் என்ற கேள்வியை மக்கள் விவாதித்து வந்தனர்.

கடந்த 1936ஆம் ஆண்டில், டீன் லிண்ட்சே என்ற நபர், தான் நிலவுக்கு மட்டுமின்றி, விண்வெளியில் உள்ள அனைத்துப் பொருட்களுக்கும் உரிமையாளர் என்று உரிமை கோரினார். அந்தக் காலகட்டத்தில், இந்த “சொத்துகளை” விலைக்கு வாங்க விரும்பியவர்களிடம் இருந்து அவருக்குப் பல சலுகைகளும் வந்தன.

ஜெனாரோ கஜார்டோ வேரா என்பவரின் விஷயம் இதேபோன்ற மற்றொரு சுவாரஸ்யமான சம்பவமாகும். இவர் சிலி நாட்டைச் சேர்ந்த ஒரு வழக்கறிஞர். 1919ஆம் ஆண்டில் பிறந்தவர். அவர், 1954ஆம் ஆண்டு செப்டம்பர் 25ஆம் தேதி, தான் அதிகாரப்பூர்வமாக நிலவின் உரிமையாளரானதாக உரிமை கோரினார். இந்த உரிமை கோரலானது, ஒரு நோட்டரி (ஆவணங்களைச் சரிபார்க்கும் சட்ட அதிகாரி) முன்னிலையில் கையெழுத்திடப்பட்ட ஒரு சட்ட ஆவணத்தில் எழுதப்பட்டது. அந்த ஆவணத்தில் அவர் “நிலவின் உரிமையாளர்” என்று தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளார்.

இந்த ஆவணம், சிலியின் மையப்பகுதியில், அந்நாட்டின் தலைநகரில் இருந்து சுமார் 255கி.மீ தொலைவில் அமைந்துள்ள ‘தால்க்கா’ என்ற விவசாய நகரத்தில் வைத்து கையெழுத்திடப்பட்டது. இன்று இந்த ஆவணம் சான் டியாகோ நகரின் நீதித்துறை ஆவணக் காப்பகத்தில் பாதுகாத்து வைக்கப்பட்டுள்ளது.

படக்குறிப்பு, இது சிலியின் சான் டியாகோவில் உள்ள நீதித்துறை ஆவணக் காப்பகத்தில் வைக்கப்பட்டுள்ள சான்றொப்பமிடப்பட்ட ஆவணமாகும்.

அந்த ஆவணம், “ஜெனாரோ கஜார்டோ வேரா என்னும் வழக்கறிஞர், 1857ஆம் ஆண்டுக்கு முன்பிருந்தே, தனது முன்னோர்களின் உடைமைகளில் ஒன்றாக, ‘நிலவு’ என்று அழைக்கப்படும் வான்பொருளைத் தனது உடைமையாகக் கொண்டுள்ளார். இந்தப் பொருள் பூமியின் ஒரே துணைக்கோளாகும், இதன் விட்டம் 3,474,00கி.மீ. இதன் எல்லைகள் கோள வடிவத்தில் அமைந்துள்ளன. அவை வடக்கு, தெற்கு, கிழக்கு, மேற்கு ஆகிய திசைகளில் விரிகின்றன. இவர் தனது வசிப்பிடத்தை ‘1 ஓரியென்டே தெரு, எண் 1270’ என்ற முகவரியில் அமைத்துக் கொண்டுள்ளார். இவர் ‘திருமணமாகாதவர்’ ஆவார். ஜெனாரோ கஜார்டோ வேரா. அடையாள அட்டை எண்: 1,487,45-K. Ñuñoa. தால்க்கா, செப்டம்பர் 25, 1954.”

இந்தச் செயல் பெரும்பாலும் ஒரு நகைச்சுவையாகவே செய்யப்பட்டது.

கடந்த 1969ஆம் ஆண்டில், ‘தி ஈவ்னிங் இண்டிபென்டென்ட்’ என்ற அமெரிக்க நாளிதழிடம் கஜார்டோ பேசியபோது, இந்தச் செயலுக்குப் பின்னால் இருந்த அவரது உண்மையான காரணம் வேறாக இருந்ததாகத் தெரிவித்தார். அவர் ‘தால்க்கா சமூக மன்றம்’ என்ற உள்ளூர் அமைப்பில் உறுப்பினராகச் சேர விரும்பியுள்ளார்.

ஆனால் அந்த மன்றத்தில் ஒரு விதி இருந்தது. உறுப்பினராகச் சேர விரும்பும் ஒருவர், தனக்கென ஏதேனும் ஒரு சொத்தினை சொந்தமாக வைத்திருப்பதற்கு உரிய ஆதாரத்தைக் காட்ட வேண்டும் என்பதே அந்த விதி.

ஆனால், கஜார்டோவிடம் போதுமான பணமோ அல்லது சொத்தோ இருக்கவில்லை. நகரின் செல்வந்தர்களை உறுப்பினர்களாகக் கொண்ட இந்தக் குழுவில் இணைய அவர் விரும்பினார். எனவே, அவர் ஒரு சாமர்த்தியமான மற்றும் நகைச்சுவையான யோசனையைக் கண்டுபிடித்தார். அந்த யோசனையின்படி, அவர் நிலவை “விலைக்கு வாங்க” முடிவு செய்தார்.

இதற்கு அவருக்கு வெறும் ஒரு அமெரிக்க டாலர் மட்டுமே செலவானதாக அவர் அந்த நாளிதழிடம் கூறினார்.

தனிநபர் நிலவை உரிமை கோர முடியுமா?

டென்னிஸ் ஹோப் விண்வெளியில் நிலம் விற்கும் தனது வழக்கத்திற்கு மாறான தொழிலைத் தொடர்ந்து செய்து வருகிறார். ஆனால் இவையெல்லாம் நடந்த பிறகும், நிலவு சட்டபூர்வமாக யாருக்கும் சொந்தமானது அல்ல என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

விண்வெளி ஒப்பந்தத்தின்படி (Outer Space Treaty), விண்வெளி ஆய்வு மற்றும் அதன் பயன்பாடு அனைத்து நாடுகளுக்கும், அனைத்து மக்களுக்கும் பயனளிப்பதாக இருக்க வேண்டும்.

அப்படியிருக்க, ஒரு தனிநபரால் நிலவின் மீது உரிமை கோர முடியுமா?

சர்வதேச சட்ட நிபுணரான கிளேர் ஃபிங்கெல்ஸ்டீன், 2019ஆம் ஆண்டில் என்.பி.ஆர்-உடன் தொடர்புடைய ‘WHY’ என்னும் ஊடகத்திடம் பேசுகையில், இந்தக் கேள்விக்குத் தெளிவாக “இல்லை” என்று பதிலளித்தார்.

படக்குறிப்பு, உங்கள் பகுதியில் போதைப்பொருள் பிரச்னை உள்ளதா? கருத்துகள், அனுபவங்களை பகிர இங்கே கிளிக் செய்யவும்.

இருப்பினும், விண்வெளியில் சுரங்கத் தொழில் அல்லது வளங்களைப் பயன்படுத்துதல் போன்ற வணிகச் செயல்பாடுகள் என வரும்போது, நிலைமை சற்று தெளிவற்றதாக மாறுகிறது.

“விண்வெளியில் தனியார் நிறுவனங்கள் சுரங்கத் தொழிலை அமைப்பது குறித்து சர்வதேச சட்டம் தெளிவற்றதாகவே உள்ளது” என்று லண்டனின் பிர்பெக் கல்லூரியைச் சேர்ந்த கோள் அறிவியல் துறையின் பேராசிரியரான இயன் கிராஃபோர்ட் 2016ஆம் ஆண்டில் பிபிசியிடம் கூறினார்.

மேலும் அவர், “விண்வெளி ஒப்பந்தத்தை மறுஆய்வு செய்து, அதைப் புதுப்பிப்பது அவசியம்” என்றும் கூறினார்.

அதாவது, அவரது கூற்றுப்படி, தற்போதுள்ள விதிகள் காலாவதியானவை, விண்வெளியில் தோன்றும் புதிய செயல்பாடுகளைக் கையாள்வதற்கு அந்த விதிகளில் மாற்றங்கள் தேவைப்படுகின்றன.

இருப்பினும், தற்போதைய விண்வெளி விதிகளின்படி, நிலவு தனிநபர் யாருக்கும் சொந்தமானது அல்ல, அதேவேளையில், அது அனைவருக்கும் சொந்தமானதுமாகும்.

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

Source link