டேட்டிங் செயலி மூலம் ஆண்களை மயக்கி நூதன மோசடி – 6 பெண்கள் உள்பட 21 பேர் கைது

மும்பை,

மும்பை கார் மேற்கு பகுதியை சேர்ந்த 38 வயது தொழிலதிபர் பங்கஜ் யாதவ். இவர் சமீபத்தில் டேட்டிங் செயலி மூலம் அறிமுகமான இளம் பெண் ஒருவரை சந்திக்க அந்தேரி கிழக்கு பகுதியில் உள்ள ஒரு ஓட்டலுக்கு சென்றுள்ளார். அங்கு இருவரும் மது அருந்தி உள்ளனர்.

இந்த நிலையில் அந்த பெண் தனக்கு முக்கியமான வேலை இருப்பதாக கூறி திடீரென அங்கிருந்து நழுவியுள்ளார். பின்னர் ஓட்டல் ஊழியர் பங்கஜிடம் ரூ.18 ஆயிரத்து 866 தொகைக்கான பில்லை கொடுத்துள்ளார். சாதாரண மதுபானத்திற்கு பலமடங்கு அதிக விலை போடப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்த அவர் பில்லை கட்ட மறுத்தார். ஆனால் ஓட்டல் ஊழியர்கள் மிரட்டி, கட்டாயப்படுத்தி அவரிடம் இருந்து பில் கட்டணத்தை வாங்கினர்.

பின்னர் இது ஒரு திட்டமிட்ட மோசடி என்பதை உணர்ந்த தொழிலதிபர் போலீசில் புகார் அளித்தார். புகாரின்பேரில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி நவிமும்பையில் உள்ள ஒரு ஓட்டலில் தங்கியிருந்த திஷா என்ற பெண்ணை கைது செய்தனர். அவரிடம் நடத்திய கிடுக்கிப்பிடி விசாரணையில், இந்த மோசடியின் பின்னணியில் ஒரு பெரிய கும்பல் இயங்குவது தெரியவந்தது.

இவர்கள் இதே பாணியில் டேட்டிங் செயலிகளில் போலி கணக்குகளை உருவாக்கி வசதியான ஆண்களை கவர்கின்றனர். பின்னர் குறிப்பிட்ட சில ஓட்டல் உரிமையாளர்களுடன் ரகசிய ஒப்பந்தம் செய்துகொண்டு, வலையில் விழுபவர்களை அங்கு வரவழைக்கின்றனர். அங்கு மெனுவில் உள்ள மிக அதிக விலை கொண்ட மதுபானங்களை ஆர்டர் செய்து விட்டு, பில் வரும் நேரத்தில் பெண்கள் மாயமாவதுடன், பில் பணம் தர மறுப்பவர்களை ஓட்டல் பவுன்சர்கள் மூலம் மிரட்டி பணம் பறிப்பதையும் வாடிக்கையாக கொண்டுள்ளனர். இவ்வாறு பலரிடம் இந்த கும்பல் பணம் பறித்துள்ளது.

பிடிபட்ட பெண் கொடுத்த தகவலின் அடிப்படையில் மேலும் 5 பெண்கள், ஒரு கிளப் மேலாளர் மற்றும் கூட்டாளிகள் என மொத்தம் 21 பேரை போலீசார் கூண்டோடு கைது செய்துள்ளனர். இவர்கள் மீது மோசடி, சதித்திட்டம் தீட்டுதல் மற்றும் மிரட்டி பணம் பறித்தல் உள்ளிட்ட பிரிவுக ளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Source link