சென்னையில் கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கங்களைச் சந்தித்து வரும் தங்கத்தின் விலை, இன்று (மார்ச் 25) மீண்டும் அதிரடியாக உயர்ந்துள்ளது. சர்வதேசச் சந்தையில் நிலவும் போர்ச் சூழல் மற்றும் பொருளாதார மாற்றங்களால் தங்கத்தின் மீதான முதலீடுகள் அதிகரிப்பதே இந்தத் திடீர் விலையேற்றத்திற்குக் காரணமாகக் கூறப்படுகிறது.
கடந்த 12-ஆம் தேதி முதல் சரிவைச் சந்தித்து வந்த தங்கத்தின் விலை, கடந்த இரண்டு நாட்களாகவே பெரும் ஊசலாட்டத்தில் உள்ளது. நேற்று முன்தினம் ஒரே நாளில் சவரனுக்கு ரூ.7,600 குறைந்து, பின்னர் மாலையில் ரூ.5,360 உயர்ந்தது. நேற்றும் காலையில் விலை குறைந்த நிலையில், மாலையில் மீண்டும் உயர்ந்தது. இந்தத் தொடர் மாற்றங்களின் உச்சமாக, இன்று சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.2,800 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.1,08,800-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சென்னையில் இன்று ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.350 உயர்ந்து ரூ.13,600-ஆக உள்ளது. தங்கத்தைப் போலவே வெள்ளியின் விலையும் இன்று அதிகரித்துள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ.10 உயர்ந்து ரூ.260-க்கும், ஒரு கிலோ பார் வெள்ளி ரூ.2,60,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. கடந்த சில நாட்களாக நிலவிய விலை வீழ்ச்சிக்குப் பிறகு, இன்று ஏற்பட்டுள்ள இந்த உயர்வு நகை வாங்குவோரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

