தமிழகத்தில் இளம் வாக்காளர்கள் எண்ணிக்கை 1.18 கோடி – தேர்தல் ஆணையம் தகவல்

சென்னை,

தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் சூழலில், கடந்த 26 மற்றும் 27 ஆகிய தேதிகளில் தேர்தல் ஆயத்தப் பணிகள் குறித்து தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் தலைமையிலான குழுவினர் சென்னையில் ஆய்வு மேற்கொண்டனர்.

இதனை தொடர்ந்து தமிழகத்தில் உள்ள 188 பொது தொகுதிகள், 44 பட்டியல் மற்றும் 2 பட்டியலின பழங்குடி தொகுதிகளை உள்ளடக்கிய 234 சட்டமன்ற தொகுதிகளிலும் தேர்தலை முன்னிட்டு மேற்கொள்ளப்பட வேண்டிய தொடர் நடவடிக்கைகளை தேர்தல் ஆணையம் அறிவித்தது.

இந்த நிலையில், தேர்தல் ஆணையம் தரப்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் உள்ள இளம் வாக்காளர்களின் எண்ணிக்கை 1.18 கோடி என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இளம் வாக்காளர்களை ஒருங்கிணைக்கும் வகையில், கல்லூரிகள் உள்ளிட்ட இடங்களில் தேர்தல் தொடர்பான விழிப்புணர்வு பிரசாரங்கள் மேற்கொள்வதற்காக 3,060 உதவி தேர்தல் பதிவு அதிகாரிகளை தேர்தல் ஆணையம் நியமித்துள்ளது.

முன்னதாக கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தொடங்கிய வாக்காளர் பட்டியலின் சிறப்பு தீவிர திருத்தம்(SIR) பணிகளுக்கு பிறகு, தமிழகத்தில் மொத்தம் உள்ள வாக்காளர்களின் எண்ணிக்கை 5,67,07,380 என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பட்டியலில் 2,89,60,838 பெண் வாக்காளர்கள் உள்ள நிலையில், 2,77,38,925 ஆண் வாக்காளர்கள் மற்றும் 7,617 மூன்றாம் பாலினத்தவர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Source link