தமிழகத்தில் பனை தொழிலை மேம்படுத்த; கள் இறக்க அனுமதி: சீமான் பேச்சு

தூத்துக்குடி,

தூத்துக்குடி அண்ணாநகரில் நேற்று நடைபெற்ற பிரம்மாண்ட பிரசாரக் கூட்டத்தில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்துகொண்டு பேசினார். தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த அக்கட்சி வேட்பாளர்கள் ஜேக்கப் தேவதாஸ் அபிஷேக் (தூத்துக்குடி), பாண்டி (கோவில்பட்டி), சண்முகசுந்தரம் (ஸ்ரீவைகுண்டம்), அனுசியா (ஓட்டப்பிடாரம்), ஒபிலியா (திருச்செந்தூர்), பாலாஜி ராமச்சந்திரன் (விளாத்திகுளம்) ஆகியோரை ஆதரித்து அவர் வாக்கு சேகரித்தார்.

பிரசாரத்தில் சீமான் பேசியபோது, “நாம் தமிழர் கட்சி ஆட்சிக்கு வந்தால் விவசாயிகள் மற்றும் மீனவர்கள் அரசு ஊழியர்களாக்கப்படுவர். மீனவர்களுக்கு ஆயிரக்கணக்கான படகுகள் வழங்கப்பட்டு, மீன் சந்தைகள் மற்றும் குளிர்பதனக் கிடங்குகள் அமைக்கப்படும். ‘நெய்தல் அங்காடி’ மற்றும் ‘மீனவர் வைப்பகம்’ உருவாக்கப்படும்.

தமிழகத்தில் பனை தொழிலை மேம்படுத்த கள் இறக்க அனுமதி அளிக்கப்படும். இலவசங்களை வழங்க மாட்டேன். மாறாக, அனைவருக்கும் சமமான தரமான கல்வி, மருத்துவம், சுத்தமான குடிநீர் மற்றும் வேலைவாய்ப்பை உறுதி செய்வேன். இதன் மூலம் மக்கள் தங்களுக்கு தேவையானவற்றை தாங்களே வாங்கிக்கொள்ளும் பொருளாதாரத் திறனைப் பெறுவார்கள்” என்றார்.

மேலும் அவர், தூத்துக்குடியில் நிகழ்ந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து பேசியபோது, “அநீதியை எதிர்த்து போராடி வெற்றி கண்டதுதான் இந்த மண்ணின் சிறப்பு. ஆனால், துப்பாக்கிச் சூடு நடத்திய போலீசாருக்கு பதவி உயர்வு வழங்கி அரசு அழகு பார்க்கிறது” என குற்றம் சாட்டினார்.

மக்களின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்து, அவர்களை தற்சார்பு வாழ்வு வாழ வைக்கத் துடிக்கும் ‘ஏர் சுமக்கும் உழவர்’ சின்னத்திற்கு ஆதரவு தருமாறு அவர் மக்களிடம் கேட்டுக்கொண்டார்.

Source link