சென்னை,
அரசியலில் யாரும் நிரந்தர நண்பனும் இல்லை, நிரந்தர எதிரியும் இல்லை என்பது எழுதப்படாத விதி. தேர்தலுக்கு தேர்தல் இது உறுதி செய்யப்பட்டு வருகிறது. இதற்கு, கடந்த காலங்களில் நடைபெற்ற நாடாளுமன்ற, சட்டமன்ற தேர்தல்களே சாட்சி. அதுபோன்ற நிகழ்வு வரும் சட்டசபை தேர்தலிலும் நடைபெறும் என்றே தெரிகிறது.
இதுவரை நடைபெற்ற 16 சட்டசபை தேர்தல் வரலாற்றில் இல்லாத வகையில், இந்த முறை ஆளுங்கட்சியான தி.மு.க. 26 கட்சிகளுடன் மெகா கூட்டணியை அமைத்துக்கொண்டு தேர்தல் களத்தில் இறங்குகிறது. இதுமட்டுமல்லாது, 100-க்கும் மேற்பட்ட இயக்கங்கள் மற்றும் சங்கங்களின் ஆதரவும் தி.மு.க. கூட்டணிக்கு கிடைத்துள்ளது.
இப்படி பலம் பொருந்திய படையை வெல்ல வேண்டும் என்றால், எதிரணியினர் அதற்கு ஏற்ற வகையிலான படை பலத்துடன் தேர்தலை எதிர்கொள்ள வேண்டும். ஆனால், பிரதான எதிர்க்கட்சியான அ.தி.மு.க. கூட்டணியில் பா.ஜ.க., பா.ம.க., அ.ம.மு.க., த.மா.கா. மற்றும் சில சிறிய கட்சிகளே உள்ளன. இந்த கட்சிகளின் பலம் வலுவான தி.மு.க. கூட்டணியை எதிர்க்க போதாது என்பதை அதிமுக, பா.ஜ.க. தலைவர்கள் உணர்ந்துள்ளனர். அதனால்தான் கூட்டணியை பலப்படுத்தவும் முயற்சி மேற்கொண்டு வந்தனர். ஆனால், அதற்கு வெற்றி கிடைக்கவில்லை.
இந்த முறை, ஆளுங்கட்சி மற்றும் ஆண்ட கட்சிக்கு சவால் அளிக்கும் வகையில் புதிதாக களம்காண உள்ள நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகமும் தேர்தலில் அதிக வாக்குகளை அள்ளும் என்று கணிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, இளைஞர்கள் மற்றும் முதல் தலைமுறை வாக்காளர்களும், ஆட்சி மாற்றத்தை விரும்பும் வாக்காளர்களும் விஜய் கட்சிக்கு அதிகம் வாக்களிப்பார்கள் என்று கூறப்படுகிறது. இது தேர்தலில் எந்த அளவுக்கு வெற்றியை கொடுக்கும் என்பது பெரிய எதிர்பார்ப்பாக உள்ளது.
நடிகர் விஜய்யின் அரசியல் வருகையை கருத்தில் கொண்டே, இந்த முறை ஆளுங்கட்சியான தி.மு.க. தேர்தலை புதிய வியூகங்களுடன் அணுகிவருகிறது. ஒரு பக்கம் வலுவான கூட்டணியை அமைத்தாலும், மறுபக்கம் ஆட்சி அதிகாரத்தை பயன்படுத்தி மக்களுக்கான நலத்திட்டங்களையும் அடுத்தடுத்து அறிவித்து வருகிறது.
அந்த வகையில், நாளை திருச்சியில் நடைபெற உள்ள திமுக மாநாட்டிலும் பெண்களை கவரும் வகையில் முக்கிய அறிவிப்பு இடம்பெறும் என்று கூறப்படுகிறது. இதுபோக, தி.மு.க. தேர்தல் அறிக்கையிலும் அறிவிப்புகள் சரவெடியாக தெறிக்கவிடப்பட இருக்கிறதாம்.
இதுபோன்ற நிலையில், அ.தி.மு.க. – பா.ஜ.க.வை சேர்ந்த தலைவர்கள், கூட்டணியை பலப்படுத்தி தேர்தல் களத்தில் வெற்றிக்கான வியூகங்களை எப்படி வகுப்பது என்று மறைமுக ஆலோசனையில் ஈடுபட்டு வந்தனர். மறுபக்கம், புலி வாலை பிடித்த கதையாக திரைத்துறையில் இருந்து அரசியல் அவதாரம் எடுத்த விஜய்க்கும் பிரச்சினைக்கு மேல் பிரச்சினை குடும்ப ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் வந்து கொண்டே இருக்கின்றன.
அந்த வகையில், நடைபெற உள்ள சட்டசபை தேர்தல் அ.தி.மு.க., பா.ஜ.க., த.வெ.க. ஆகிய 3 கட்சிகளுக்குமே முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்துள்ளது. இந்த தேர்தலில் தி.மு.க. வெற்றிபெற்று மீண்டும் ஆட்சி அமைத்தால், அடுத்த 5 ஆண்டுகளில் மேற்கண்ட 3 கட்சிகளின் நிலையும் அதலபாதாளத்திற்கு சென்றுவிடும். அதை அக்கட்சி தலைவர்கள் உணர்ந்துள்ளதால்தான், எப்படியும் இந்த முறை திமுக கூட்டணியை வீழ்த்திவிட வேண்டும் என்று கங்கணம் கட்டி நிற்கின்றனர்.
ஆரம்பத்தில் தனது பிரசாரங்களில் தி.மு.க., பா.ஜ.க. ஆகிய 2 கட்சிகளையும் த.வெ.க. தலைவர் விஜய் கடுமையாக விமர்சனம் செய்தார். மாநிலம் மற்றும் மத்தியில் ஆளுங்கட்சியாக இவை இருப்பதால் விஜய் இவ்வாறு விமர்சனம் செய்கிறார் என்று கருதிய நேரத்தில், திடீரென எதிர்கட்சியான அ.தி.மு.க.வையும் வம்புக்கு இழுக்கத் தொடங்கினார்.
ஆனால், கடைசியான நடைபெற்ற 2 பிரசார கூட்டங்களில் பாஜகவை பற்றி விமர்சிக்கவில்லை. தி.மு.க. – அ.தி.மு.க. ஆகிய 2 கட்சிகளை மட்டுமே விமர்சனம் செய்தார். அவருடைய இந்த அரசியல் அணுகுமுறையே, ஏதோ நடக்கப்போகிறது என்ற சந்தேகத்தை கிளப்பியது.
இதுபோக, அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியும் இன்னும் கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு பேச்சு வார்த்தையை தொடங்காமல், கூட்டணி கதவையும் அடைக்காமல் பெரிய கட்சிகள் வரும் என்று காத்திருக்கிறார். ஏற்கனவே, காங்கிரஸ் கட்சி வரும் என்று விஜய் காத்திருந்த நிலையில், கடைசி நேரத்தில் தி.மு.க. தக்கவைத்துக்கொண்டது ஏமாற்றமாக அமைந்தது.
இதேபோல், கடந்த நாடாளுமன்ற தேர்தலில், தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியைவிட பா.ஜ.க. அதிக வாக்கு சதவீதத்தை பெற்று அசத்தியது. எனவே, சட்டமன்ற தேர்தலிலும் தனது வாக்கு வங்கியை நிரூபிக்க போராடி வருகிறது. இப்படி, அ.தி.மு.க., பா.ஜ.க., த.வெ.க. ஆகிய 3 கட்சிகளுக்கும் பிரச்சினைகள் இருப்பதால், தி.மு.க.வை வீழ்த்த ஒரே வழி 3 பேரும் ஒன்றிணைவதுதான் என்ற முடிவுக்கு அக்கட்சிகளின் தலைவர்கள் வந்துள்ளார்களாம்.
அந்த வகையில், த.வெ.க.வுடன் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா தரப்பில் இருந்து பேச்சு வார்த்தை நடக்கிறதாம். தொகுதி பங்கீடு மற்றும் ஆட்சி அதிகாரம் ஆகியவை குறித்து பேசப்படுகிறதாம். இதுவரை நடைபெற்ற பேச்சு வார்த்தையில் 70 சதவீதம் அளவுக்கு முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. தேர்தல் தேதி அறிவிக்கப்படும் முன்பு கூட்டணியும் முழு வடிவம் பெற்றுவிடும் என்று கூறப்படுகிறது.
அவ்வாறு, அ.தி.மு.க., பா.ஜ.க., த.வெ.க. கூட்டணி அமைந்தால், தி.மு.க. கூட்டணிக்கு கடும் சவால் அளிக்கும் என்று அரசியல் விமர்சகர்கள் உறுதிபடக் கூறுகிறார்கள். எனவே, இந்தத் தேர்தல் எதுமாதிரியும் இல்லாத வகையில் புது மாதிரியாக இருக்கும் என்றே தோன்றுகிறது.
