சென்னை,
‘ஆலிவ் ரிட்லி’ என்று அழைக்கப்படும் பங்குனி ஆமைகள் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதத்தில் இருந்து ஏப்ரல் மாதம் வரை கடற்கரையோரங்களுக்கு வந்து முட்டைகளையிட்டு செல்கின்றன. அந்த முட்டைகளை தமிழ்நாடு வனத்துறையும், தன்னார்வலர்களும் இணைந்து சேகரித்து அதனை பாதுகாப்பாக வைத்து குஞ்சுகள் வெளிவந்ததும், அதனை கடலில் விட்டு வருகின்றனர்.
அந்த வகையில் நடப்பாண்டில் பங்குனி ஆமைகள் டிசம்பர் மாதம் இறுதியில் இருந்து தமிழக கடற்கரையோரங்களில் முட்டைகளையிட்டு திரும்புகின்றன. அந்த முட்டைகளை தமிழ்நாட்டில் சென்னை, செங்கல்பட்டு, விழுப்புரம், நாகப்பட்டினம், ராமநாதபுறம் போன்ற கடலோர மாவட்டங்களில் 51 இடங்களில் 1,788 கூடுகளில் பராமரிக்க வனத்துறை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, இதுவரை 2 லட்சத்து 7 ஆயிரத்து 653 முட்டைகள் சேகரிக்கப்பட்டிருப்பதாகவும், அந்த முட்டைகளில் பிப்ரவரி மாதம் இறுதியில் இருந்து வெளிவந்த குஞ்சுகள் சிலவற்றை கடலிலும் விட்டிருப்பதாகவும் வனத்துறை தெரிவித்து இருக்கிறது.
கடந்த ஆண்டுகளை காட்டிலும் இந்த ஆண்டு முட்டைகளின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து இருப்பதாகவே சொல்லப்படுகிறது. இது ஆமைகளையும், அதன் முட்டைகளையும் பாதுகாக்க வனத்துறை எடுத்த முயற்சிக்கு கிடைத்த வெற்றியாகவே பார்க்கப்படுகிறது.
