தமிழக காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு தொடர்பாக எம்பி ஜோதிமணியின் அதிரடி குற்றச்சாட்டுகளை வைத்துள்ளதால் அரசியல் களத்தில் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.
மேலிடப் பொறுப்பாளர்கள்
ஜோதிமணி தனது அறிக்கையில், தொகுதிகளைத் தேர்வு செய்வதற்கு முன்பாக விரிவான ஆலோசனைகளும், கள யதார்த்தத்தை அடிப்படையாகக் கொண்ட விவாதங்களும் நடத்தப்பட வேண்டும் என்று தாங்கள் முன்வைத்த கோரிக்கையை மேலிடப் பொறுப்பாளர்கள் முற்றிலுமாக நிராகரித்துவிட்டதாகக் குறிப்பிட்டுள்ளார். அனைத்து முடிவுகளும் மிக ரகசியமான முறையில், ஒரு சில நபர்களுக்குள் மட்டுமே எடுக்கப்பட்டுள்ளதாக அவர் சாடியுள்ளார். பல தசாப்தங்களாகக் கட்சிக்காக ரத்தம் சிந்தி உழைத்த உண்மையான தொண்டர்களின் உழைப்பை, கட்சிக்கு எவ்விதப் பங்களிப்பும் செய்யாத சில புதிய நபர்கள் ‘விலை பேசி’ விற்பனை செய்வதைப் பார்த்துத் தன்னால் மௌனமாக இருக்க முடியாது என்று அவர் ஆவேசமாகத் தெரிவித்துள்ளார்.
கட்சியின் உண்மையான பலம்
“பொறுப்பாளர்கள், மாநிலத் தலைவர் மற்றும் சட்டமன்றக் கட்சித் தலைவர் மட்டுமே ஒரு பேரியக்கத்தின் முழு வடிவம் அல்ல. லட்சக்கணக்கான தொண்டர்களின் உணர்வுகளும், அவர்களின் அயராத உழைப்புமே இந்தக் கட்சியின் உண்மையான பலம்” என்று சுட்டிக்காட்டியுள்ள அவர், தலைமையின் தன்னிச்சையான போக்கைக் கடுமையாகச் சாடியுள்ளார். தொகுதிப் பட்டியல் அதிகாரப்பூர்வமாக வெளியான பிறகு, இதில் நடந்துள்ள முறைகேடுகள் மற்றும் குளறுபடிகள் குறித்துப் பகிரங்கமாக விரிவாகப் பேசப் போவதாகவும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
விற்பனை அணுகுமுறை
தொகுதிகளைத் தேர்வு செய்வதில் கடைப்பிடிக்கப்பட்ட இதே ‘விற்பனை அணுகுமுறை’ வேட்பாளர் தேர்விலும் தொடருமானால், தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியை யாராலும் காப்பாற்ற முடியாது என்ற அவரது எச்சரிக்கை, கட்சித் தொண்டர்களிடையே பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகளைக் கூட்டணிக் கட்சிகளிடம் தாரைவார்த்துவிட்டதாகவும், தங்களுக்கு வேண்டியவர்களுக்குச் சாதகமாகத் தொகுதிகளைத் தேர்வு செய்துள்ளதாகவும் எழுந்துள்ள புகார்கள், தேர்தலுக்கு முன்பே காங்கிரஸின் பலத்தை வலுவிழக்கச் செய்யும் என்று அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.
தலைமைக்கு எதிராகப் போர்க்கொடி
இந்த விவகாரம் தமிழக காங்கிரஸ் கட்சிக்குள் நிலவும் கோஷ்டிப் பூசலை மீண்டும் ஒருமுறை வெளிச்சத்திற்குப் போட்டுள்ளது. தேர்தல் களம் சூடுபிடித்துள்ள வேளையில், கட்சியின் ஒரு முக்கிய எம்பி-யே தலைமைக்கு எதிராகப் போர்க்கொடி தூக்கியிருப்பது கூட்டணிக்குள்ளும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜோதிமணியின் இந்தக் குற்றச்சாட்டுகளுக்குத் தமிழக காங்கிரஸ் தலைமை என்ன பதில் அளிக்கப்போகிறது என்பதும், வேட்பாளர் பட்டியலில் உண்மையான உழைப்பாளர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுமா என்பதும் வரும் நாட்களில் தெரியவரும்.
