தமிழக சட்டமன்ற தேர்தல் 2026: 4,654 வேட்பாளர்கள்- கடந்த தேர்தலை விட அதிகரித்த போட்டி! – final candidate list for the 2026 tamil nadu assembly elections 4654 applications

தமிழக சட்டமன்ற தேர்தல் 2026 நடைபெறுவதையொட்டி 4,654 வேட்பாளர்கள் களம் காண்கின்றனர். கடந்த தேர்தலை விட அதிகரித்த போட்டி நிலவி வருகிறது.

தமிழகத்தில் வரும் ஏப்ரல் 23-ஆம் தேதி நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலுக்கான இறுதி வேட்பாளர் பட்டியல் குறித்த அதிகாரப்பூர்வத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த முறை 234 தொகுதிகளிலும் சேர்த்து மொத்தம் 4,654 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இது கடந்த 2021-ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்களின் எண்ணிக்கையை விட அதிகமாகும். தமிழக அரசியலில் ஏற்பட்டுள்ள புதிய வரவுகள் மற்றும் பலமுனைப் போட்டிகள் காரணமாக இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாகக் கருதப்படுகிறது.

வேட்புமனுக்கள் பரிசீலனை மற்றும் தள்ளுபடி விவரங்கள்

இந்தத் தேர்தலுக்காக மாநிலம் முழுவதும் மொத்தம் 7,599 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. தேர்தல் ஆணையம் நடத்திய தீவிரப் பரிசீலனைக்குப் பிறகு, பல்வேறு காரணங்களால் 2,460 மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. மேலும், வேட்புமனுக்களைத் திரும்பப் பெறுவதற்கான கால அவகாசத்தின் போது 485 பேர் தங்களது மனுக்களை வாபஸ் பெற்றுக்கொண்டனர்.

கோயம்புத்தூர்

குறிப்பாக கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள தொண்டாமுத்தூர் தொகுதியில் அதிகபட்சமாக 50 வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டன. அங்கு தாக்கல் செய்யப்பட்ட 77 மனுக்களில் முறையான ஆவணங்கள் இல்லாதது போன்ற காரணங்களால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. அனைத்து நடைமுறைகளும் முடிந்த நிலையில், தற்போது 4,654 பேர் இறுதிக்கட்டத்தில் களத்தில் உள்ளனர்.

அதிக மற்றும் குறைந்த வேட்பாளர்கள் கொண்ட தொகுதிகள்

கரூர் மாவட்டம் இம்முறையும் அதிக வேட்பாளர்களைக் கொண்ட தொகுதியாக உருவெடுத்துள்ளது. கரூரில் தாக்கல் செய்யப்பட்ட 108 மனுக்களில் 85 மனுக்கள் தகுதியுள்ளவை என அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கு நேர்மாறாக, அம்பாசமுத்திரம் தொகுதியில் மிகக்குறைந்த அளவாக வெறும் 5 வேட்பாளர்கள் மட்டுமே களம் காண்கின்றனர்.

நீலகிரி

நீலகிரி மாவட்டத்தில் உள்ள உதகமண்டலம் மற்றும் கூடலூர் (தனி) தொகுதிகளில் தலா 6 வேட்பாளர்களும், ஒரத்தநாடு தொகுதியில் 9 வேட்பாளர்களும் போட்டியிடுகின்றனர். மாநிலம் முழுவதும் சுமார் 14 தொகுதிகளில் 30 முதல் 37 வேட்பாளர்கள் வரை போட்டியிடும் சூழல் நிலவுகிறது. தலைநகர் சென்னையைப் பொறுத்தவரை, பெரம்பூரில் 47, கொளத்தூரில் 41 மற்றும் திரு.வி.க நகரில் 40 வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டுள்ளன. சென்னையில் இந்த மூன்று தொகுதிகளில்தான் அதிகப்படியான போட்டி நிலவுகிறது.

2021 தேர்தலுடன் ஒரு ஒப்பீடு

கடந்த 2021-ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் மொத்தம் 6,665 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. பரிசீலனை மற்றும் வாபஸ் பெற்ற பிறகு இறுதியாக 3,998 வேட்பாளர்கள் மட்டுமே களத்தில் இருந்தனர். ஆனால், இந்த முறை வேட்புமனுத் தாக்கலும் சரி, இறுதி வேட்பாளர்களின் எண்ணிக்கையும் சரி, கணிசமாக உயர்ந்துள்ளது.

தவெக

இந்த உயர்வுக்கு மிக முக்கியமான காரணமாகப் பார்க்கப்படுவது, நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் (TVK) அரசியல் பிரவேசம் ஆகும். திமுக, அதிமுக மற்றும் பாஜக தலைமையிலான கூட்டணிகளுடன் தற்போது தவெக-வும் இணைந்திருப்பதால், தமிழகத்தில் முன்னெப்போதும் இல்லாத வகையில் ஒரு வலுவான சதுரங்கப் போட்டி உருவாகியுள்ளது. இத்தகைய பலமுனைப் போட்டியின் காரணமாகவே சுயேச்சை வேட்பாளர்கள் மற்றும் புதிய கட்சிகளின் பங்களிப்பு அதிகரித்துள்ளதாக அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

தேர்தல் ஆணையம்

வெள்ளிக்கிழமை அன்று தேர்தல் ஆணையம் ஒவ்வொரு தொகுதிக்கான இறுதிப் பட்டியலை அதிகாரப்பூர்வமாக வெளியிடவுள்ளது. வேட்பாளர்கள் இறுதி செய்யப்பட்ட நிலையில், தமிழகத்தின் மூலை முடுக்குகளில் எல்லாம் தேர்தல் பிரச்சாரம் தற்போது சூடுபிடித்துள்ளது.