சென்னை,
தமிழகத்தில் நடத்தப்பட இருக்கும் சட்டமன்ற தேர்தலுக்கான முன்னேற்பாடுகள் குறித்து ஆய்வு செய்வதற்காக துணை தேர்தல் ஆணையர் பானு பிரகாஷ் தலைமையிலான அதிகாரிகள் குழுவினர் நேற்று தமிழகம் வந்தனர். சென்னையில் முகாமிட்டுள்ள இந்த குழுவினர், இன்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டனர்.
சென்னை ஆர்.ஏ. புரத்தில் உள்ள தனியார் ஓட்டலில் துணை தேர்தல் ஆணையர் பானு பிரகாஷ் தலைமையில் இந்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. மார்ச் முதல் வாரத்தில் தேர்தல் தொடர்பான அறிவிப்பு வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், இந்த ஆலோசனை கூட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
தொடர்ந்து நாளை அனைத்து மாவட்ட தேர்தல் அதிகாரிகளுடன் (கலெக்டர்கள்) துணை தேர்தல் ஆணையர் ஆலோசனை மேற்கொள்கிறார். அதன் பின்னர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகளுடன் ஆலோசனை மேற்கொள்ளப்படுகிறது. இந்த ஆலோசனைக் கூட்டத்தின்போது, சட்டம் ஒழுங்கு பிரச்சினை வரக்கூடிய தொகுதிகள், வாக்குச்சாவடிகள் ஆகியவை பற்றி ஆய்வு மேற்கொள்ளப்படும்.
