தமிழக பகுதியை உரிமை கொண்டாடும் கேரளா; நடவடிக்கை எடுக்கவேண்டும் – ராமதாஸ்

சென்னை,

பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது;-

1956 ஆம் ஆண்டு மாநில மறுசீரமைப்புச் சட்டம் (States Reorganisation Act) மூலம் மொழிவாரி மாநிலங்கள் அடிப்படையில் மாநில எல்லைகள் நிர்ணயிக்கப்பட்டது. அந்தவகையில் இன்றைய தமிழக, கேரள எல்லைகள் நிரந்தரமாக அமைக்கப்பட்டுள்ளன.

நீலகிரி மாவட்டம், பந்தலூர் கிராமம் அருகே தமிழக, கேரள மாநிலங்களின் எல்லையாக தாளூர் பகுதியில் உள்ள ஒரு பாலம் 2 மாநிலங்களையும் பிரிக்கிறது. இந்நிலையில் சிலநாட்களுக்கு முன்பு இப்பகுதியில் கேரள பொதுப்பணித்துறையினர், “கேரளா உங்களை வரவேற்கிறது” என்று அறிவிப்பு பலகை வைத்தனர்.

தமிழகத்துக்கு சொந்தமான பகுதியை கேரளா சொந்தம் கொண்டாடுவதாக கூறி அப்பகுதியினர் திரண்டனர். இதனால், அங்கு பதட்டம் ஏற்பட்டது. 2 மாநில போலீசாரும் அங்கு குவிக்கப்பட்டனர். திரண்ட மக்களிடம் வருவாய்த்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி, உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர்.

2018-ல் தமிழக பகுதியில் கேரளா சார்பில் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டது. இதை அறிந்த அப்பகுதி மக்கள் தமிழக நிலம் பறிபோவதாக நீலகிரி மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு கொடுத்தனர். அந்த பகுதியை பார்வையிட்ட மாவட்ட நிர்வாகம் கேரள மாநில நிர்வாகத்திடம் பேசி இதற்கு தீர்வு காணப்படும் என்று உறுதி அளித்தது.

இதற்கிடையே 2018-ம் ஆண்டு கேரள நெடுஞ்சாலை துறையினர் அந்தப் பகுதி கேரளாவை சேர்ந்தது என்பதை குறிக்கும் வகையில் சிவப்பு கோடு போட்டனர். அத்துடன், ‘நென்மேணி ஊராட்சி உங்களை வரவேற்கிறது’ என்று தமிழக எல்லையில் அறிவிப்பு பலகை வைத்தனர்.

இப்போது இந்த பிரச்சனை மீண்டும் எழுந்துள்ளது.

நீலகிரி மாவட்ட ஆட்சியர் பவ்யா, “தமிழக எல்லையான தாளூர், கேரள மாநிலம் வயநாடு மாவட்ட எல்லையாகவும் உள்ளது. அந்தப் பகுதியில் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டதால் பிரச்சனை எழுந்துள்ளது. தாளூர் பிரச்சனை தொடர்பாக வயநாடு மாவட்ட ஆட்சியரிடம் பேசியுள்ளோம்.ஏற்கனவே இருந்த அறிவிப்பு பலகைக்கு பதிலாக புது பலகை வைத்துள்ளனர். அதை அகற்ற கூறியுள்ளோம். இந்த பிரச்சனை தொடர்பாக 2 மாநிலம் சார்பில் டிஜிட்டல் சர்வே செய்யப்படவுள்ளது. அதுவரை முன்பிருந்த நிலையே தொடர வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 2 மாநிலங்கள் சார்பில் சர்வே முடிந்ததும் எல்லை தொடர்பாக முடிவு செய்யப்படும்” என்று கூறியுள்ளார்.

ஏற்கனவே முல்லை பெரியாறு அணை விவகாரத்தில் அணையின் பாதுகாப்பு, நீர்மட்டம் போன்றவைகளில் இரு மாநிலங்களுக்கும் கருத்து வேறுபாடு உள்ளது. மேலும் தேவிகுளம் – பீர்மேடு பகுதிகளை தமிழகத்தில் இணைக்க வேண்டும் என்ற கோரிக்கையும் நிலுவையில் உள்ளது.

எனவே இவ்விவகாரங்கள் தொடர்பாக இரு மாநிலங்களுக்கிடையே குழு அமைத்து இவ்விவகாரங்களுக்கு நிரந்தர தீர்வுகாண வேண்டும். மேலும் இரு மாநில எல்லையோர பகுதிகளில் வாழும் மக்களின் அமைதிக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுக்கவேண்டியது இரு மாநிலங்களின் கடமையாகும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source link