தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் பொதுச்செயலாளர் சஸ்பெண்ட்

சென்னை,

தமிழக சட்டசபை தேர்தல் ஏப்ரல் மாதம் 23-ந் தேதி நடைபெற உள்ளதை முன்னிட்டு, அதற்கான வேட்புமனு தாக்கல் வரும் 30-ந் தேதி தொடங்க இருக்கிறது. சட்டசபை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை மே 4ம் தேதி நடைபெற்று, அதே நாளில் தேர்தல் முடிவுகளும் அறிவிக்கப்பட உள்ளது.

இந்த சூழலில் தேர்தலில் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைக்க த.வெ.க. பேச்சுவார்த்தை நடத்தியதாக தகவல்கள் வெளியானது. இருப்பினும், கடைசி நேரத்தில் திமுகவுடன் காங்கிரஸ் தொகுதி பங்கீடு ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டதால், த.வெ.க. தனித்துப் போட்டியிடுவதாக அறிவித்தது.

இதனிடையே சமீபத்தில் பொதுக்கூட்ட மேடையில் பேசிய த.வெ.க. நிர்வாகி ஆதவ் அர்ஜுனா, “தி.மு.க.விடன் பணத்தை வாங்கிக் கொண்டு சில காங்கிரஸ் நிர்வாகிகள் கூட்டணி அமைத்துள்ளனர். காங்கிரஸ் ஒன்றுமில்லாமல் ஆகிவிட்டதால், அக்கட்சியின் நிர்வாகிகள் த.வெ.க.வில் இணைய வாசலில் காத்துக் கொண்டுள்ளனர். இரண்டு நாட்களில் காங்கிரஸ் நிர்வாகிகள் பலர் த.வெ.க.வில் இணைய உள்ளனர்” என்று தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் தமிழ்நாடு காங்கிரஸ் பொது செயலாளர் டி. செல்வத்தை சஸ்பெண்ட் செய்து மாநில தலைவர் செல்வப்பெருந்தகை உத்தரவிட்டுள்ளார். கட்சியின் கட்டுப்பாட்டை மீறி செயல்பட்டதால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Source link