படக்குறிப்பு, தமிழ்நாட்டில் புதிய தலைமை செயலாளராக சாய் குமார் ஐஏஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார்கட்டுரை தகவல்
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், தமிழக அரசின் தலைமை செயலாளரை மாற்றி தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
தேர்தல் ஆணையத்தின் இந்த நடவடிக்கைக்கு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
ஆனால் தேர்தல் சமயத்தில் அதிகாரிகள் மாற்றப்படுவது தமிழ்நாட்டிற்கு புதிதல்ல என அதிமுக எம்.பி ஐ.எஸ் இன்பதுரை தெரிவித்துள்ளார்.
படக்குறிப்பு, தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் 2026, தொடர்பான செய்திகள், காணொளிகள், நேர்காணல்களை படிக்க, பார்க்க…
புதிய தலைமை செயலாளர் நியமனம்
தமிழ்நாட்டில் ஒரே கட்டமாக ஏப்ரல் 23- ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடக்க உள்ளது.
இந்த நிலையில் தமிழ்நாடு தலைமை செயலாளர் முருகானந்தம் மற்றும் லஞ்ச ஒழிப்பு துறை டிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம் ஆகியோரை மாற்றி தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
தேர்தல் ஆணையம் இன்று வெளியிட்ட அறிவிப்பில் தமிழ்நாட்டில் புதிய தலைமை செயலாளராக சாய் குமார் ஐஏஎஸ் நியமிக்கப்படுதாகவும், லஞ்ச ஒழிப்பு துறை டிஜிபியாக சந்தீப் மிட்டலை நியமிப்பதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது.
மேலும் மாற்றப்பட்ட அதிகாரிகளை எந்த தேர்தல் பணிகளிலும் ஈடுபடுத்தக் கூடாது எனவும் அதில் கூறப்பட்டுள்ளது.
இந்த நிலையில் தமிழ்நாட்டில் தலைமை செயலாளராக இருந்த முருகானந்தம் மாற்றப்பட்டதற்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது முதலமைச்சர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், “பாஜகவுக்கு ஆதரவாக செயல்பட்டு வரும் தேர்தல் ஆணையம் தமிழ்நாட்டின் தலைமைச் செயலாளரை மாற்றி ஒரு தலைபட்சமான அரசியல் அத்துமீறலில் ஈடுபட்டிருக்கிறது” என குறிப்பிட்டுள்ளார்.
படக்குறிப்பு, தலைமை செயலாளர் மாற்றத்திற்கு முதலமைச்சர் கண்டனம் தெரிவித்துள்ளார்.
சட்டம் ஒழுங்கு மற்றும் தேர்தல் வேலைகள் தொடர்பாக அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க தேர்தல் ஆணையத்திற்கு முழு அதிகாரம் உள்ளது என முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி பாலச்சந்திரன் தெரிவித்தார்.
பிபிசி தமிழிடம் பேசிய அவர்,”தலைமை செயலாளர் பாரபட்சமாகவோ, ஒரு தலைப்பட்சமாகவோ செயல்பட்டதாக அறிக்கை வந்தால் அதன் உண்மை தன்மையை ஆராய வேண்டியது தேர்தல் ஆணையத்தின் கடமை. ஆனால் இந்த விவகாரத்தில் தேர்தல் ஆணையம் ஒரு தலைபட்சமாக செயல்பட்டுள்ளது போல் தெரிகிறது” என்று அவர் தெரிவித்தார்.
பிபிசி தமிழிடம் பேசிய மூத்த பத்திரிகையாளர் பிரியன், ”தமிழ்நாடு, மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களின் தலைமை செயலாளர்களை மாற்றியது போல அசாம், புதுச்சேரியில் செய்யாதது ஏன்?” என்றார்
படக்குறிப்பு, ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி பாலச்சந்திரன்
அதிமுக கூறுவது என்ன?
அதிகாரிகள் மாற்றம் புதிதல்ல என அதிமுக வழக்கறிஞரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஐ.எஸ் இன்பதுரை கூறுகிறார்.
”தேர்தல் அறிவிப்பு வெளியானதும் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வருகிறது. அதில் அதிகாரிகளை மாற்றம் செய்ய தேர்தல் ஆணையத்திற்கு அதிகாரம் உள்ளது.” என பிபிசி தமிழிடம் கூறினார்
”தேர்தல் சமயத்தில் சட்டம் ஒழுங்கு அல்லது தேர்தல் விதிகள் மீறப்படும்போது அதை கண்டு கொள்ளாமல் இருக்கும் பட்சத்தில் அதிகாரிகள் மீது புகார்கள் வந்தால் அவர்களை தேர்தல் ஆணையம் மாற்றலாம்” என்று அவர் தெரிவித்தார்.
மேலும், ”சிபிஐ, அமலாக்கத்துறை, தேர்தல் ஆணையம் உள்ளிட்டவற்றை பாஜகவின் கைப்பாவை என்று கூறும் முதல்வர் தமிழ்நாட்டில் உள்ள காவல்துறை திமுகவின் கைப்பாவை என்று சொன்னால் ஒப்புக்கொள்வாரா?” என்று கேள்வி எழுப்பினார்
படக்குறிப்பு, உங்கள் பகுதியில் போதைப்பொருள் பிரச்னை உள்ளதா? கருத்துகள், அனுபவங்களை பகிர இங்கே கிளிக் செய்யவும்
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
