தமிழ்நாட்டை வஞ்சிக்கும் பிரதமரை மக்கள் மன்னிக்க மாட்டார்கள்: செல்வப்பெருந்தகை

சென்னை,

காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது;

”கடந்த 40 நாட்களில் நான்கு முறை பிரதமர் நரேந்திர மோடி தமிழ்நாட்டில் சூறாவளி சுற்றுப்பயணம் செய்து தேர்தல் தேதி அறிவிப்பதற்கு முன்பாகவே திட்டங்களையும், நிதி ஒதுக்கீடுகளையும் அறிவித்து தமிழகத்தை கபளீகரம் செய்ய முயற்சித்து வருகிறார். மதுரையை சர்வதேச விமான நிலையமாக அறிவித்து மல்லிகைப்பூ விற்பனை பற்றி கனவு காணும் நரேந்திர மோடி, மதுரை எய்ம்ஸ் கனவு கடந்த 10 ஆண்டுகளாக நிறைவேறாத கானல் நீராக மாறியது குறித்து ஒரு வார்த்தை கூட பேசவில்லை.

தமிழ்நாட்டு மக்களை கவர்வதற்காகவே வேட்டி, சட்டை அணிந்து திடீர் வேடம் தரித்திருக்கிறார். கடந்த 12 ஆண்டுகளாக ஏழை, எளியோரின் மருத்துவ கனவை சிதைக்கும் நீட் தேர்வு திணிப்பு, புதிய கல்விக் கொள்கை என்ற போர்வையில் இந்தி மொழி திணிப்பு, இக்கொள்கையை ஏற்காத காரணத்தால் சமக்ரா சிக்ஷா அபியான் திட்டத்தில் தமிழகத்திற்கு தர வேண்டிய நிலுவைத் தொகையான ரூபாய் 3458 கோடியை வழங்காமல் வஞ்சிப்பது, ஆளுநர் மூலம் தமிழக வளர்ச்சியை முடக்கும் முயற்சிகள், கோவை – மதுரை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு ஒப்புதல் தர மறுப்பு, பெங்களுர் விமான நிலையத்திற்குப் போட்டியாக, ஒசூர் விமான நிலையம் அமைந்துவிடும் என்பதற்காக அனுமதி மறுப்பு, தமிழர்களின் தொன்மையான வரலாற்றை பறைசாற்றும் கீழடி அகழாய்வு அறிக்கையை ஏற்க மறுப்பு என தொடர்ந்து தமிழ்நாட்டை வஞ்சித்து வரும் பிரதமர் நரேந்திர மோடி, எத்தகைய வேடம் போட்டாலும் தமிழ்நாட்டு மக்கள் மறக்க மாட்டார்கள், மன்னிக்க மாட்டார்கள்.

தமிழரைப் போல உடையணிந்து வருகிற நரேந்திர மோடி செம்மொழித் தகுதி பெற்ற தென்னிந்திய மொழிகளுக்கு 2014 முதல் 2025 வரை ஒதுக்கிய மொத்த தொகை ரூபாய் 148 கோடி. இதில் தமிழ் மொழிக்கு ஒதுக்கியது ரூபாய் 13 கோடி. ஆனால், 14,000 மக்கள் மட்டுமே பேசக் கூடிய சமஸ்கிருத மொழிக்கு ஒதுக்கிய தொகை ரூபாய்; 2532 கோடி. தமிழ் மொழி, திருக்குறள், பாரதியார் மீது பற்று இருப்பதாக பாசாங்கு செய்கிற பிரதமர் மோடி, தமிழ் மொழியை புறக்கணிப்பதன் மூலம் அவரை யார் என்று தமிழ் மக்கள் நன்கு அறிவார்கள்.

கடந்த 7 ஆண்டுகளில் வரிப் பகிர்வில் தமிழ்நாடு ஒன்றிய அரசுக்கு கொடுத்தது 7.38 லட்சம் கோடி ரூபாய். ஆனால், தமிழ்நாடு வரிப் பகிர்வில் திரும்ப பெற்றது ரூபாய் 2.56 லட்சம் கோடி. 2020-21 முதல் 2024-25 வரை அனைத்து மாநிலங்களிலும் மொத்தமாக செலுத்திய வரியில் உத்தரபிரதேச மாநிலம் செலுத்தியது 4.6 சதவிகிதம். ஆனால், உத்தரபிரதேச மாநிலம் வரி பகிர்வாக திரும்ப பெற்ற தொகை 15.8 சதவிகிதமாகும். குறைந்த வரியை செலுத்தி விட்டு அதிகமான வரி பகிர்வை பெற்றதை விட அப்பட்டமான பாரபட்ச போக்கு வேறு எதுவும் இருக்க முடியாது. இத்தகைய வரி பகிர்வினால் தான் தமிழ்நாடு ஒரு ரூபாய் வரியாக கொடுத்தால் 29 பைசா மட்டுமே திரும்ப கிடைக்கிறது. ஆனால், பா.ஜ.க. ஆளும் உத்தரபிரதேச மாநிலத்திற்கு ரூபாய் 2.73, பீகார் மாநிலத்திற்கு ரூபாய் 7.6, மத்தியபிரதேசத்திற்கு ரூபாய் 2.42, சத்தீஸ்கர் மாநிலத்திற்கு ரூபாய் 1.96 வரிப் பகிர்வாக திரும்ப கிடைக்கிறது. இந்த புள்ளி விவரங்களை பார்க்கிற போது, நரேந்திர மோடி பா.ஜ.க. ஆளும் மாநிலங்களின் கண்ணில் வெண்ணெயும், எதிர்கட்சிகள் ஆளுகிற மாநிலங்களின் கண்ணில் சுண்ணாம்பும் தடவுகிற போக்கைத் தான் வெளிப்படுத்துகிறது. இதன்மூலம் வரிப் பகிர்வில் தமிழ்நாடு வஞ்சிக்கப்பட்டு வருவதை உறுதியாக கூற முடியும்.

செஸ் வரி விதித்து தனது கஜானாவை மாநிலங்களுக்கு பகிர்ந்தளிக்காமல் அபகரித்துக் கொள்கிறது. மொத்த வரியில் செஸ் வரி 2019-20 இல் 18.2 சதவிகிதமாக இருந்தது, 2021-22 இல் 28.1 சதவிகிதமாக உயர்ந்திருக்கிறது. அதனால், 2024-25 இல் ரூபாய் 7 லட்சம் கோடி செஸ் வரி விதித்து அதன்மூலம் வருமானத்தை மோடி அரசு மாநிலங்களுக்கு வழங்காமல் அபகரித்துக் கொள்கிறது.16-வது நிதிக்குழு பரிந்துரையின்படி 2009 முதல் 2025 வரை மாநிலங்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட வேண்டிய ரூபாய் 5.61 லட்சம் கோடியை வழங்காமல் ஒன்றிய அரசு மறுப்பது அரசமைப்புச் சட்டப்படி விரோதமான செயலாகும்.

நேற்று திருச்சியில் பேசிய நரேந்திர மோடி, தி.மு.க. அரசு மீது ஊழல் குற்றச்சாட்டு கூறியிருக்கிறார். கார்ப்பரேட்டுகளுக்கு சலுகை அளித்து அவர்களிடமிருந்து தேர்தல் பத்திர நன்கொடைகளை பா.ஜ.க. தொடர்ந்து அதிகமாக பெற்று நிதியை குவித்து வருகிறது. 2018 முதல் 2025 வரை இதுவரை ரூபாய் 16,000 கோடி மதிப்புள்ள தேர்தல் பத்திரங்கள் மூலம் நிதி வழங்கப்பட்டிருக்கிறது. இதில் பாரதிய ஜனதா மட்டும் ரூபாய் 6565 கோடி நன்கொடையாக பெற்றிருக்கிறது. இது மொத்த நன்கொடையில் 57 சதவிகிதமாகும். இத்தகைய நிதிகளை ஆளுங்கட்சியாக இருக்கிற பா.ஜ.க.வுக்கு கார்ப்பரேட்டுகள் வழங்குவது ஊழல் இல்லை என்றால் எது ஊழல் என்பதை நரேந்திர மோடி விளக்க வேண்டும். திரைமறைவில் லஞ்சமாக பெற வேண்டிய தொகையை சட்டப்பூர்வமாக தேர்தல் பத்திரங்கள் மூலமாக பெறுவது தான் விஞ்ஞான ரீதியிலான ஊழல் என்று உறுதியாக கூற முடியும்.

கடந்த 12 ஆண்டுகால பா.ஜ.க. ஆட்சியில் மக்களிடையே சமநிலைத்தன்மையற்ற வருமான பகிர்வு நடைபெற்று வருகிறது. இதுகுறித்து சர்வதேச நிறுவனம் சமீபத்தில் வெளியிட்ட அறிக்கையின்படி, உயர்நிலையில் உள்ள 10 சதவிகிதத்தினர் 58 சதவிகித தேசிய வருமானத்தையும், கீழே உள்ள 50 சதவிகிதத்தினர் 15 சதவிகித வருமானத்தை மட்டுமே பெறுகின்றனர். 10 சதவிகித கோடீஸ்வரர்கள் மொத்த சொத்தில் 3 இல் 2 பங்கு சொத்தை மோடி ஆட்சியில் அபகரித்திருக்கிறார்கள். இதன்மூலம் 1 சதவிகித கோடீஸ்வரர்கள் 40 சதவிகித சொத்துகளை குவிப்பதற்கு யார் காரணம் ? நரேந்திர மோடி அரசின் கார்ப்பரேட் ஆதரவு கொள்கையின் காரணமாக கோடீஸ்வரர்களின் மட்டுமே பயனடைந்தார்கள் என்பதற்கும், ஏழை, எளியோர் வாழ்க்கை நிலை வஞ்சிக்கப்பட்டதற்கும் இதைவிட வேறு சான்று தேவையில்லை.

எனவே, நரேந்திர மோடி ஆட்சி என்பது தமிழ்நாட்டிற்கு விரோதமானது. ஏழை,எளியவர்களுக்கு எதிரானது. கார்ப்பரேட்டுகள் சொத்து மேல், சொத்து குவிப்பது தான் நரேந்திர மோடி ஆட்சியின் சாதனையாகும். இத்தகைய மக்கள் விரோத ஆட்சிக்கு தமிழ்நாட்டு மக்கள் உரிய நேரத்தில், உரிய பாடத்தை புகட்டுவார்கள்.”

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Source link