அதன் ஒரு பகுதியாகவே, தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் வருகின்ற ஏப்ரல் 23 ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ள நிலையில் பல உயர் அதிகாரிகளை மாற்றி தேர்தல் ஆணையம் உத்தரவிட்டிருந்தது. அதன்படி, கடந்த ஏப்ரல் 08ந் தேதி தமிழ்நாடு அரசின் தலைமை செயலாளர் (Chief Secretary) முருகானந்தம் மற்றும் லட்ச ஒழிப்பு துறை டிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம் ஆகியோர் மாற்றப்பட்டனர். மேலும், தமிழ்நாடு அரசின் புதிய தலைமை செயலாளராக எம்.சாய் குமாரும், லட்ச ஒழிப்பு துறை டிஜிபியாக சந்தீப் மிட்டலும் நியமிக்கப்பட்டனர்.
இந்த நடவடிக்கைக்கு பல அரசியல் கட்சி தலைவர்களும் தனது கண்டனத்தை தொடர்ந்து தெரிவித்து வருகின்றனர். அதன் ஒரு பகுதியாகவே, இன்று (ஏப்.11) திமுக பொருளாளரும் நாடாளுமன்ற மக்களவைக் குழு தலைவருமான டி.ஆர்.பாலு, புதிய தமிழக தலைமை செயலாளராக எம்.சாய் குமார் நியமிக்கப்பட்ட உத்தரவுகளை திரும்பப் பெற வலியுறுத்தி தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
தேர்தல் ஆணையத்திற்கு அவர் எழுதிய கடிதத்தின் விவரம்:
இந்திய தேர்தல் ஆணையத்தால் தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்டு, அதன் நடைமுறைகள் தொடங்கியுள்ள நிலையில், கடந்த ஏப்.08 அன்று தமிழ்நாட்டின் தலைமைச் செயலாளராகப் பணியாற்றி வந்த முருகானந்திற்கு பதிலாக சாய் குமார் என்பவரை புதிய தலைமைச் செயலாளராக தேர்தல் ஆணையம் நியமித்துள்ளது. இந்தத் தன்னிச்சையான மற்றும் நியாயமற்ற பணிமாறுதலுக்கு, திமுக தனது கடும் எதிர்ப்பைத் தெரிவித்துக் கொள்கிறது. தேர்தல் ஆணையத்தின் உத்தரவில் இதற்கான எவ்விதக் காரணங்களும் குறிப்பிடப்படவில்லை.
மேலும், தலைமைச் செயலாளர் முருகானந்தம் குறித்து எந்தவொரு முக்கிய அரசியல் கட்சியும் எவ்விதப் புகாரும் அளிக்கவில்லை. அவர் அந்த பதவியிலிருந்து இடமாற்றம் செய்யப்படுவதற்கு எவ்விதமான தர்க்கரீதியான அல்லது நியாயமான காரணங்களும் இல்லை. தமிழ்நாட்டில் தேர்தல் நடைமுறைகள் தொடங்கி நடைபெற்று வந்தாலும், அதனால் அரசாங்கத்தின் செயல்பாடுகள் முடங்கிவிட கூடாது. அடுத்த அரசு அமைந்து புதிய அமைச்சரவை பதவியேற்கும் வரையில், நிர்வாகத்தில் ஒரு தொடர்ச்சி இருக்க வேண்டியது அவசியமாகும். குறிப்பாக, அரசியல்கட்சித் தலைமைத் தேர்தல் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டிருக்கும் இந்த காலகட்டத்தில், அரசாங்கத்தின் அன்றாடச் செயல்பாடுகளைக் கண்காணித்து நெறிப்படுத்துபவர் தலைமைச் செயலாளரே ஆவார்.
தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படுவதற்கு முந்தைய இந்த மாதத்தில், நிர்வாகம் சார்ந்த பல்வேறு வழக்கமான கோப்புகள், நீதிமன்ற வழக்குகள் தொடர்பான ஆவணங்கள் உள்ளிட்ட பல முக்கியப் பணிகள் கையாளப்பட வேண்டியுள்ளன. முருகானந்தம் கடந்த ஒன்றரை ஆண்டுகளாகத் தலைமைச் செயலாளராகப் பணியாற்றி வருவதால், தேர்தல் காலத்தில் அரசாங்கத்தின் செயல்பாடுகள் எந்தவிதத் தடையுமின்றிச் சீராக நடைபெறுவதை உறுதி செய்வதற்கு மிகவும் பொருத்தமானவர் அவரே ஆவார். இத்தகைய சூழலில் என்.முருகானந்தத்தை மீண்டும் தமிழ்நாட்டின் தலைமைச் செயலாளராகப் பணியமர்த்துமாறு தங்களைக் கேட்டுக்கொள்கிறோம்.
அதேபோல, டாக்டர் சந்தீப் மிட்டல் ஐபிஎஸ், காவல்துறை தலைமை இயக்குநராக தேர்தல் ஆணையம் நியமித்துள்ளது. தமிழ்நாட்டின் தற்போதைய ஆளுங்கட்சியாகவும், மிகப்பெரிய அரசியல் கட்சியாகவும் திகழும் திமுக சார்பில், டாக்டர் சந்தீப் மிட்டலை டிவிஏசி -இன் தலைமை இயக்குநராக நியமித்திருப்பதற்கு எங்களின் கடும் ஆட்சேபணையைத் தெரிவித்துக் கொள்கிறோம். முதலாவதாக, டிவிஏசி-இன் தலைமை இயக்குநர் (டிஜிபி) பதவிக்கும், தேர்தல் நடத்தும் பணிக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை என்பதைச் சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.
வாக்காளர் பட்டியலைத் தயாரித்தல் மற்றும் தேர்தல்களை நடத்துதல் ஆகிய பணிகளை மேற்பார்வையிடுதல், வழிநடத்துதல் மற்றும் கட்டுப்படுத்துதல் ஆகியவற்றுக்கு மட்டுமே தேர்தல் ஆணையத்திற்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரம் ஆகும். தமிழ்நாடு தேர்தலை நோக்கிச் செல்கிறது என்பதற்காக மட்டும், அரசின் அனைத்து அதிகாரங்களையும் செயல்படுத்தும் வகையில், தேர்தல் ஆணையத்திற்கு வழங்கப்பட்ட ஒரு வரம்பற்ற அதிகாரமாக இது அமையாது. அரசியலமைப்பும், மக்கள் பிரதிநிதித்துவச் சட்டங்கள் 1950 மற்றும் 1951-உம், தேர்தல் தொடர்பான பணிகளைச் செய்வதற்கான அதிகாரத்தை மட்டுமே தேர்தல் ஆணையத்திற்கு வழங்கியுள்ளன.
உச்சநீதிமன்றம் தனது பல்வேறு தீர்ப்புகளில் சுட்டிக்காட்டியுள்ளதைப் போலவே, அரசியலமைப்பின் 324-வது பிரிவின்கீழ் உள்ள அதிகாரம் என்பது தேர்தல்களை நடத்துவது தொடர்பான பணிகளுக்கு மட்டுமே பொருந்தும். தேர்தல் காலத்தில், தேர்தல் ஆணையமானது அரசுக்கு மாற்றாகச் செயல்படுவதில்லை. டிவிஏசி என்பது, அரசு அதிகாரிகளுக்கு எதிரான ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் பொறுப்பு ஒப்படைக்கப்பட்ட ஒரு அமைப்பாகும். தேர்தல்களை நடத்துவதில் டிவிஏசி-க்கு எவ்விதப் பங்கும் இல்லை. எனவே, தேர்தல்களை நடத்துவது தொடர்பான பணிகளுடன் தொடர்பில்லாத அரசுப் பதவிகளுக்கு அதிகாரிகளை நியமிக்கவோ அல்லது இடமாற்றம் செய்யவோ தேர்தல் ஆணையத்திற்கு அதிகாரம் இல்லை.
அதோடு, களங்கமற்ற நேர்மை, நடுநிலைமை கொண்ட ஓர் அதிகாரியை மட்டுமே டிவிஏசி-இன் தலைவராக நியமித்திருக்க வேண்டும். சந்தீப் மிட்டல் பா.ஜ.க மற்றும் ஆர்எஸ்எஸ் அமைப்புகளின் ஆதரவாளர் என்பது அனைவரும் அறிந்த ஒரு உண்மை. சந்தீப் மிட்டல் தனது சமூக ஊடகப் பக்கங்களில் பதிவிட்டுள்ள கருத்துக்களின் அடிப்படையில், அவரே ஒப்புக்கொண்ட ஒரு உண்மை இது. இஸ்லாம் மற்றும் இடதுசாரி சித்தாந்தம் குறித்து சமூக ஊடகங்களில் அவர் பதிவிட்டுள்ள கருத்துகள், அந்த அதிகாரி ஒருதலைப்பட்சமாகச் செயல்படுபவரே தவிர நடுநிலையாளர் அல்ல என்பதை உறுதிப்படுத்துகிறது.
தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு ஆதரவாகவே அவர் செயல்படுவார். இதுதவிர சந்தீப் மிட்டல் மீது கடுமையான ஊழல் குற்றச்சாட்டுகளும் சுமத்தப்பட்டுள்ளன. எனவே, சந்தீப் மிட்டலை அந்தப் பதவியிலிருந்து நீக்குமாறும் தலைமைத் தேர்தல் ஆணையர், மற்றும் தேர்தல் ஆணையர்கள் இருவர் ஆகிய மூவரையும் நாங்கள் கேட்டுக்கொள்கிறோம். இதற்கு நீங்கள் இணங்கத் தவறும்பட்சத்தில், சட்டத்திற்கு உட்பட்டுத் தகுந்த நடவடிக்கைகளை மேற்கொள்ள நாங்கள் நிர்பந்திக்கப்படுவோம் என அவர் கூறியுள்ளார்.
