தலையங்கம்: கண்ணியம் காக்க வேண்டும்! – Kumudam

புரட்சித் தலைவர்’ என்று எல்லோராலும் அன்புடன் அழைக்கப்பட்ட எம்.ஜி.ஆர்., தனது அரசியல் எதிரிகளால் துளியும் அசைக்க முடியாத அளவுக்கு இறுதி வரையில் பலமாக கால் ஊன்றி நிற்கக் காரணமே, பெண்கள் அவர் மீது வைத்திருந்த உண்மையான, அபாரமான பாசம்தான். ‘எங்க வீட்டுப் பிள்ளை’ என்றும் ‘எங்கள் தங்கம்’ என்றும் அவர் நடித்த படங்களின் பெயராலேயே அவரை தங்கள் இதயத்தில் வைத்துக் கொண்டாடியது தமிழ்நாட்டுத் தாய்க்குலம்.

எம்.ஜி.ஆருக்குப் பின் கட்சியை வெற்றிகரமாக வழிநடத்திய ஜெயலலிதா. ஆட்சிப் பொறுப்பிலும் பெண்களின் பேராதரவுடன் இருந்தார். மாநிலங்களை ஆட்டிப் படைக்கும் டெல்லியே அவரைக் கண்டு மலைத்து நின்றது.

அப்படிப்பட்ட அண்ணா தி.மு.க-வில் அமைச்சர் பதவியெல்லாம் வகித்துவிட்டு, இன்றைக்கு தேர்தல் களத்தில் நிற்கும் சி.வி.சண்முகம், முதல்வர் ஸ்டாலின் அறிவித்த ‘கனவு காணும்’ திட்டத்தைக் கிண்டல் செய்வதாக எண்ணிக்கொண்டு, ஒரு நடிகையைப் பற்றி உதிர்த்திருக்கும் கேவலமான வார்த்தைகளைக் கண்டு எவருக்குமே அசூயை பொங்கும். நடிகை என்றாலே என்ன வேண்டுமானாலும் பேசலாம் என்ற மோசமான ஒரு பார்வையின் விளைவுதான் இது! அதிலும், தனது கட்சியின் தலைவரும் தலைவியுமே திரைப்படத் துறையில் கோலோச்சிவிட்டு, அதைவிடப் பெரும் புகழை அரசியலில் எட்டியவர்கள் எனும்போது. சி.வி.சண்முகம் போன்றவர்களுக்கு பொறுப்பு ஒருபடி கூடுதல் அல்லவா?

தி.மு.க-வின் பொன்முடி உள்ளிட்ட சில அமைச்சர்களும். ஒருசில தலைமைக் கழக பேச்சாளர்களும் பெண்கள் பற்றி மேடையில் உதிர்த்த வார்த்தைகள் சமூக வலைதளத்தில் பரவியபோது, மக்கள் எந்தளவுக்கு வெறுப்படைந்தார்களோ… அதே அளவுக்கு சண்முகத்தின் வார்த்தைகளைக் கேட்டும் அதிர்ந்து, புண்பட்டுப் போயிருக்கிறார்கள்!

ஒருபுறம் பெண்களுக்குச் சலுகைகளை போட்டி போட்டு அறிவிக்கும் இரண்டு திராவிடக் கட்சிகளுமே, ‘கண்ணியக்குறைவாகப் பெண்களை விமர்சிக்கும் தமது கட்சிக்காரர்களுக்கு கடுமையாக தண்டனை அளிப்போம்’ என்று வெளிப்படையாக அறிவிக்க வேண்டும்.

இல்லையென்றால், வாக்கு வங்கியாக மட்டும் மகளிரைப் பயன்படுத்திக் கொள்கிறார்களே தவிர, பெண்கள் மீது அவர்களுக்கு எந்தவொரு மரியாதையும் இல்லை என்றே முடிவுக்கு வர நேரிடும்!

Source link