தவறான சிகிச்சையால் பாதத்தை இழந்த குழந்தை – மகளுக்கு நீதி கேட்டு தலைமைச் செயலகத்தில் காவலர் போராட்டம்! – cop father protests at secretariat after child loses foot in alleged medical negligence

கோதண்டபாணி என்ற நபர் சென்னை ஓட்டேரி காவல் நிலையத்தில் தலைமைக் காவலராக பணியாற்றி வருகிறார். ஆவடி காவலர் குடியிருப்பை வரும் இவரின் மகளுக்கு சிறுநீரக பிரச்சனை ஏற்பட்டது. தொடர்ந்து அவர் தனது குழந்தையை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளார்.

தவறான சிகிச்சை

இந்த சூழலில் சிகிச்சையில் ஏதோ குளறுபடிகள் ஏற்படவே குழந்தையின் கால் பாதத்தை துண்டிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. அந்த சமயத்தில் மருத்துவர்களின் அஜாக்கிரதைதான் குழந்தையின் இந்த நிலைக்கு காரணம் என சொல்லப்பட்டது.

இதற்கிடையில் கோதண்டபாணி, மருத்துவர்களின் தவறான சிகிச்சையால் குழந்தையின் கால் பாதம் அகற்றப்பட்டதாக குற்றம் சாட்டி, கடந்த நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக பல்வேறு இடங்களில் பலகட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறார். மேலும், இச்சம்பவம் தொடர்பாக ஓட்டேரி காவல் நிலையத்திலும் அவர் புகார் அளித்துள்ளார்.

இந்த விவகாரத்தில் மருத்துவர்களின் அலட்சியம் நிரூபிக்கப்பட்டால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் முன்பே தெரிவித்திருந்ததாக கூறப்பட்டது.

மகளுடன் வந்து போராட்டம்

இந்நிலையில், தனது மகளுக்கு நீதி கோரி, காவலர் சீருடையில் தலைமைச் செயலகத்திற்கு வந்த கோதண்டபாணி, திமுக கொடியை எரித்து போராட்டத்தில் ஈடுபட்டார். மேலும் 2021 -ஆம் ஆண்டு திமுக ஆட்சி காலத்தில் தான் தனது மகளுக்கு தவறான சிகிச்சை அளிக்கப்பட்டதாக கூறிய அவர் தனது மகளுடன் வந்து தலைமை செயலக வாயிலில் திமுக கொடியை எரித்து போராட்டத்தில் ஈடுபட்டார்

அப்போது அங்கிருந்த காவலர்கள் சிலர், நெருப்பை அணைத்து கோதண்டபாணியை அங்கிருந்து அப்புறப்படுத்த முயன்றனர். சென்னை எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனை மற்றும் ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் தனது மகளுக்கு தவறான சிகிச்சை அளிக்கப்பட்டதாக குற்றம் சாட்டி, நீதி கோரி தலைமை காவலர் ஒருவர் தலைமைச் செயலகத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மருத்துவமனைகளில் அலட்சிய போக்கு

தமிழகத்தில் குறிப்பாக எழும்பூர் உள்ளிட்ட குழந்தைகள் மற்றும் அரசு மருத்துவமனையில் தவறான சிகிச்சைகளால் குழந்தைகள் பாதிக்கப்படுவது அதிகரித்திருக்கிறது. சமீபத்திய உதாரணமாக சில தினங்களுக்கு முன்பு சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் 4 மாத குழந்தை செவிலியரின் அஜாக்கிரதையால் உயிரிழந்தது பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

சாதாரண சளி பிரச்சனைக்கு அனுமதிக்கப்பட்டிருந்த நான்கு மாத குழந்தைக்கு செவிலியர் ஒருவர் கடுமையான காய்ச்சலால் பாதிக்கப்பட்ட ஒன்பது வயது சிறுமிக்கு போட வேண்டிய ஊசியை மாற்றி போட்டு விட்டார். இதனால் அந்த பச்சிளம் குழந்தை துடிதுடித்து உயிரிழந்தது. மருத்துவர்களின் அஜாக்கிரதை மற்றும் செவிலியர்களின் கவனம் இன்மை காரணமாக குழந்தைகள் உயிரிழப்பதும் உடல் உறுப்புகளை இழப்பதும் தொடர்ந்து வருகின்றன.

எந்த ஆட்சியாக இருந்தாலும் மருத்துவமனைகளில் குறிப்பாக அரசு மருத்துவமனைகளில் மருத்துவ ஊழியர்களின் அஜாக்கிரதை மிகவும் கவலைக்குரிய ஒன்றாக கருதப்பட வேண்டும். இதற்காக அரசு எந்திரங்கள் தொடர்ந்து விதிமுறைகளை தீவிரப்படுத்த வேண்டும். பாதிக்கப்பட்ட குழந்தைகள் மற்றும் குழந்தைகளின் குடும்பத்தாருக்கு உரிய இழப்பீடு வழங்க அரசு வழிவகை செய்ய வேண்டும் என சமூக செயற்பாட்டாளர்களும் பொதுமக்களும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

Source link