இதனையடுத்து அதிமுக தலைமையிலான என்டிஏ கூட்டணியில் அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. அதன்படி சைதாப்பேட்டை, பூந்தமல்லி, பெரியகுளம், திருப்பத்தூர், மன்னார்குடி, காரைக்குடி, திருச்சிராப்பள்ளி, நாங்குநேரி, மடத்துக்குளம், திருவையாறு, ஓட்டப்பிடாரம் உள்ளிட்ட தொகுதிகளில் அமமுகவுக்கு போட்டியிடவுள்ளது.
இந்நிலையில் டிடிவி தினகரனின் தீவிர ஆதரவாளரான சோளிங்கர் முன்னாள் எம்எல்ஏ பார்த்திபன் திமுகவில் இணைந்துள்ளார். அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை சந்தித்து அவரும், மேலும் சிலரும் திமுகவில் தங்களை இணைத்து கொண்டுள்ளனர். முன்னதாக அரக்கோணத்தில் தனது ஆதரவாளர்கள் இடையில் பேசிய பார்த்திபன், பாஜக கூட்டணிக்கு எதற்காக சென்றீர்கள். உங்களுடைய பினாமியை, உதவியாளரை எந்த நல்லமுறையில் தலைநகர் டெல்லிக்கு அழைத்து சென்றார்கள் என்று உங்கள் மனசாட்சிக்கு நன்றாக தெரியும்.
இன்றைக்கு ஆரம்பிக்கப்பட்டுள்ள தமிழக வெற்றிக் கழகத்துடன் நீங்கள் பேசவில்லையா? அதிலிருந்து பேச வந்தவர்கள் யாரென்று எனக்கு தெரியாதா? நீங்கள் நிர்வாகிகள் மத்தியில் இதனை தெரிவித்தீர்களா? இபிஎஸ் உள்துறை அமைச்சரை சந்திக்கும் போது நிர்வாகிகள் அவருடன் இருக்கிறார்கள். நீங்கள் அமித்ஷாவை எத்தனை முறை சந்தித்து இருக்கிறீர்கள். எத்தனை முறை உங்கள் இயக்கத்தை சார்ந்தவர்களை அழைத்து சென்று அவரிடத்தில் அறிமுகம் செய்து வைத்துள்ளீர்கள்.
உங்களுடைய ஆதரவாளர்களுக்காக தொகுதிகளை கேட்டு பெற்றீர்களா என கடும் கோபத்துடன் கேள்வி எழுப்பியுள்ளார் பார்த்திபன். இதனையடுத்து டிடிவி தினகரன் மீதான அதிருப்தியால் திமுகவில் இணைந்துள்ளார். இதனிடையில் சினிமாவில் இருந்து அரசியலில் நுழைந்து தமிழக வெற்றிக் கழகம் கட்சியை துவங்கிய விஜய், நம்மளை நம்பியும் சிலர் வருவார்கள். ஆட்சியில் பங்கு நாம் வழங்குவோம் என முதல் மாநாட்டிலே அறிவித்தார்.
இதனால் அவருடன் கூட்டணி அமைக்க பல கட்சிகள் முன்வரும் என எதிர்பார்க்கப்பட்டது. அந்த வகையில் டிடிவி தினகரனும் தவெகவுடன் இணைவதற்காக முயற்சி செய்தார். இதற்காக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாகவும் அரசியல் வட்டாரத்தில் தகவல்கள் வெளியானது. இதனிடையில் தான் திடீர் ட்விஸ்ட்டாக அதிமுக கூட்டணியில் இணைந்தார் டிடிவி தினகரன். இந்நிலையில் அவரிடம் இருந்து விலகிய பார்த்திபன், தவெகவுடன் அமமுக பேச்சுவார்த்தை நடத்தியதாக வெளிப்படையாக போட்டுடைத்துள்ளர்.
மேலும் திமுகவில் இணைந்துள்ள பார்த்திபன் உள்ளிட்ட டிடிவி தினகரன் ஆதரவாளர்கள், தங்களுக்கு உரிய மரியாதை அளிக்கவில்லை. அங்கு கொள்கை இல்லை என்று சரமாரியாக குற்றம்சாட்டியுள்ளனர். இதனிடையில் வரும் ஏப்ரல் 6 ஆம் தேதி முதல் அமமுக சார்பாக போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து பரப்புரையை துவங்கவுள்ளார் டிடிவி தினகரன். வரும் 6 ஆம் தேதி சைதாப்பேட்டை துவங்கி 18 ஆம் தேதி வரை அவர் பிரச்சாரம் மேற்கொள்ளவுள்ளது குறிப்பிடத்தக்கது.
