திமுகவின் தேர்தல் அறிக்கை இன்றைய தினம் வெளியானது, அதுகுறித்து தேர்தல் அறிக்கை குழுவின் தலைவர் கனிமொழி செய்தியளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார்.
165 இடங்களில் திமுக தனித்துப் போட்டியிடவிருக்கிறது. மேலும் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட திமுகவின் தேர்தல் அறிக்கை இன்றைய தினம் வெளியாகி இருக்கிறது. இதில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை மாதம் ரூபாய் 2000 -ஆக உயர்த்தப்படும் என்கிற வாக்குறுதி, எட்டாம் வகுப்பு வரை காலை உணவு திட்டம் விரிவாக்கம், வீட்டு உபயோகப் பொருட்களை வாங்க இல்லத்தரசிகளுக்கு 8000 ரூபாய் மதிப்புள்ள கூப்பன் உள்ளிட்ட வாக்குறுதிகள் கவனம் பெற்று இருக்கின்றன. மேலும் 10 லட்சம் சிமெண்ட் வீடுகள் கட்டித் தரப்படும் என்கிற வாக்குறுதியும் மாற்றுத்திறனாளிகளுக்கான ஓய்வூதிய உயர்வு வாக்குறுதியும் முக்கியத்துவம் பெற்றிருக்கின்றன.
இந்த சூழலில் தான் திமுக தேர்தல் அறிக்கை குழுவின் தலைவர் கனிமொழி தேர்தல் அறிக்கை குறித்து செய்தியாளர்களிடம் பேசியிருக்கிறார், “மக்களிடம் சென்று கிட்டத்தட்ட 80 ஆயிரம் கருத்துக்களை அவங்களுடைய சந்திப்பு, இ மெயில் மூலமாகவும் மக்களிடம் நேரடியாக கண்டறிந்த அறிக்கை தயாரித்துள்ளோம்” என தெரிவித்தார். தொடர்ந்து அவர் பேசுகையில் 12 இடங்களில் மக்களை நேரடியாக சந்தித்து, மனுக்களை வைத்து தான் இந்த தேர்தல் அறிக்கை தயாரிக்கப்பட்டதாகவும் அவர் செய்தியாளர்களிடம் கூறியிருக்கிறார்.
தேர்தல் அறிக்கை கொடுத்துவிட்டு நிறைவேற்ற முடியுமா? முடியாதா என்ற சந்தேகத்தில் இருக்கக் கூடாது எதை நிறைவேற்ற முடியுமோ அதை மட்டுமே தேர்தல் அறிக்கையில் கொடுக்க வேண்டும் என்று முதலமைச்சர் தெரிவித்து இருந்ததாகவும் அதன் அடிப்படையில் இந்த தேர்தல் அறிக்கையை தயாரித்து உள்ளோம் எனவும் அவர் கூறியிருக்கிறார்.
இல்லத்தரசிகளுக்கான ரூ.8000 மதிப்பிலான கூப்பன் எந்த அடிப்படையில் வழங்க போகிறீர்கள் என்ற கேள்விக்கு “இதை முதல்வர் தெளிவாக கூறியுள்ளார். வருமான வரி செலுத்தாத பெண்களுக்கு 8000 மதிப்புள்ள கூப்பன் வழங்கப்படும். பல பேர் வீட்டில் ஃபிரிட்ஜ் இருக்கலாம் அவர்களுக்கு , என்ன பொருள் தேவைப்படுகிறதோ அதை இந்த கூப்பன் மூலமாக வாங்கிக் கொள்ளலாம் எனவும் அவர் விளக்கியுள்ளார்.
மேலும் அவர் பேசுகையில், எல்லாவிதமான வளர்ச்சி பாதைகளுக்காகவும், உதாரணத்திற்கு செம்மொழி பூங்கா, எதிர்காலத்திற்கானசுற்றுச்சூழல் வளர்ச்சி, கல்வி வளர்ச்சி போன்ற அனைத்தும் உள்ளடக்கியதுதான் இந்த தேர்தல் அறிக்கை என கனிமொழி குறிப்பிட்டுள்ளார். எல்லா பகுதி மக்களும் வளர்ச்சி பெற வேண்டும் என்பதற்காகத்தான் இந்த தேர்தல் அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.அனைத்து துறையிலும் உள்ள நிபுணர்களை கலந்தாய்வு செய்து முதல்வர் இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளார் எனவும் அவர் கூறியிருந்தார்.
மேலும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள்,எதை செய்ய முடியுமோ அதை மட்டுமே மக்களுக்கு வாக்குறுதியாக கொடுத்துள்ளார் எனவும் அவர் பாராட்டியிருந்தார். மேலும் அவரிடம் எதிர்க்கட்சிகள் தமிழ்நாட்டு கடன் அதிகமாக உள்ளது என்ற பிரச்சாரத்தை முன்னெடுத்துக்கொண்டிருக்கிறார்கள் அது மக்களிடம் எடுபடாது என்றும் கூறியிருக்கிறார். இந்த தேர்தல் அறிக்கையில் அதுகுறித்து ஏதாவது தகவல் இருக்கிறதா என்ற கேள்விக்கு “தேர்தலில் கடனை எப்படி குறைப்பது என்று சொல்லவில்லை ஆனால் அதற்காக பல விளக்கங்கள் ஏற்கனவே கொடுக்கப்பட்டுள்ளது” என குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அவர், இங்கு இருக்கக்கூடிய ஜிடிபி குரோத்தையும் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார். அதிமுக திமுக தேர்தல் அறிக்கை வெளியிட்டுள்ளது மக்கள் மத்தியில் யாருக்கு வரவேற்பு இருக்கும் என்ற கேள்விக்கு பதில் அளித்த அவர், “உண்மையை பேசக்கூடிய தேர்தல் அறிக்கை திமுகவின் தேர்தல் அறிக்கை, அது மக்களுக்கு தெரியும் எனவும் பேசியுள்ளார்.
