திமுகவின் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது: ஓ.பன்னீர்செல்வம்

தென்காசி,

தென்காசியில் திமுக நிர்வாகி ஓ.பன்னீர்செல்வம் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அனைத்து மக்களுக்கும் திட்டங்களை நிறைவேற்றி வருகிறார். கடந்த 5 ஆண்டுகால அவரது ஆட்சியின் சரித்திர சாதனை தொடர வேண்டும் என்று மக்கள் விரும்புகின்றனர். மீண்டும் முதல்-அமைச்சராக மு.க.ஸ்டாலின் வர வேண்டும் என்ற எண்ணத்தில் மக்கள் உள்ளனர்.

அண்ணா, கருணாநிதி ஆகியோரின் நோக்கம் நிறைவேற சிறு துரும்பாக நான் இருப்பேன். திமுகவின் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. ஆட்சியிலும், கட்சியிலும் எடப்பாடி பழனிசாமியின் தலைமையை மக்கள் ஏற்கவில்லை. அதனால்தான் தொடர் தோல்வியை மக்கள் அளித்தார்கள்.

பிரச்சினைகளை தடுத்து நிறுத்தும் சக்தியாகவும், பிரச்சினைகளை உருவாக்குபவர்களுக்கு உரிய தண்டனையையும் பெற்றுத் தரும் சக்தியாகவும் தமிழக அரசு உள்ளது. பிரச்சினைகளில் உடனடி நடவடிக்கையை தமிழக அரசு எடுக்கிறது. தமிழகத்தில் இருந்தும் மக்களின் வரிப்பணம் மத்திய அரசுக்கு செல்கிறது.

அந்த நிதியை மாநிலங்களுக்கு திரும்ப வழங்கும்போது சமநிலையோடு மத்திய அரசு ஒதுக்க வேண்டும். 18 வயதிலேயே நான் திமுகவில் இருந்திருக்கிறேன். இப்போது திமுகவில் ஒரு தொண்டனாக இணைந்துள்ளேன். தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இரண்டாம் முறையாகவும் வெற்றி பெறும் சரித்திர சாதனையை உருவாக்குவார். இவ்வாறு அவர் கூறினார்.

Source link