திருப்பூர்,
தமிழக சட்டசபை தேர்தல் அடுத்த மாதம் 23-ந்தேதி நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் மே 4-ந்தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அன்றே அறிவிக்கப்பட உள்ளன. இந்த தேர்தலில் திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, தமிழக வெற்றிக் கழகம், நாம் தமிழர் கட்சி என 4 முனை போட்டி நிலவுகிறது.
திமுக சார்பில் அவினாசி தனி தொகுதியில் அருந்ததியர் சமூகத்தைச் சேர்ந்த 28 வயது இளம் பெண் மருத்துவர் வெ.கோகிலாமணி வேட்பாளராக களமிறக்கப்பட்டுள்ளார். இவர் அவினாசி ஆரம்ப சுகாதார நிலையத்தில் அரசு மருத்துவராக பணியாற்றி வருகிறார்.
இந்த நிலையில் இன்று அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாஜக வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது. இதில் அதிமுக கூட்டணியில் தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள அவினாசி தொகுதியில் மத்திய இணை மந்திரி எல்.முருகன் போட்டியிட உள்ளதாக பாஜக அறிவித்துள்ளது. இதன் மூலம் திமுகவின் இளம் வயது வேட்பாளர் கோகிலாமணியை எதிர்த்து எல்.முருகன் களம் இறங்கியுள்ளார்.
அவினாசி தொகுதியை பொறுத்தவரை 1984 முதல் 2021 வரையிலான 9 தேர்தல்களில் அதிமுக 8 முறை வெற்றி பெற்றுள்ளது. எனவே இந்த தொகுதியை அதிமுக எப்போதும் விட்டுக் கொடுத்ததில்லை. முதல்முறையாக பாஜகவுக்கு விட்டுக் கொடுத்துள்ளது. அவினாசி தொகுதியில் தவெக சார்பில் கமலியும், நாம் தமிழர் கட்சி சார்பில் மேனகாவும் போட்டியிடுகின்றனர். இந்த தொகுதியில் யார் வெல்வார் என்ற எதிர்பார்ப்பு மக்களிடையே அதிகரித்துள்ளது.
