காடுவெட்டி குரு மகள்
சட்டமன்ற தேர்தலுக்கான பரப்புரைகள் முழு வீச்சில் நடந்து வரும் நிலையில், அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை சந்தித்துள்ளார் விருதாம்பிகை. இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், வரும் சட்டமன்ற தேர்தலில் திமுகவுக்கு ஆதரவு அளிப்பதாக தெரிவித்தார். இது சம்பந்தமாக அவர் கூறியாதாவது,” 2019 தேர்தலில் இருந்து திமுகவுக்கு ஆதரவு கொடுத்து வருகிறோம். இப்போ முதல்வர் மு.க. ஸ்டாலின் தேர்தல் அறிக்கையில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி அனைத்து சமுதாய மக்களுக்கு உரிய பங்கீடு அளிக்கப்பட்டும் என சொல்லி இருக்காங்க.
திமுகவுக்கு ஆதரவு
எங்களுக்கான ஒரு உரிய அங்கீகாரத்தை திமுக தொடர்ச்சியாக செய்து வருகிறது. அன்புமணியும், எடப்பாடி பழனிசாமியும் வன்னியர் சமுதாய மக்களுக்காக எதையும் செய்யவில்லை. இந்த சமுதாயத்துக்காக தான் பாமக என்ற கட்சி உருவாக்கப்பட்டது. எப்படி அன்புமணி என்னுடைய தந்தை குருவுக்கு துரோகம் செய்தாரோ, அப்படித்தான் இப்போ அவருடைய அப்பா ராமதாஸுக்கு துரோகம் செய்துள்ளார். அன்புமணியை தோற்கடிப்பது தான் எங்களுடைய முதல் வேலை. இதற்காக கிராமம் கிராமமாக சென்று பிரச்சாரம் செய்வோம்.
அன்புமணி குறித்து விருதாம்பிகை பரபரப்பு குற்றச்சாட்டு
இவ்வாறு விருத்தாம்பிகை தெரிவித்துள்ளார். இதனிடையில் அவருடைய சகோதரர் அதிமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்து வருகிறார். இதுக்குறித்தும் செய்தியாளர்கள் கேள்வி எழுப்ப, என்னுடைய அப்பா காடுவெட்டி மருத்துவமனையில் இருந்த சமயத்தில் அவருடன் இருந்தது நான். ஒரு தடவை அவருக்கு ஹார்ட் அட்டாக் வந்தது. இரண்டாவது தடவை வந்தபோது, அப்படியே விட்டுடுங்க. பணமெல்லாம் செலவு பண்ண வேண்டாமென சொன்னவர் அன்புமணி என பகிரங்கமாக குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார் விருதாம்பிகை.
தொடர்ந்து அவர் அன்புமணியின் முகத்திரை நிச்சயமாக கிழிப்போம். எங்கள் சமுதாய மக்களை இவ்வளவு நாட்களாக நம்ப வைத்து ஏமாற்றி விட்டார்கள் எனவும் கூறி பரபரப்பினை கிளப்பியுள்ளார். ஏற்கனவே பாமக தற்போது இரண்டாக உள்ளது. சமீப காலமாகவே இராமதாஸ், அன்புமணி இருவருக்கும் இடையில் மோதல் போக்கு நிலவி வந்தது. இதனால் அன்புமணி தனது ஆதரவாளர்களுடன் பாமக தன்னுடைய கட்சி என தொடர்ந்து கூறி வந்தார்.
தருமபுரியில் சௌமியா போட்டி
இதனையடுத்து வரும் சட்டமன்ற தேர்தலுக்காக அதிமுக தலைமையிலான என்டிஏ கூட்டணியில் இணைந்தார் அன்புமணி. அவர் தரப்பு பாமகவுக்கு 18 தொகுதிகளும், ஒரு ராஜ்ய சபா சீட்டும் வழங்கப்பட்டது. இதில் ராஜ்ய சபா எம்பியாக அன்புமணி பதவியேற்ற நிலையில், அவருடைய மனைவி சௌமியா தருமபுரி தொகுதியில் வேட்பாளராக போட்டியிடவுள்ளார். இதனிடையில் ராமதாஸும் தனது மகனுக்கு எதிராக இந்த சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுகிறார்.
மகனுக்கு எதிராக ராமதாஸ்
இதற்காக சசிகலாவின் அஇபுதமமுக கட்சியுடன் ராமதாஸ் கூட்டணி அமைத்துள்ள நிலையில் அனைத்திந்திய ஜனநாயக பாதுகாப்பு கழகம் என்ற கட்சி சார்பாக வேட்பாளர்களை அறிவித்துள்ளார். குறிப்பாக அன்புமணி தரப்பு வேட்பாளர்கள் போட்டியிடும் 11 தொகுதிகளுக்கு நேரடியாக வேட்பாளர்களை அறிவித்துள்ளார் ராமதாஸ்.
இதனிடையில் தற்போது அன்புமணிக்கு எதிராக பிரச்சாரம் செய்யப்போவதாக காடுவெட்டி குரு மகள் விருதாம்பிகை தெரிவித்துள்ளார். இந்த இரண்டு நெருக்கடிகளையும் அன்புமணி எப்படி சமாளிக்க போகிறார் என்பது தற்போது அரசியல் மிகப்பெரிய கேள்வியாகியுள்ளது.
