திமுக ஆட்சியின் அவலங்களை தூய்மைப்படுத்த வேண்டிய கடமை…இப்தார் விழாவில் இபிஎஸ் குட்டிக் கதை

சென்னை,

அதிமுக சார்பில் 28வது இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி சென்னை எழும்பூரில் இன்று மாலை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, அதிமுக அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன், பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன், தமாகா தலைவர் ஜி.கே.வாசன், ஐ.ஜே.கே நிறுவனர் பாரிவேந்தர், புரட்சி பாரதம் தலைவர் பூவை ஜெகன்மூர்த்தி, பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன், தமிழ் மாநில முஸ்லிம் லீக் தலைவர் பஷீர் அஹமது, திரைப்பட நடிகர் மன்சூர் அலிகான் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.

இந்த விழாவில் சிறப்புரையாற்றிய எடப்பாடி பழனிசாமி,

சமய அமைப்புகள், தனி மனிதர்கள் நடத்தும் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் அரசியல் கட்சி பங்கு பெறுவதைத் தான் பார்த்திருப்போம். ஆனால், ஒரு கட்சியின் பொதுச்செயலாளர் தனது சொந்தச் செலவில் இஃப்தார் நடத்தும் நிகழ்வை முதலில் தொடங்கி வைத்தவர் அம்மா அவர்கள் தான்.

இஸ்லாமியர்களை இதயத்தில் வைத்து நேசித்தவர் அம்மா, அவரது விசுவாசத் தொண்டர்கள் நாம் அதனை தொடர்ந்து நடத்திக்கொண்டு இருக்கிறோம். புனிதங்கள் பூத்துக்குலுங்கும் மாதம், தர்மங்கள் செழித்து நிறையும் மாதம், ஏழை எளியோர் மீது இரக்கம் காட்டும் மாதம் ரமலான். நபிகள் நாயகம் போதித்தவாறு இறை வழிபாட்டுக்காகவும் அன்பை பரிமாறிக்கொள்ளவும் கூடியிருக்கிறோம்.

இன்றைய சூழலில் நம் மனதை மட்டுமின்றி உலகம் முழுக்க மக்கள் மனதை வாட்டும் வகையில், மத்திய கிழக்கில் போர் நடந்துகொண்டிருக்கிறது. அப்பாவி மக்கள், பெண்கள், குழந்தைகள், நோயாளிகள் உள்ளிட்ட லட்சக்கணக்கான அப்பாவி மக்கள் போரால் பாதிக்கப்படுவது நம் இதயத்தை வாட்டுகிறது.

விரைவில் போர் முடிவுற்று ரமலான் பெருநாளை அந்த மக்களும் மகிழ்ச்சியுடன் கொண்டாட வேண்டும் என்பதே நம் பிரார்த்தனையாக இருக்கட்டும். அன்பு, சகோதர உணர்வு, சமாதானம், நீதி நியாயத்தை அடிப்படைக் கொள்கையாக மதிக்காத மனிதர்கள் உயர் பதவிகளுக்கு வரும்போது உலகில் எப்படி மகிழ்ச்சி நிலவமுடியும்? சமாதானம் நாடுவோர் நாட்டை ஆள வேண்டும் என்பதே மக்களின் சிந்தனையாக இருக்க வேண்டும்.

இஸ்லாத்தின் மிகப்பெரிய கடமை நோன்பு. சாப்பிடாமல் இருப்பதற்குப் பெயர் பட்டினி கிடப்பது, ஆனால் ரமலான் மாதத்தில் இஸ்லாம் கட்டளையிடுவது பட்டினி அல்ல, நோன்பு இருக்கச் சொல்கிறது.

நோன்பு என்பது இதயத்தை சுத்தம் செய்யும் முயற்சி. நோன்பு என்பது இல்லாதவர்களுக்கு நம்மிடம் இருப்பதைப் பகிர்ந்துகொடுக்கும் பண்பாடு. நோன்பு என்பது நீதிமானாகவும், நியாய உணர்வு உள்ளவனாகவும் மனிதன் தன்னைத் தானே வடிவமைத்துக்கொள்ளும் ஞானப்பட்டறை. இத்தகைய உயர்ந்த லட்சியங்களுக்காக தன்னலம் துறக்கும் முயற்சியை குறைந்தபட்சம் இந்த ரமலான் மாதத்திலாவது மனிதர்கள் மேற்கொள்ள வேண்டும் என இஸ்லாம் வலியுறுத்துகிறது.

அனைத்து சமயங்களையும் மதிக்கின்ற மக்களைக் கொண்ட அற்புதமான மாநிலம் தமிழ்நாடு. ஒருவர் மற்றவரின் வாழ்க்கை முறையை மதித்து, வேற்றுமையில் ஒற்றுமை கண்டு மதச்சார்பின்னையை பொதுவாழ்வில் இலக்கணமாகக் கொண்டு, ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு என்ற கொள்கையைப் பின்பற்றும் மாநிலம் தமிழ்நாடு. தொன்றுதொட்டு இத்தகைய கலாச்சாரத்தை பின்பற்றி வரும் நம் மாநிலத்தில் அண்ணா வழியில், எம்ஜிஆர், அம்மா இருவரும் நம் அதிமுகவை அரசியல் இயக்கமாக மட்டுமில்லாமல், மக்களை வழிநடத்தும் அறம் சார்ந்த இயக்கமாகவும் நடத்தினார்கள்.

உங்கள் ஆசிர்வாதத்தையும் அன்பையும் பெற்று நானும் மதச்சார்பின்மை, சமய நல்லிணக்கம் உள்ளிட்டவற்றை உயிர் மூச்செனக் கொண்டு தொடர்ந்து உழைத்து வருகிறேன். எம்ஜிஆர், அம்மா ஆட்சிக் காலமும் இருபெரும் தலைவர் காட்டிய வழியில் எனது ஆட்சிக் காலமும் சிறுபான்மை மக்களுக்கு பொற்காலமாக அமைந்ததை வரலாறு சொல்லும். அதிமுக ஆட்சிக் காலங்களில் இஸ்லாமிய சகோதர சகோதரிகளுக்காக, அவர்களின் பொருளாதார மேம்பாட்டிற்காக எண்ணற்ற நலத்திட்டங்களை நாம் செயல்படுத்தினோம்.

ஹஜ் புனித பயணம் மேற்கொள்ள சகோதர சகோதரிகளுக்கு தங்கு தடையின்றி நிதி ஒதுக்கீடு செய்தது அதிமுக அரசு. முஸ்லிம் மாணவர்களின் கல்விக்காக ஊக்கத்தொகை வழங்கியது நம் அதிமுக அரசு. முஸ்லிம் பெண்கள் சுயமாக தொழில் தொடங்கி பொருளாதார ரீதியில் தன்னிறைவு பெற்றிட வட்டியில்லாமல் கடன் வழங்கும் திட்டத்தைக் கொண்டுவந்தது நம் அதிமுக அரசாங்கம். வஃக்பு சொத்துக்களை கண்டுபிடித்து பாதுகாத்து, ஆக்கிரமிப்பில் இருந்து மீட்டு, இஸ்லாமிய சமூதாயத்தின் மேம்பாட்டுக்குப் பயன்படும் வகையில் செய்தது நம் அதிமுக அரசாங்கம். இந்தத் தேர்தல் நேரத்தில் நபிகள் நாயகம் வாழ்க்கையில் நடந்த சம்பவம் ஒன்றை குறிப்பிட விரும்புகிறேன்.

ஒருமுறை நபிகள் நாயகம் தொழுதுகொண்டிருந்தார், அப்போது நாகரிகம் அறியாத ஒருவர் தொழுகைக் கூடத்துக்குள் அசுத்தம் செய்தார். எல்லோரும் ஆத்திரப்பட்டு தாக்கவும் வெளியேற்றவும் முயன்றனர். ஆனால் நபிகள் நாயகம் அந்த மனிதரை பாதுகாத்து, அசுத்தத்தை தானே கழுவி, அம்மனிதரையும் தூய்மைப்படுத்தி அவரோடு சேர்ந்து தொழுதார். நபிகளாரின் இந்த மனிதாபிமானத்தையும் இரக்கத்தையும் கண்டு, அம்மனிதர் நபிகளாரின் தொண்டரானார். உண்மையான தொண்டு என்பது சமூகத்தை தூய்மைப்படுத்தும் பணி. எவ்வளவு முரட்டு மனிதராக இருந்தாலும் அவர்களை அன்பால் வெல்ல முடியும் என்பதை நமக்கு உணர்த்தும் சம்பவம் இது.

அரசியல் என்ற அறவாழ்வுக்கு வந்திருக்கும் நாம் லஞ்ச லாவண்யங்கள் தலைவிரித்தாடும் இந்த ஆட்சியின் அவலங்களை தூய்மைப்படுத்த வேண்டிய கடமை உள்ளது. அதை அர்ப்பணிப்பாலும், அன்பாலும் செய்திட வேண்டும். நம்முடைய ஆட்சி அமைய, தமிழ்நாடு மக்கள் ஆவலோடு காத்திருக்கிறார்கள். மகத்தான வெற்றியை அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு வழங்க மக்கள் தயாராகிவிட்டார்கள் என்பதை இந்த நேரத்தில் தெரிவித்துக்கொள்கிறேன்.

எந்தச் சூழ்நிலையிலும் நம் அடிப்படைக் கொள்கையில் இருந்து அணுவளவும் நாம் பிறழ மாட்டோம். மதச்சார்பின்மை, சமூக நல்லிணக்கம், சட்டம் ஒழுங்கு பாதுகாப்பில் சமரசமற்ற உறுதி, எம்ஜிஆர், அம்மா வழியில் எல்லோருக்கும் எல்லாம் ஏற்றவாறு ஆட்சி நடத்துவோம் என்று உறுதி கூறுகிறேன்.

இந்த இஃப்தார் நடக்கும் நன்னாளில் தேர்தல் அறிவிப்பு வந்துவிட்டது, எவ்வளவு பொருத்தமான நாள், எவ்வளவு இனிமையான நாள். இரண்டு நாள் கழித்துத்தான் தேர்தல் அறிவிப்பு என்று நாம் நம்பியிருந்தோம், ஆனால், இன்றே வந்துவிட்டது.

அதிமுகவைப் பொறுத்தவரை ஓட்டுக்காக அரசியல் செய்யும் இயக்கமல்ல, மக்களின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்திசெய்யும் இயக்கம். இருபெரும் தலைவர்கள் வாழ்ந்த வாழ்க்கையைப் பாருங்கள், தனக்கென்று வாழாமல் மக்களுக்காக வாழ்ந்தவர்கள். அப்படி மக்களுக்காக வாழ்ந்த தலைவர்களுடைய ஆட்சி மீண்டும் தமிழகத்தில் உங்களால் மலர வேண்டும். திமுகவும், கூட்டணிக் கட்சியினரும் ஏதோ அவர்கள்தான் சிறுபான்மை மக்களை காற்றிக்கொண்டிருப்பது போல தோற்றத்தை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.

உண்மையில் சிறுபான்மை மக்களை கண்ணை இமை காப்பது போல காப்பது அதிமுக அரசுதான், கட்சியும் அதிமுகதான். அதிமுக மதத்திற்கும், ஜாதிக்கும் அப்பாற்பட்ட இயக்கம். தமிழ் மண்ணில் பிறந்த அனைத்து மக்களுக்கும் தேவையான திட்டங்கள், நன்மைகளைக் கொடுப்பதுதான் எங்கள் தலைவர்களின் எண்ணமாக இருந்தது. அதே வழியில் அம்மா மறைவுக்குப் பின்னர் அம்மாவுடைய அரசும் செயல்பட்டது என்பதை இந்த நேரத்தில் தெரிவித்துக்கொள்கிறேன். அனைவருக்கும் புனித ரமலான் வாழ்த்துகள்.” என தெரிவித்தார்.

Source link