சென்னை,
தமிழக சட்டசபை தேர்தல் ஏப்ரல் மாதம் நடைபெற வாய்ப்பு உள்ளது. தேர்தலுக்கு இன்னும் ஓரிரு மாதங்களே உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தேர்தல் நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வருகின்றன
பிரசாரம், பொதுக்கூட்டம், கூட்டணி, தொகுதி பங்கீடு, நலத்திட்டப்பணிகள், கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை என பல்வேறு நடவடிக்கைகளை அரசியல் கட்சிகள் மேற்கொண்டு வருகின்றன.
இதனிடையே, சட்டசபை தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ், மதிமுக, விடுதலை சிறுத்தைகள், தேமுதிக, இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு, மக்கள் நீதி மய்யம், மனித நேய மக்கள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், எஸ்டிபிஐ, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, முக்குலத்தோர் புலிப்படை உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் இடம்பெற்றுள்ளன.
கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு தொடர்பாக திமுக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. டி.ஆர்.பாலு தலைமையில் 7 பேர் கொண்ட திமுக பேச்சுவார்த்தை குழு கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையை நடத்தி வருகிறது. இதில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சிக்கு தலா 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
அதேவேளை, திமுக , காங்கிரஸ் இடையே கூட்டணி தொகுதி பங்கீட்டில் கடந்த நாட்களாக தொடர்ந்து இழுபறி நிலவி வந்தது. டி.ஆர்.பாலு தலைமையிலான திமுக பேச்சுவார்த்தை குழுவும், காங்கிரஸ் பேச்சுவார்த்தை குழுவும் 2 முறை தொகுதி பங்கீடு குறித்து பேசின. ஆனால், இந்த பேச்சுவார்த்தையில் இழுபறி நீடித்தது. அதன்படி, காங்கிரஸ் 41 தொகுதிகளையும், 21 ராஜ்ய சபா சீடையும் கேட்டது. ஆனால், திமுகவோ 25 தொகுதிகள் , ஒரு ராஜ்ய சபா சீட் மட்டும் தருவதாக கூறியது. இதனால், திமுக – காங்கிரஸ் கூட்டணியில் குழப்பம் ஏற்பட்டது.
திமுக தொகுதி பங்கீட்டு குழுவுடன் பேச்சுவார்த்தை நடத்த சென்ற தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் தனது அதிருப்தியை கட்சி மேலிடத்தில் தெரிவித்தார். இதையடுத்து, காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் திமுக தலைவரும், முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலினை சந்தித்தார். இதையடுத்து பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்பட்டு 41 தொகுதிகள், 2 ராஜ்ய சபா சீட் என்று கேட்ட காங்கிரஸ் பின்னர் 39 தொகுதிகள், 2 ராஜ்யசபா சீட் என்றும் பின்னர் 36 தொகுதிகள் 2 ராஜ்யசபா சீட் என்றும் படிப்படியாக இறங்கி வந்தது.
அதேபோல், திமுகவும் 25 தொகுதிகள், 1 ராஜ்ய சபா சீட்டில் இருந்து 28 தொகுதிகள், 1 ராஜ்ய சபா சீட் என்ற அளவுக்கு இறங்கி வந்தது.
இந்நிலையில், திமுக – காங்கிரஸ் கூட்டணி உறுதிப்படுத்தப்பட்டு தொகுதி பங்கீட்டு ஒப்பந்தம் இன்று கையெழுத்தாகியுள்ளது. திமுக தலைவரும் முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின், தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை முன்னிலையில் தொகுதி பங்கீட்டு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. அதன்படி, வரும் சட்டசபை தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரசுக்கு 28 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும், ஒரு ராஜ்யசபா சீட்டும் திமுக கூட்டணியில் காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
