திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சிகள் எந்தெந்த தொகுதிகளில் போட்டியிடும் என்பது குறித்து இன்னமும் அறிவிப்பு வெளியாகாமல் இருக்கிறது. இது சம்பந்தமாக இன்று அறிவிக்கப்படலாம் என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் அண்ணா அறிவாலயத்தில் சிபிஎம் தற்போது பேச்சுவார்த்தை நடத்தி கொண்டிருக்கிறது.
கூடுதல் தொகுதிகளை கேட்ட கூட்டணி கட்சிகள்
திமுக தொகுதி பங்கீடு சம்பந்தமான பேச்சுவார்த்தையை ஏற்கனவே துவங்கி விட்டாலும், கூட்டணி கட்சிகளுடன் தொகுதி எண்ணிக்கையை இறுதி செய்வதில் தொடர்ந்து இழுபறி நீடித்து வந்தது. திமுக கூட்டணியில் ஏற்கனவே இருந்த கட்சிகள் கூடுதல் தொகுதிகளை கேட்டு வந்த நிலையில், புதிய கட்சிகளின் வருகை காரணமாக இடங்களை குறைத்து கொள்ளுமாறு திமுக கூட்டணியில் அங்கம் வகிப்பவர்களிடம் வலியுறுத்தி வந்தது.
தொகுதிகள் இறுதி செய்வதில் இழுபறி
இதனால் தொகுதி பங்கீட்டை இறுதி செய்வதில் தொடர்ந்து தாமதம் ஏற்பட்டது. இதனையடுத்து ஒரு வழியாக தொகுதி எண்ணிக்கையை தீர்வு செய்த நிலையில், தற்போது கூட்டணி கட்சிகள் போட்டியிடும் இடங்களை முடிவு செய்வதற்கான பணிகள் நடந்து வருகிறது. இதிலும் இழுபறி நீடித்து வருவதால், கூட்டணி கட்சிகளுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி கொண்டிருக்கிறது திமுக குழு.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியுடன் பேச்சுவார்த்தை
இந்நிலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போட்டியிடும் தொகுதிகளை இறுதி செய்வதற்காக பேச்சுவார்த்தை குழு அண்ணா அறிவாலயத்திற்கு வருகை தந்துள்ளனர். அவர்களிடம் திமுக தொகுதி பங்கீடு குழு பேசி வருகிறது. சிபிஎம் கட்சிக்கு திமுக கூட்டணியில் ஐந்து இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், ஏற்கனவே கந்தர்வகோட்டை, கீழ்வேலூர் வெற்றி பெற்ற தொகுதிகளை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒதுக்குவதற்கு திமுக முன்வந்துள்ளது.
சிபிஎம் கேட்கும் தொகுதிகள்
இதனையடுத்து விளவங்கோடு தொகுதியை விட்டு கொடுக்குமாறு சிபிஎம் தரப்பில் இருந்து கேட்கப்பட்டு வருகிறது. அது காங்கிரஸ் இடம் என்பதால், பேச்சுவார்த்தையில் இழுபறி நீடித்து கொண்டிருக்கிறது. மேலும் சென்னையில் இந்த முறை சிபிஎம் கட்சிக்கு ஒரு தொகுதி வழங்க வேண்டுமென தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு கொண்டிருக்கிறது. மாநில செயலாளர் பெ. சண்முகம் இது சம்பந்தமாக தொடர்ச்சியாக கோரிக்கை வைத்து வந்தார்.
சென்னையில் பல்லாவரம், வில்லிவாக்கம், திருவெற்றியூர் தொகுதிகளில் ஏதேனும் ஒன்றை சிபிஎம் கட்சிக்கு விட்டு தருமாறு கேட்டு வருகிறது சிபிஎம். இந்த மூன்று இடங்களும் ஏற்கனவே திமுக வெற்றி பெற்ற தொகுதிகள். மேலும், திமுக வெற்றி பெற்ற மற்றொரு தொகுதியான திருப்பூர் மேற்கு மற்றும் சிங்காநல்லூர் ஆகிய பகுதிகளில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கேட்டு வருகிறது. இது சம்பந்தமாக தற்போது திமுக தொகுதி பங்கீடு குழு பேச்சுவார்த்தை நடத்தி கொண்டிருக்கிறது.
இறுதி முடிவு
இந்நிலையில் தற்போது நடக்கும் பேச்சுவார்த்தையில் சிபிஎம் கட்சி போட்டியிடும் தொகுதிகள் இறுதி செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையில் அதிமுக கூட்டணிகளுக்கான இடங்கள் அறிவிக்கப்பட்டு, சட்டமன்ற தேர்தலுக்கான பிரச்சாரத்தையும் துவங்கி விட்டார் எடப்பாடி பழனிசாமி. அதோடு அதிமுக வேட்பாளர்கள் பட்டியலும் வெளியிடப்பட்டு விட்டது. இதனால் திமுக எப்போது இந்த வேலைகள் அனைத்தையும் முடித்துவிட்டு, பிரச்சாரத்தை துவங்கும் என்பது அரசியல் களத்தில் பெரும் எதிர்பார்ப்பாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
