திமுக கூட்டணி கட்சிகளுக்கு எந்தெந்த தொகுதிகள் ஒதுக்கீடு.. இன்று முதல்வர் வெளியிடப்போகும் பட்டியல் – cm mk stalin going to announce the constituencies where dmk alliance parties will contest today.

திமுகவின் தொகுதி பங்கீடு குழுவுடன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பேச்சுவார்த்தை நடத்திய நிலையில், சிபிஎம் போட்டியிட உள்ள ஐந்து தொகுதிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. இது சம்பந்தமாக பத்திரிக்கையாளர்களிடம் பேசிய சிபிஎம் மாநில செயலாளர் பெ. சண்முகம், இன்று மாலை முதல்வர் முக்கிய அறிவிப்பை வெளியிட உள்ளதாக தெரிவித்துள்ளார்.

முதல்வர் மு.க. ஸ்டாலின்
சட்டப்பேரவை தேர்தலுக்கான பணிகளை அதிமுக துவங்கியுள்ள நிலையில், திமுகவும் விரைவில் களத்துக்கு வருவதற்கு தயாராகி வருகிறது. இதற்காக கூட்டணி கட்சிகள் போட்டியிடும் இடங்களை தேர்வு செய்வதில் தீவிரம் காட்டி கொண்டிருக்கிறது. இது சம்பந்தமாக அண்ணா அறிவாலயத்தில் தீவிரமான பேச்சுவார்த்தை நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் சிபிஎம் மாநில செயலாளர் பெ. சண்முகம், திமுகவின் தொகுதி பங்கீடு குழுவுடன் பேச்சுவார்த்தையை நிறைவு செய்த பிறகு பத்திரிக்கையாளர்களை சந்தித்துள்ளார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஐந்து இடங்கள்

திமுக தலைமையிலான இந்தியா கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஐந்து தொகுதிகள் ஒதுக்கப்பட்டு நிலையில், சிபிஎம் போட்டியிடும் தொகுதிகள் குறித்து கடந்த சில நாட்களாக பேச்சுவார்த்தை நடந்து வந்தது. இந்நிலையில் இன்று அண்ணா அறிவாலயத்தில் இறுதிக்கட்டமாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பேச்சுவார்த்தை நடத்தியது.
ஐந்து தொகுதிகள் தேர்வு முடிந்தது
இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய மாநில செயலாளர் பெ. சண்முகம், தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி திமுகவுடன் தொகுதி உடன்பாடு செய்து ஐந்து தொகுதிகளில் போட்டியிட முடிவு செய்தது. அதன் அடிப்படையில் தொகுதிகளை அடையாளம் செய்யும் விதமாக இரண்டு, மூன்று முறை பேச்சுவார்த்தை நடந்தது. இன்றைய தினம் இறுதியாக ஐந்து தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளது.
இன்று மாலை முதல்வர் அறிவிப்பு
நாங்கள் விரும்பிய தொகுதிகள் பெரும்பாலான அளவில் கிடைத்துள்ளன. அதுப்பற்றிய அறிவிப்பினை இன்று மாலை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவிப்பார். எல்லா கட்சிகளும் எந்த தொகுதியில் போட்டியிட போகிறது என்பதை இன்று அறிவிப்பதற்கு தீர்மானம் செய்துள்ளார்கள். அதன் அடிப்படையில் 234 தொகுதிகளின் விவரங்களும் இன்று மாலை தெரிய வந்து விடும். கூட்டணியில் நிறைய கட்சிகள் இருக்கும் காரணத்தால், ஒரே தொகுதியை பலக்கட்சிகள் கேட்டன.
கால அவகாசம் தேவைப்பட்டது
அது தவிர்க்க முடியாத ஒன்று. அதன் காரணமாக இந்த தொகுதி ஒதுக்கீடு செய்வதில் கால தாமதம் ஏற்பட்டது. அது இழுபறி என்றெல்லாம் நாங்கள் நினைக்கவில்லை. ஒரே தொகுதியை பல கட்சிகள் கேட்கும் போது, அதை யாருக்கு ஒதுக்கீடு செய்வது என்பதில் அவகாசம் தேவைப்பட்டது. இது சம்பந்தமாக அனைவருடன் பேசி தான் கருத்து ஒற்றுமை ஏற்படுத்த வேண்டிய கட்டாயம் உள்ளது. இதற்காக தான் கால அவகாசம் ஆனது.
எந்த இழுபறியும் கிடையாது
இதனை இழுபறி என்று எடுத்துக்கொள்ள முடியாது. இம்முறை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ள ஐந்து தொகுதிகளிலும் நூறு சதவிகிதம் வெற்றியை பெறும். அடுத்த ஒரு சில நாட்களில் சிபிஎம் சார்பாக போட்டியிடவுள்ள வேட்பாளர்கள் குறித்த அறிவிப்பும் வெளியாகும் என தெரிவித்துள்ளார். மேலும் ஒரு சில தொகுதிகள் தான் இன்னமும் முடிவு செய்யப்படாமல் இருக்கிறது. அதுவும் இன்னும் சில மணிநேரத்தில் முடிவு செய்யப்பட்டு விடும்.
பெ. சண்முகம் விளக்கம்
நிச்சயமாக இன்று மாலை முதல்வர் பட்டியலை வெளியிடுவார் என்றார். தொடர்ந்து அவரிடம் கூட்டணி கட்சிகளிடம் ஒற்றுமை இல்லை என எடப்பாடி பழனிசாமி வைத்துள்ள விமர்சனம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு கூட்டணி கட்சிகளுடன் ஒற்றுமை இருக்கும் காரணத்தினால் தான் ஒரு விவாதம் நடத்தி கருத்து ஒற்றுமையுடன் முடிவு எடுக்கப்பட்டது. நிச்சயமாக ஒற்றுமையாக இந்த தேர்லை எதிர்கொண்ட திமுக தலைமையிலான கூட்டணி வெற்றி பெறும். இவ்வாறு பெ. சண்முகம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.