திமுக – விசிக கூட்டணி
திமுக தலைமையிலான கூட்டணியில் விடுதலை சிறுத்தை கட்சிகள் அங்கம் வகித்துள்ள நிலையில், அவர்களுக்கு எட்டு தொகுதிகள் ஒதுக்கப்பட்டது. இரட்டை இலக்கத்தில் திருமாவளவன் இடங்கள் கேட்டு வந்த நிலையில், அவருக்கு 8 இடங்களை திமுக வழங்கியது. காங்கிரஸை தொடர்ந்து திமுக கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு மட்டுமே கடந்த முறையை விட, இந்த தடவை கூடுதல் தொகுதிகள் ஒதுக்கப்பட்டன.
எதிர்கட்சிகள் விமர்சனம்
இந்நிலையில் திமுக கூட்டணியில் விசிகவுக்கு உரிய மரியாதை வழங்கவில்லை. வெறும் எட்டு தொகுதிகள் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளதாக அதிமுக கூட்டணி கட்சியினர் தொடர்ச்சியாக விமர்சனம் செய்து வருகின்றனர். அந்த வகையில் பாமக அன்புமணியும் பல விமர்சனங்களை முன்வைத்து வரும் நிலையில் தன்னையும், திருமாவளவனையும் திமுக திட்டமிட்டு பிரித்து விட்டதாக குற்றம்சாட்டியுள்ளார்.
அன்புமணி குற்றச்சாட்டு
இது சம்பந்தமாக அவர் பேசுகையில், விசிக தலைவர் திருமாவளவானுக்கும், எனக்கும் இடையில் கருத்து வேறுபாடு, கொள்கை சம்பந்தமாக மாறுபாடு இருக்கலாம். ஆனாலும் அவர் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக போராடி வருவதில், எந்த விதமான மாற்றுக் கருத்தும் இல்லை. நாங்கள் இரண்டு பேரும் சேர்ந்து கடந்த காலங்களில் போராடினோம். இடையில் வந்து சூழ்ச்சி செய்து திமுக சதிகாரர்கள் எங்களை பிரித்து விட்டார்கள். இவ்வாறு திருமாவளவன் குறித்து விருத்தாசலம் பரப்புரையில் அன்புமணி பேசியுள்ளார்.
திருமாவளவனுக்கு அவமதிப்பு
மேலும், கடலூர் மாவட்டத்தில் திமுக வேட்பாளர்கள் அறிமுக கூட்டத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், திருமாவளவன் பெயரை சொன்ன சமயத்தில் தேமுதிக பிரேமலதா விஜயகாந்த் கண்டுக்கொள்ளாமல் இருந்ததாக தெரிவித்துள்ளார். கால் மேல் கால் போட்டுக்கொண்டு உட்கார்ந்து இருந்ததாக கடும் விமர்சனங்களை முன்வைத்துள்ளார் அன்புமணி.
பிரேமலதா விஜயகாந்த் விளக்கம்
இதனிடையில் இந்த சர்ச்சை குறித்து பிரேமலதா விஜயகாந்த் விளக்கம் அளித்துள்ளார். அண்ணன் திருமாவளவன் உடனான உறவு என்பது இன்றைக்கும், நேற்றைக்குமானது கிடையாது. என்னுடைய விருத்தாசலம் உள்ளிட்ட தொகுதிகளுக்கு அண்ணன் ராமதாஸ் பிரச்சாரத்துக்கு வரவுள்ளார். எதிர்கட்சிகள் தான் இதுப்பற்றி பேசி பெரிதுப்படுத்துகிறது. தேமுதிகவை விமர்சிக்க எதுவும் இல்லாமல், இதையெல்லாம் பெரிதாக பேசி வருவதாகவும் விளக்கம் அளித்துள்ளார்.
ராமதாஸ் மயக்கம்
இந்த அரசியல் பரப்புகளுக்கு மத்தியில் நேற்றைய தினம் அன்புமணி தந்தை பாமக நிறுவனர் ராமதாஸ் பிரச்சாரத்தின் போது மயங்கி விழுந்தார். சசிகலாவுடன் கூட்டணி அமைத்து வரும் சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ளும் ராமதாஸ், அன்புமணிக்கு எதிராக வேட்பாளர்களை நிறுத்தி பரப்புரை மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் நேற்றைய தினம் பிரச்சாரம் செய்யும் போது மேடையிலே மயங்கி விழுந்தார். இதனையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், இரண்டு நாட்களில் மீண்டும் அவர் பரப்புரை மேற்கொள்வார் என ராமதாஸ் தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.
