திமுக, மநீம தொகுதி பங்கீடு நிறைவு.. எத்தனை சீட் ஒதுக்கீடு.. நீடிக்கும் ஒரேயொரு சிக்கல்.. கமல் எடுக்கப்போகும் முக்கிய முடிவு – kamal makkal needhi maiam wish to contest the own symbol

திமுக, மக்கள் நீதி மய்யம் இடையிலான இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை இன்று அண்ணா அறிவாலயத்தில் வைத்து நடந்துள்ளது. இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய பொதுச்செயலாளர் அருணாச்சலம், தொகுதிகளின் எண்ணிக்கையில் எந்த பிரச்சனையும் இல்லை. இரண்டொரு நாட்களில் உடன்பாடு எட்டப்படும் என தெரிவித்துள்ளார்.

மு.க. ஸ்டாலின் – கமல் ஹாசன்
திமுக இன்னமும் சில கட்சிகளுடன் தொகுதி பங்கீடு சம்பந்தமான பேச்சுவார்த்தையை நிறைவு செய்யாமல் இருக்கிறது. சீக்கிரமே மீதமுள்ள கட்சிகளுடன் சீட் ஒதுக்குவதில் ஏற்படும் சிக்கலை தீர்க்க வேண்டும் என திமுக குழு மும்முரமாக பேச்சுவார்த்தை நடத்தி கொண்டிருக்கிறது. அந்த வகையில் இன்று மக்கள் நீதி மய்யத்துடன் பேசியுள்ளது. இந்நிலையில் இந்த பேச்சுவார்த்தைக்கு பின் மநீம பொதுச்செயலாளர் அருணாச்சலம் செய்தியாளர்களை சந்தித்து பேசியுள்ளார்.

கூட்டணியில் புதிய கட்சிகள்

கடந்த முறை கூட்டணியில் இருந்த கட்சிகளுடன் திமுக இந்த தேர்தலை எதிர்கொள்ளவுள்ள நிலையில், புதிதாக சில கட்சிகளும் இணைந்துள்ளன. மக்கள் நீதி மய்யம், தேமுதிக திமுக கூட்டணிக்குள் வருகை தந்துள்ளன. இதன் காரணமாக ஏற்கனவே கூட்டணியில் இருக்கும் கட்சிகளை தொகுதிகளை குறைத்து கொள்ளுமாறு வலியுறுத்தி வருகிறது திமுக. இதன் காரணமாக சில கட்சிகளுடனான பேச்சுவார்த்தையில் இழுபறி நீடிக்கிறது.
இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை
இந்நிலையில் திமுகவுடன் மக்கள் நீதி மய்யம் இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தையை நடத்தியுள்ளது. இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய அக்கட்சியின் பொதுச்செயலாளர் அருணாச்சலம், வரும் சட்டமன்ற தேர்தலை பொறுத்தவரை திமுகவின் தொகுதி பங்கீடு குழுவுடன் ஏற்கனவே முதல்கட்ட பேச்சுவார்த்தை நடந்தது. அதனை தொடர்ந்து தற்போது இரண்டாம்கட்ட பேச்சுவார்த்தை நடந்துள்ளது. திமுக தரப்பில் இருந்து தொகுதிகள் பரிமாறப்பட்டது.
டார்ச் லைட் சின்னம்
அதுபோக போட்டியிடக்கூடிய சின்னம் தொடர்பாகவும் பேசப்பட்டது. தொகுதிகளை பொறுத்தளவில் எந்த பிரச்சனையும் இல்லை. ஆனால் திமுக சின்னத்தில் போட்டியிட வேண்டுமென அவர்கள் கூறினார்கள். கடந்த தேர்தல்களில் சராசரியாக நான்கு சதவிகித வாக்குகள் எங்களுடைய டார்ச் லைட் சின்னத்தில் இருந்து பெற்றுள்ளோம். மக்கள்கள் மற்றும் தொண்டர்களிடம் மக்கள் நீதி மய்யத்தின் சின்னம் சென்றடைந்துள்ளது. எனவே எங்களுடைய தனிச்சின்னத்தில் தான் போட்டியிடுவோம் என்று வலியுறுத்தியுள்ளோம்.
தொகுதி பங்கீடு சுமூகம்
மேற்கொண்டு குழு சொல்லியுள்ள கருத்துக்களை தலைவரிடம் கொண்டு சேர்க்கவுள்ளோம். ஓரிரு நாட்களில் செயற்குழுவை கூட்டி இது சம்பந்தமாக பேசி, தலைவர் என்ன சொல்கிறாரோ அதை செயல்படுத்துவதற்கு தயாராக இருக்கிறோம். எங்களுடைய டார்ச் லைட் சின்னத்தில் போட்டியிடுவதற்கான எல்லா காரணத்தையும் சொல்லியுள்ளோம். தொகுதி பங்கீடு சுமூகமாக சென்று கொண்டிருக்கிறது. அதில் எந்த விதமான சிக்கலும் இல்லை.
Samayam Tamilதவெகவுடன் எந்த விதமான பேச்சுவார்த்தையும் நடக்கவில்லை.. எதற்காக அப்படி சொன்னார் தெரியவில்லை.. நயினார் நாகேந்திரன் உறுதி
சின்னம், சம்பந்தமாக தான் இரண்டு கருத்துக்கள் நிலவி வருகிறது. இன்னும் ஓரிரு நாட்களில் மீண்டும் உங்களை சந்திப்போம் என பத்திரிக்கையாளர்களிடம் தெரிவித்துள்ளார். இதன் மூலமாக திமுக, மக்கள் நீதி மய்யம் கட்சிகளுக்கு இடையிலான தொகுதிகள் முடிவு செய்யப்பட்டு விட்டது உறுதியாகியுள்ளது. சின்னம் தொடர்பாக நீடித்து வரும் பிரச்சனையும், கமல் எடுக்கும் முடிவில் அடிப்படையில் விரைவில் தீர்வுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மதிமுக
ஏற்கனவே திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் மதிமுக கட்சியும் இதே போல் தனிச்சின்னத்தில் போட்டியிடுவதில் உறுதியாக இருந்தனர். ஆனால் திமுக தரப்பில் இருந்து உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுமாறு தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். இதனையடுத்து 3 தொகுதியில் திமுக சின்னத்திலும், ஒரு தொகுதியில் மதிமுக சின்னத்திலும் போட்டியிடும் விதமாக ஒப்பந்தம் கையெழுத்தானது. அதே போல் திமுக, மநீம இடையிலான சின்னம் தொடர்பாக பிரச்சனையும் முடிவுக்கு வரலாம் என அரசியல் வட்டாரங்கள் தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.