திருக்குறுங்குடி பங்குனி திருவிழா.. சித்தர்களுக்கு காட்சி கொடுத்த நம்பி சுவாமிகள்

களக்காடு,

களக்காடு அருகே உள்ள திருக்குறுங்குடியில் 1500 ஆண்டுகள் பழமை வாய்ந்த அழகியநம்பிராயர் கோவில் உள்ளது. 108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றாக திகழும் இந்த கோவில் ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட சிறப்பு வாய்ந்ததாகும்.

ஆண்டு தோறும் இக்கோவிலில் பங்குனி மாதம் பிரம்மோற்சவ திருவிழா வெகுவிமரிசையாக நடப்பது வழக்கம். அதன்படி இந்த ஆண்டின் பங்குனி பிரம்மோற்சவ திருவிழா கடந்த 2ம் தேதி திருக்கொடி ஏற்றத்துடன் தொடங்கி நடந்து வருகிறது. விழா நாட்களில் தினசரி நம்பி சுவாமிகள் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி திருவீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.

விழாவின் முக்கிய நிகழ்வாக, 5 நம்பி சுவாமிகள் சித்தர்களுக்கு காட்சி கொடுக்கும் வைபவம் நேற்று (6ம் தேதி) இரவில் கோலாகலத்துடன் தொடங்கியது. இதையொட்டி நம்பி சுவாமிகளுக்கு சிறப்பு திருமஞ்சனம் நடத்தப்பட்டது. அதனைதொடர்ந்து இரவில் கோவிலில் இருந்து நின்ற நம்பி, அமர்ந்த நம்பி, பள்ளி கொண்ட நம்பி, திருமலைநம்பி, திருப்பாற்கடல் நம்பி ஆகிய 5 நம்பி சுவாமிகளும் தனித்தனியாக 5 கருட வாகனங்களில் எழுந்தருளி நிகழ்ச்சிக்காக புறப்பட்டனர்.

ரதவீதிகள் வழியாக, திருவீதி உலா வந்த 5 நம்பிகளும் இன்று அதிகாலை 2.50 மணிக்கு மேல ரதவீதியில் மேற்கு நோக்கி எழுந்தருளி, மகேந்திரகிரி மலையை கடாஷித்து அங்கு வாழும் தேவகந்தர்வ சித்தர்களுக்கு திருக்காட்சி அளித்தனர். அப்போது நம்பி சுவாமிகளுக்கு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது.

இந்நிகழ்வில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். சித்தர்களுக்கு காட்சி கொடுத்த நம்பி சுவாமிகள், கோவிலுக்கு புறப்பட்டு சென்றனர். கோவில் வாசலில் நம்பி சுவாமிகளை திருக்குறுங்குடி ஜீயர் தொழுது வரவேற்றார். திருக்குறுங்குடி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

விழாவின் 10ம் நாளான ஏப்ரல் 11ம் தேதி தேரோட்டம் நடைபெறுகிறது. அன்று காலை திருத்தேர் வடம் பிடித்து இழுக்கப்படுகிறது.

Source link