திருச்சி கிழக்கில் நாளை பிரசாரம்: விஜய்யின் வாகனத்தை பின்தொடரக் கூடாது – என்.ஆனந்த் அறிவுறுத்தல்

சென்னை,

த.வெ.க. தலைவர் விஜய் வருகிற சட்டமன்ற தேர்தலில் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய 2 தொகுதிகளில் போட்டியிடுகிறார். நாளை மதியம் திருச்சி கிழக்கு தொகுதியில் அவர் பிரசாரம் மேற்கொள்கிறார். இந்த நிலையில் விஜய்யின் பிரசார வாகனத்தை அறவே பின்தொடரக் கூடாது என்று த.வெ.க. பொதுச்செயலாளர் என்.ஆனந்த் அறிவுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில், மக்கள் விரும்பும் முதல்வர் வேட்பாளர், தமிழக மக்களின் வெற்றித் தலைவர் விஜய், சென்னை பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய தொகுதிகளில் போட்டியிடுவதை அனைவரும் அறிவீர்கள். இந்த நிலையில், நாளை (02.04.2026, வியாழக்கிழமை) திருச்சி கிழக்கு சட்டமன்றத் தொகுதியில், மரக்கடை எம்.ஜி.ஆர். சிலை அருகே மதியம் 12.30 மணி முதல் மாலை 4 மணி வரை, கழகத் தலைவர் விஜய் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடத் தேர்தல் ஆணையத்திடம் அனுமதி பெறப்பட்டுள்ளது. மேலும் பிற தொகுதிகளிலும் பிரசாரம் மேற்கொள்ள அனுமதி பெறும் பணிகளும் நடைபெற்று வருகின்றன.

இந்தப் பிரசார நிகழ்ச்சிக்காக, தேவையான குடிநீர், மருத்துவ வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இந்தப் பிரசார நிகழ்வுகளில் கலந்துகொள்ள வரும் கழகத் தலைவரின் பிரசார வாகனத்தை இருசக்கர வாகனங்கள் உள்ளிட்ட எவ்வித வாகனங்களிலும் அறவே பின்தொடரக் கூடாது.

அத்துடன் இந்தத் தேர்தல் பிரசார நிகழ்வுகளில், கர்ப்பிணிப் பெண்கள், சிறுவர் – சிறுமியர், பள்ளி மாணவ – மாணவியர், மூத்த குடிமக்கள், மாற்றுத் திறனாளிகள், உடல்நலம் குன்றியவர்கள் மற்றும் பொதுமக்கள் நேரில் வந்து கலந்துகொள்வதைத் தவிர்த்து, சமூக வலைத்தளம் மற்றும் தொலைக்காட்சி நேரலைகளில் கண்டு, அனுமதிக்கப்பட்டவர்கள் மட்டுமே பங்கேற்க முழு ஒத்துழைப்பு தருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

Source link