சென்னை,
வேட்பாளர்கள் அறிமுகம்
தமிழக வெற்றிக்கழகம் கட்சியை நடிகர் விஜய் கடந்த 2024-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 2-ந்தேதி தொடங்கினார். அவர் கட்சி தொடங்கியபோதே 2026 தமிழக சட்டமன்ற தேர்தல் தான் தனது இலக்கு என்று அறிவித்தார்.
அந்த அறிவிப்பின்படி விஜய்யின் தவெக கட்சி நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் முதல் முறையாக களம் இறங்குகிறது. தமிழக வெற்றிக்கழகம் சார்பில் 234 தொகுதிகளிலும் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியலை விஜய் நேற்று அறிவித்தார்.
கட்சியின் தலைவரான விஜய் சென்னை பெரம்பூர், திருச்சி கிழக்கு ஆகிய இரண்டு தொகுதிகளி லும் போட்டியிடுகிறார். தமிழ் சினிமா உலகில் உச்ச நடிகராக இருந்து வரும் விஜய் திருச்சி தேர்தல் களத்தில் குதித்து இருப்பது அவரது ரசிகர்கள் மற்றும் கட்சி தொண்டர்கள் மட்டும் இன்றி, பொதுவான மக்கள் மத்தியிலும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
திருச்சி கிழக்கு தொகுதியை தேர்ந்தெடுத்தது ஏன்?
சென்னையை தாண்டி திருச்சி கிழக்கு தொகுதியையும் விஜய் தேர்ந்தெடுத்ததற்கு பல காரணங்கள் கூறப்பட்டு வருகிறது. திருச்சி கிழக்கு தொகுதி இந்து, முஸ்லிம், கிறிஸ்தவர்கள் என மும்மத மக்களும் இணைந்து வாழும் ஒரு தொகுதியாகும். திருச்சியின் அடையாளமான மலைக்கோட்டை, நத்தர்வலி தர்கா, மெயின்கார்டு கேட் புனித லூர்து அன்னை ஆலயம் என மும்மத வழிபாட்டு தலங்களும் அருகருகே அமைந்த நகரம் திருச்சி ஆகும்.
மலைக்கோட்டை கோவிலை சுற்றி இந்துக்கள் அதிகம் வசிக்கிறார்கள் என்றால் பாலக்கரை, வரகனேரி, காந்திமார்க்கெட் பகுதிகளில் முஸ்லிம்கள் மற்றும் கிறிஸ்தவர்கள் அதிக அளவில் வசிக்கிறார்கள். 3 மதங்களின் சின்னங்களும் அருகருகே அமைந்திருந்தாலும் சாதி, சமூக மோதல்கள் இதுவரை திருச்சியில் பெரிய அளவில் நடந்தது இல்லை. அந்த அளவிற்கு 3 சமூக மக்களும் மத நல்லிணக்கத்துடன் வசித்து வருகிறார்கள். மேலும் கடைவீதி பகுதிகளில் வட மாநிலங்களை பூர்வீகமாக கொண்ட மார்வாடிகளும் கணிசமான அளவில் வசித்து வருகிறார்கள்.
ரகசிய சர்வே
விஜய் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் தனது முதல்கட்ட மக்கள் சந்திப்பு பிரசாரத்தை தொடங்குவதற்கு முன்பாக தனியார் நிறுவனம் மூலம் ஒரு ‘சர்வே’ எடுத்து உள்ளார். அதில், இந்த தொகுதியில் வசிப்பவர்களில் பெரும்பகுதியினர் கல்வி அறிவு பெற்றவர்கள் மற்றும் வியாபாரிகள் ஆவார்கள். மலைக்கோட்டையில் தொடங்கி விமான நிலையம் வரை உள்ள இந்த தொகுதி பரப்பளவில் மிக பெரியதும் அல்லாமல், மிக சிறியதும் இல்லாத நடுத்தர வகையை சேர்ந்தது ஆகும்.
கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த தொகுதியில் தி.மு.க., அ.தி.மு.க. கட்சிகளே மாறி மாறி வெற்றி பெற்று வந்திருப்பதற்கு கணிசமாக உள்ள சிறுபான்மை மக்களின் ஒட்டுமொத்த ஆதரவும் ஒரு காரணம் என்பதால் இந்த தொகுதியில் போட்டியிட்டால் விஜய் வெற்றி பெறுவது எளிது என்று கூறப்பட்டு இருந்ததாக தெரிகிறது. இது போன்ற காரணங்களால் தான் விஜய் திருச்சி கிழக்கு தொகுதியில் போட்டியிட உறுதியாக முடிவு எடுத்து தற்போது களம் இறங்கி உள்ளார்.
