திருச்சி கிழக்கு தொகுதியில் நடைபயிற்சியின்போது வாக்கு சேகரித்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

திருச்சி,

தமிழக சட்டமன்ற தேர்தல் வருகிற 23-ந் தேதி நடக்கிறது. இந்த தேர்தலில் தி.மு.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர் பட்டியலை சமீபத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். அதன்படி கொளத்தூர் தொகுதியில் மீண்டும் களம் இறங்கும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அந்த தொகுதியில் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.

அதன்பிறகு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது தேர்தல் பிரசாரத்தை தொடங்கியுள்ளார். இதனை தொடர்ந்து மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் சொந்த ஊரான திருவாரூரில் நேற்று தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களை ஆதரித்து பேசினார்.

பின்னர் பொதுக்கூட்டத்தை முடித்துக்கொண்டு நேற்று இரவு திருச்சி வந்த அவர், கலெக்டர் அலுவலக சாலையில் உள்ள தனியார் ஓட்டலில் இரவு தங்கினார். இதனை தொடர்ந்து இன்று (புதன்கிழமை) காலை 9 மணிக்கு திருச்சி உழவர் சந்தையில் நடக்கும் பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு பேசுகிறார்.

இந்த கூட்டத்தில் திருச்சி மேற்கு, கிழக்கு. திருவெறும்பூர், லால்குடி, மண்ணச்சநல்லூர், ஸ்ரீரங்கம், மணப்பாறை, முசிறி, துறையூர் (தனி) ஆகிய 9 தொகுதிகளில் போட்டியிடும் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பேசுகிறார்.

இந்த நிலையில், திருச்சி கிழக்கு தொகுதியில், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை நடைபயிற்சி மேற்கொண்டார். அப்போது சாலையோர கடைகளிலும், நடந்து சென்ற பொதுமக்களிடமும் நலம் விசாரித்து வாக்கு சேகரித்தார்.

பின்னர் திருச்சி காந்தி மார்க்கெட்டுக்கு சென்ற முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அங்கு காய்கறி வியாபாரிகள், பொதுமக்களிடம் திமுக சார்பில் போட்டியிடும் இனிகோ இருதயராஜுக்கு வாக்கு சேகரித்தார். வியாபாரிகள் கைகுலுக்கி வரவேற்பு தெரிவித்தனர்.

அப்போது ஏராளமான பெண்கள் மற்றும் குழந்தைகள் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் நின்று புகைப்படம் எடுத்துக் கொண்டனர். அதன் பின் சாலையோரம் இருந்த ஒரு தேநீர் கடையில் மு.க.ஸ்டாலின் அமர்ந்து எளிமையான முறையில் தேநீர் குடித்தார்.

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் இந்த எளிமையான பிரசாரம் பொதுமக்களை வெகுவாக கவர்ந்தது. இந்நிகழ்வின்போது முதல்-அமைச்சருடன் திமுக வேட்பாளர் இனிகோ இருதயராஜ், அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி மற்றும் நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.

Source link