திருமணத்திற்கு மறுப்பு: வாலிபர் செய்த விபரீத செயல் – இளம்பெண் எடுத்த அதிர்ச்சி முடிவு

ஐதராபாத்,

தெலுங்கானா மாநிலம் மேட்சல்-மல்காஜ்கிரி மாவட்டத்தை சேர்ந்த 24 வயது இளம்பெண் ஒருவருக்கு அவரது பெற்றோர் நெருங்கிய உறவினரான மனோகர் என்பவருடன் திருமணம் செய்து வைக்க ஏற்பாடு செய்தனர்.

இந்த நிலையில் மனோகரின் எச்.ஐ.வி. பெற்றோருக்கு தொற்று பாதிப்பு இருப்பது தெரியவந்தது. இதனால் மனோகருக்கும் எச்.ஐ.வி. தொற்று இருக்கலாம் என்று பெண்ணின் குடும்பத்தினர் சந்தேகித்தனர். இதையடுத்து இளம் பெண்ணின் தந்தை, மனோகரை எச்.ஐ.வி. தொற்று பரிசோதனை செய்ய வைத்தார். பரிசோதனை முடிவுகளில், மனோகருக்கு எச்.ஐ.வி. தொற்று இருப்பது உறுதியானது. இதன் காரணமாக, பெண்ணின் குடும்பத்தினர் நிச்சயிக்கப்பட்டிருந்த திருமணத்தை உடனடியாக ரத்து செய்தனர். ஆனால் மனோகர் இளம்பெண்ணிடம் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்தினர். இதற்கு இளம்பெண் மறுப்பு தெரிவித்துள்ளார்.

இந்தநிலையில் இளம்பெண் பீட்டில் தனியாக இருந்தபோது, மனோகர் தனது ரத்தம் அடங்கிய ஊசியுடன் அவரது வீட்டிற்குச் சென்று, அதை வலுக்கட்டாயமாக அந்த பெண்ணுக்கு செலுத்திவிட்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டார்.

இதில் உடல்நிலை பாதிக்கப்பட்ட பெண்ணை, குடும்பத்தினர் தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். தன்னைத் திருமணம் செய்துகொள்ள வற்புறுத்தி, மனோகர் தனது ரத்தம் அடங்கிய ஊசியை வலுக் கட்டாயமாகத் தனக்குச் செலுத்தியதாக அந்தப் பெண் தனது பெற்றோரிடம் கூறினார்.

இதுகுறித்து பெற்றோர் போலீசில் புகார் அளித்தனர். புகாரின் பேரில், போலீசார் மனோகரை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். கோர்ட்டு அவரை நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிட்டது.

இந்தநிலையில் தனக்கு எச்.ஐ.வி. பாதித்த ரத்தம் செலுத்தப்பட்டதால் கடும் மன உளைச்சலில் இருந்த இளம் பெண் தற்கொலை செய்து கொள்ள முடிவெடுத்தார். தனது பாட்டி வீட்டில் இருந்த இளம் பெண் யாரும் இல்லாத நேரத்தில் அறைக்கு சென்று தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதையடுத்து போலீசார் மனோகர் மீது தற்கொலைக்கு தூண்டுதல் என மேலும் ஒரு வழக்கு பதிவு செய்து அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Source link