திருமணம் செய்ய மறுத்த இளம்பெண்ணின் உடலில் எச்.ஐ.வி. பாதித்த ரத்தத்தை செலுத்திய வாலிபர் – அதிர்ச்சி சம்பவம்

ஐதராபாத்,

தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 24 வயது இளம்பெண்ணுக்கு திருமண ஏற்பாடு நடந்தது. அதே ஊரைச் சேர்ந்த பெண்ணின் உறவுக்கார வாலிபர் ஒருவருக்கே திருமணம் முடிக்கவும் ஏற்பாடு செய்தனர். இந்த நிலையில் அந்த வாலிபரின் பெற்றோருக்கு எச்.ஐ.வி. தொற்று இருப்பது அனைவருக்கும் தெரியும். அதனால் வாலிபருக்கும் எச்.ஐ.வி. பரிசோதனை செய்து பார்க்க வேண்டும் என்று பெண்ணின் பெற்றோர் வற்புறுத்தினர். அதற்கு மாப்பிள்ளை வீட்டாரும் சம்மதித்தனர்.

பரிசோதனையில் அந்த வாலிபருக்கு எச்.ஐ.வி. தொற்று இருப்பது உறுதியானது. இதையடுத்து பெண்ணின் பெற்றோர் திருமண ஏற்பாட்டை நிறுத்திவிட்டனர். இதனால் அந்த வாலிபர் மன வருத்தம் அடைந்தார். கடந்த மார்ச் மாதம் 11-ந்தேதி அந்த பெண்ணின் வீட்டுக்குச் சென்ற வாலிபர், தனது உடம்பில் இருந்து எச்.ஐ.வி. பாதித்த ரத்தத்தை சேகரித்து வைத்திருந்ததை வலுக்கட்டாயமாக பெண்ணின் உடலில் செலுத்தி உள்ளார். இதனால் அந்த பெண் அதிர்ச்சி அடைந்தார். சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்ந்தார். அப்போது அவரது ரத்தத்திலும் எச்.ஐ.வி. கலந்துவிட்டது தெரிய வந்துள்ளது.

இதையடுத்து கொலை முயற்சி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்ட அந்த வாலிபர் கைது செய்யப்பட்டார். அவரிடம் நடத்திய விசாரணையில் அப்பெண் தன்னைத்தான் திருமணம் செய்துகொள்வார் என்றும், தன்னுடன் நிரந்தரமாக வாழ்வார் என்றும் தவறாக எண்ணி இந்த விபரீத செயலில் ஈடுபட்டதாக அவர் வாக்குமூலம் அளித்தார். இதையடுத்து அவர் சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார்.

எச்.ஐ.வி. பாதித்த நிலையில் மற்றவர்களின் பேச்சுகளால் இளம்பெண் மிகுந்த மன அழுத்தத்துடன் இருந்து வந்துள்ளார். இந்த நிலையில் அவர் நேற்று தனது பாட்டி வீட்டில் திடீரென தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது உடலை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Source link