திருமண அழைப்பிதழ் கொடுக்க சென்ற புதுமாப்பிள்ளைக்கு நேர்ந்த பரிதாபம்

பெங்களூரு,

கர்நாடக மாநிலம் பெங்களூரு பனசங்கரியில் வசித்து வந்தவர் அக்சித் (வயது 27). இவர், சொந்தமாக பெட்ரோல் விற்பனை நிலையம் வைத்து நடத்தி வந்தார். அக்சித்துக்கும் ஒரு பெண்ணுக்கும் திருமணம் பேசி முடிக்கப்பட்டுள்ளது. அதன்படி, அக்சித்துக்கும், அந்த பெண்ணுக்கும் வருகிற 30-ந்தேதி திருமணம் நடைபெற உள்ளது. வருகிற 29-ந்தேதி மாலையில் திருமண வரவேற்புக்கு 2 குடும்பத்தினரும் ஏற்பாடு செய்து வந்தனர்.

அக்சித்தின் நண்பர் உளிமாவில் வசித்து வருகிறார். சம்பவத்தன்று இரவு தனது திருமண அழைப்பிதழை உளிமாவில் வசிக்கும் நண்பர் மற்றும் சில உறவினர்களுக்கு கொடுக்க அக்சித் சென்றிருந்தார். பின்னர் உளிமாவில் உள்ள கோதண்டராம சாமி கோவிலில் நடைபெற்ற தேர் திருவிழாவை அக்சித், அவரது நண்பருடன் சென்று பார்த்தார்.

அதன்பிறகு, நண்பரிடம் திருமண அழைப்பிதழை கொடுத்து விட்டு வீட்டுக்கு புறப்பட அக்சித் தயாரானார். அப்போது அதிகாலையில் கோவிலில் பல்லக்கு ஊர்வலம் நடப்பதால், அதை பார்த்துவிட்டு வீட்டுக்கு செல்லுமாறு நண்பர் கூறியுள் ளார். இதனால் இரவு நண்பர் வீட்டிலேயே அக்சித் தங்கினார். நேற்று அதிகாலையில் நடைபெற்ற பல்லக்கு ஊர்வலத்தை பார்க்க அக்சித் தனது நண்பருடன் சென்றார். அதிகாலை 5 மணியளவில் டிராக்டரில் பல்லக்கு கொண்டு வரப்பட்டது.

இந்த ஊர்வலத்தில் பங்கேற்று அக்சித் சாமி தரிசனம் செய்தார். அந்த சந்தர்ப்பத்தில் எதிர்பாராதவிதமாக பல்லக்கு சுமந்து வந்த டிராக்டர் அக்சித் மீது மோதியது. இதில், அவர் பலத்தகாயம் அடைந்து உயிருக்கு போராடினார். உடனே அங்கிருந்தவர்கள் அக்சித்தை மீட்டு அருகில் உள்ள ஆஸ்பத் திரியில் அனுமதித்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி அக்சித் இறந்துவிட்டார்.

இதுபற்றி அறிந்ததும் உளிமாவு போக்குவரத்து போலீசார் மற்றும் உயர் போலீஸ் அதிகாரிகள் சம்பவ இடத்தை பார்வை யிட்டு விசாரணை நடத்தினார்கள். அப்போது பல்லக்கு ஊர்வலத்தில் டிராக்டரை டிரைவர் கவனக்குறைவாக ஓட்டியதால் அக்சித் மீது மோதியது தெரியவந்தது.

இதுகுறித்து உளிமாவு போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய டிராக்டர் டிரைவரை தேடிவருகின்றனர். திருமண அழைப்பிதழ் கொடுக்க சென்ற புதுமாப்பிள்ளை பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Source link