தி.மு.க. கூட்டணியில் ஐ.யு.எம்.எல். கட்சிக்கு எத்தனை தொகுதிகள்..?

சென்னை,

கடந்த 2021-ம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில், திமுக கூட்டணியில் இடம் பெற்றிருந்த கட்சிகளில், திமுக 173, காங்கிரஸ் 25, மதிமுக 6, விடுதலை சிறுத்தைகள் கட்சி 6, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு 6, இந்திய கம்யூனிஸ்டு 6, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் 3, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி 3, மனிதநேய மக்கள் கட்சி 2, தமிழக வாழ்வுரிமை கட்சி 1, அகில இந்திய பார்வர்டு பிளாக் 1, ஆதி தமிழர் பேரவை 1 என 234 தொகுதிகளிலும் போட்டியிட்டன.

நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில், தி.மு.க. கூட்டணியில் கடந்த முறை இடம்பெற்றுள்ள கட்சிகள் தொடர்வதுடன் நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யமும் புதிதாக இணைந்துள்ளது. எனவே, கடந்த முறை போலவே இந்த முறையும் கூட்டணி கட்சிகளுக்கு அதே தொகுதிகளை ஒதுக்கவும், மக்கள் நீதி மய்யத்துக்கு 3 தொகுதிகளை கொடுத்துவிட்டு, மீதமுள்ள 170 தொகுதிகளில் தி.மு.க. களம் இறங்கவும் திட்டம் வகுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருந்தது.

ஆனால், தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகள், அதாவது கடந்த முறை 6 தொகுதிகளில் போட்டியிட்ட கட்சிகள் இந்த முறை இரட்டை இலக்க தொகுதிகளை கேட்டு வருகின்றன. தேசிய கட்சியான காங்கிரஸ் 41 தொகுதிகள் உள்பட ஆட்சியிலும் பங்கு கோரி வருகிறது. இதுபோன்ற நெருக்கடியான நிலையில்தான் திமுக கூட்டணியில் இன்று தொகுதி பங்கீடு பேச்சு வார்த்தை தொடங்கி இருக்கிறது.

இந்நிலையில் தி.மு.க.வுடன் தொகுதிப் பங்கீடு குறித்து பேச இந்திய யூனியன் முஸ்லீம் லீக் (ஐ.யு.எம்.எல்), அக்கட்சியின் தேசிய தலைவர் கே.எம். காதர் மொகிதீன் தலைமையிலான குழு, டி.ஆர்.பாலு எம்.பி. தலைமையில் குழுவுடன் பேச்சுவார்த்தை நடத்தியது.

தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைக்கு பின் அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்கள் சந்திப்பில் ஐ.யு.எம்.எல் கட்சியின் தேசிய தலைவர் கே.எம். காதர் மொகிதீன் பேசியதாவது:-

கலைஞர் காலத்தில் எங்களுக்கு 16 தொகுதிகள் வேண்டும் என்று கேட்டோம். 2021 தேர்தலில் எங்கள் கட்சிக்கு 3 தொகுதிகள் ஒதுக்கப்பட்டது. திமுக ஆட்சி நாடு விரும்பும் நல்லாட்சி. 2026 தேர்தலில் திமுகவிடம் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம். 4-வது தருமாறு கேட்டுள்ளோம். கடந்த முறை கொடுத்தது 3 தொகுதி. அதில் ஒரு தொகுதியை குறைக்க கோரினர். குறைந்த பட்சம் 4 தொகுதிகளை கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினோம். திமுக 2 தொகுதிகளை வழங்க முன்வந்துள்ளது.

கடந்த முறை கொடுத்த 3 தொகுதிகளில் வெற்றிபெறவில்லை என்பதை கருத்தில் கொள்ள வேண்டும் என்று திமுகவினர் கூறினர்.

தொகுதி எண்ணிக்கை முக்கியம் அல்ல.. தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்துவோம். கூட்டணிக்கு புதிதாக சேர்ந்துள்ள கட்சிகளுக்கும் இடங்கள் கொடுக்க வேண்டி உள்ளதாக திமுகவினர் தெரிவித்தனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்நிலையில் செய்தியாளர்கள் சந்திப்பிற்கு பின்னர் ஐ.யு.எம்.எல் கட்சியின் தலைவர் கே.எம். காதர் மொகிதீன் மயக்கம் அடைந்து கீழே விழுந்ததால் பரபரப்பு நிலவியது. அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Source link