தி.மு.க. கூட்டணியில் வி.சி.க.வுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு

சென்னை,

தமிழ்நாட்டில் சட்டசபை தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கி விட்டது. ஏப்ரல் 23-ந் தேதி நடைபெறவுள்ள தேர்தலுக்கு வருகிற 30-ந் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்குகிறது.தேர்தல் நெருங்குவதால் ஆளும் தி.மு.க. கூட்டணியில் தொகுதி பங்கீட்டை ஏறக்குறைய முடித்துவிட்டது. ஒரு சில கட்சிகளுடன்தான் பாக்கியுள்ளது.

புதிய கட்சிகள் கூட்டணிக்குள் இணைந்துள்ளதால் தொகுதிகளை குறைத்து கேட்குமாறு தனது கூட்டணி கட்சிகளை தி.மு.க. வலியுறுத்தி வருகிறது.

இந்த நிலையில், வருகிற சட்டசபை தேர்தலில் இரட்டை இலக்கத்தில் தொகுதிகளை கேட்டு பெற வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் பொது வெளியில் பேசி வந்தார். இந்த முறை 10 தொகுதிகளை தி.மு.க.விடம் வி.சி.க. கேட்டு வந்தது. ஆனால் தி.மு.க. கடந்த முறை கொடுக்கப்பட்ட ஆறு தொகுதிகளுடன் கூடுதலாக ஒரு தொகுதியை மட்டும் கொடுக்க முன்வந்ததாக கூறப்படுகிறது.

இதுதொடர்பாக வி.சி.க. ஏற்கனவே முதல்கட்ட பேச்சு வார்த்தையில் தங்களது விருப்பங்களை தெரிவித்திருந்தது. கூட்டணியில் காங்கிரஸ் கட்சியை தவிர மற்ற அனைத்து கட்சிகளுக்கும் குறைவான தொகுதிகளையே தி.மு.க. கொடுத்திருந்தது. ஆனாலும் வி.சி.க. தலைவர் திருமாவளவன் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினை அவரது இல்லத்தில் இரண்டு முறை சந்தித்து தொகுதி பங்கீடு குறித்து பேசி இருந்தார். தொகுதி பங்கீடு குறித்து எந்த விதமான உடன்பாடும் எட்டப்படாத நிலையில் தி.மு.க. மற்றும் வி.சி.க. இடையே இன்று இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது.

இந்நிலையில் தி.மு.க. கூட்டணியில் வி.சி.க.வுக்கு 8 தொகுதிகளை தி.மு.க. தலைமை ஒதுக்கி உள்ளது. இதன்படி தி.மு.க. மற்றும் வி.சி.க. இடையேயான தொகுதி பங்கீடு ஒப்பந்தம் கையெழுத்தானது. வி.சி.க.வுக்கு 8 தொகுதிகளில் 6 தனி தொகுதிகளும் 2 பொது தொகுதிகளும் போட்டியிட ஒப்பந்தம் கையெழுத்தானது. இதன்மூலம் தி.மு.க. கூட்டணியில் அதிக தொகுதிகளை பெற்றதில் காங்கிரஸ் கட்சிக்கு அடுத்தபடியாக இரண்டாவது பெரிய கட்சியாக வி.சி.க. இடம்பெற்றுள்ளது.

கடந்த 2021ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்றிருந்த வி.சி.க.வுக்கு 6 தொகுதிகள் ஒதுக்கப்பட்டிருந்தது. தனிச்சின்னத்தில் போட்டியிட்டு 4 தொகுதிகளில் வி.சி.க. வெற்றி பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

Source link